98
கில்லி மாதிரி நல்ல ஒல்லி அவள்
துள்ளல் நடை. துவளும் ஒற்றை ஜடை இடை
தினம் ஒரு ரோஜா சூடி கலகலச் சிரிப்புடன்
கலக்கலாகவே ஒரு நடை நடப்பாள்
நடையின் அதிர்வில் ரோஜா இதழ்கள் உதிரும்
அவளறியாமல் இதழ்களை பொறுக்கி
புத்தகங்களில் பதியம் வைப்பேன்..
சில இதழ்களை தின்று சுகித்த தினங்களும் உண்டு
நல்ல நிறம் அவள்
அரிசிப் பல்லும், கூர் நாசியும்,
குருவி இதழ்களுமாக தெருவின் புதிய வசீகரம் அவள்
நாகர்கோவிலோ, களியக்காவிளையோ
எதோ ஊர்பேர் சொன்னாள்
ஒன்பதாம் வகுப்பில் அவளும்,
பதினோராம் வகுப்பில் அவனுமாக
வெவ்வேறு பள்ளிகளில் இருந் தோம்.
என் கையெழுத் தின் முதல் ரசிகை அவள்.
எவ்ளோ.. அழகா எழுதறே !.. என வியந்து
அதன் மீது ஒரு முத்தம் கூட வைத்திருக்கிறாள்.
என் இருத்தலில் இருப்புக் கணக்கை
அவள் தான் தன் முத்தத்தினால் திறந்து வைத்தாள்.
அழகான என் கையெழுத்தின்
சித்திரத்தன்மையை உணர்ந்தவளாக
அடிக்கடி எதாவது வரைந்து தரச் சொல்வாள்.
பூவின் பாகங்கள்,
இதயத்தின் குறுக்குவெட்டுத் தோற்றம்,
சிறுநீரகத்தின் படம் வரைந்து பாகம் குறித்தலென
வரைந்து கொண்டிருந்தேன்.
அவளுக்காக இவைகளை வரைந்து வரைந்து
மேற்படி பாகங்களில் எனக்கொரு
ஆசிரியத் தன்மையே வந்து விட்டது
என்னை குருவாக்கினவள் அவள்.
-
நிமோஷினி