சினிமா

அரசுக்கு எதிராக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு வழக்கா? தயாரிப்பாளர் விளக்கம்

70views

ஆந்திர அரசுக்கு எதிராக ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படத் தயாரிப்பு நிறுவனம் வழக்குத் தொடர இருப்பதாக வந்த தகவல் குறித்து அந்த பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பாகுபலி படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கும் படம், ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. அதாவது ‘ஆர் ஆர் ஆர்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் டத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநில அரசு, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை குறைத்தது. சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகப்பட்ச அனுமதி கட்டணமே ரூ.20 முதல் ரூ.30 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெகா பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்,

இந்நிலையில், இந்த டிக்கெட் கட்டணக் குறைப்பை எதிர்த்து ராஜமவுலியின் ‘ஆர் ஆர் ஆர்’ படக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள ஆர்ஆர்ஆர் படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெண்ட் (DVV Entertainment), அப்படியொரு திட்டம் ஏதுமில்லை என்று கூறியுள்ளது.

‘டிக்கெட் கட்டணக் குறைப்பால், ஆர் ஆர் ஆர் போன்ற மெகா பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பு என்பது உண்மைதான். ஆனால், அதற்காக வழக்கு ஏதும் தொடுக்கப் போவதில்லை. இதுகுறித்து ஆந்திர முதலமைச்சரை சந்தித்து எங்கள் நிலைமையை விளக்கி சுமூகமாக தீர்வு காண இருக்கிறோம்’ என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!