கவிதை

இளைஞனே… சிந்தி!

121views
திரையினில் ஆடும் நடிகனின் காலில்
தீபங்கள் காட்டுகிறாய்! – ஒரு
திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித்
தெய்வமாய்ப் போற்றுகிறாய்!
மரவடி வான மாபெரும் உருவில்
பாலினை ஊற்றுகிறாய்! – அட!
மடையனே! ஏன்-நீ பெற்றவர் தம்மைச்
சோறின்றி வாட்டுகிறாய்!
புதுப்படம் வந்தால் முதன்முதல் நாளே
புயலெனப் பாய்கின்றாய்! – உள்ள
பொறுப்பினை மறந்து, பிழைப்பினைத் துறந்து
வெயிலினில் காய்கின்றாய்!
மதிப்பிட முடியாப் பொழுதினைக் கொன்று
மகிழ்ச்சியைத் தேடுகின்றாய்! – பெரும்
மதுக்குளம் விழுந்த மதக்கரி போலே
மதிகெட்டு ஆடுகின்றாய்!
செக்கினை இழுத்து, மக்கியே மடிந்த
தியாகிகள் மறந்துவிட்டாய்! – கொடுஞ்
சிறுமைகள் பட்டுத் தெருவினில் செத்த
தெய்வங்கள் மறந்துவிட்டாய்!
அக்கினி ஆற்றில் சிக்கியே சிதைந்த
மக்களை மறந்துவிட்டாய்! – அற்பப்
புற்களை யன்றோ போதனை மரமாய்ப்
பூசைகள் செய்துகெட்டாய்!
உலையினில் கொதிக்கும்-உன் ஒருசிறு மணியும்-அத்
தலைவனின் உழைப்பில்லை – உன்
உடல்நலிந் தாலும், உயிர்பிரிந் தாலும்
அவனுக்கு இழப்பில்லை
வலையினில் விழுந்து, நிலையினை மறந்து
வாழ்க்கையைத் தொலைக்காதே! – உன்
வளர்ச்சியில் தானே நிமிரும்-இத் தேசம்
கனவினைக் கலைக்காதே!
  • ஆறு செல்வன்

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!