டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் வார்னர் வந்த வேகத்தில் வெளியேற அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 49 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் மிக வேகமாக அரை சதம் கடந்தார். மறுமுனையில் டேவிட் மலன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜாஸ் பட்லருடன், பேர்ஸ்டோ இணைந்து அதிரடி காட்ட, இங்கிலாந்து அணி 50 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.