796views
மரங்கள் முதுமைகண்டால் பெருமையன்றோ,
மலைகளின் முதுமையென்றும் உயரமன்றோ,
மனிதன்மட்டும் முதுமைகண்டு துயரமேனோ,
இயற்கையிலே இதுவுமொரு பருவம்தானோ.
குழந்தையாய் மாறிவிட மனம்துடிக்கும்,
மழலைபோல் பொக்கைவாயால் அதுசிரிக்கும்,
கடந்துவந்த பாதைகளை இசைவோடும்,
கண்டோரிடம் தினம்தினம் அசைபோடும்.
உருண்டோடிய காலங்களின் பரிமாற்றம்,
கைரேகைகள் உடற்முழுக்க இடமாற்றம்,
நரம்புமண்டல அறிவியலை அதுகாட்டும்,
தொட்டணைத்து பாசவழி சுருதிகூட்டும்.
பிள்ளைகளின் அரவணைப்பை எதிர்நோக்கும்,
மற்றதெல்லாம் துச்சமென மனம்பார்க்கும்,
ஆறுதலாய் நாலுவார்த்தை பேசிவிட்டால்,
அகிலத்தையே ஆள்வதுபோல் குதூகலிக்கும்.
இன்றிருக்கும் இளையோரே உணர்ந்திடுவீர்,
பொறுப்புணர்ந்து முதியோரை வணங்கிடுவீர்,
முகம்சுளித்து அவரிடமே பகைகொண்டால்,
இறையருளும் விலகிடுமே உமைக்கண்டால்.
-
ரமணிராஜன், சென்னை
add a comment