சமையல்

மீன் குழம்பின் மலரும் நினைவுகள்

180views

இப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் கறிக்குழம்பு, மீன் குழம்பு, பிரியாணி என் சாப்பிடுகிறோம்.
அதுவும் இந்த சிக்கன் அப்பப்பா…. திரும்பிய பக்கமெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், சிக்கன் வாசனையும்
தான். முப்பது வருடங்களுக்கு முன்புவரை சிக்கன், பரோட்டா, பிரியாணி இவையெல்லாம் என்னவென்றே
தெரியாது என்று சொன்னால் இந்த தலைமுறை பிள்ளைகள் நம்புவார்களா…..

தமிழ் நாட்டுக்கு வந்தால் அத்தை வீட்டிலும், பாட்டி வீட்டிலும் வளர்க்கும் கோழிகளில் ஒன்றை பிடித்து
அடித்து, அம்மியில் மாங்கு மாங்கென்று மசாலா அரைத்து விறகடுப்பில் தளதளவென்று கோழிக்குழம்பை
கொதிக்கவிட்டு, தலைவாழை இலையில் மணக்க மணக்க-சுடச்சுட பரிமாறுவார்களே..அப்படி ஒரு மணமும்,
சுவையும் இருக்கும் அந்த குழம்பில். அதை சாப்பிட ஆர்வமும், பரபரப்பும் இருக்கும்.

ஆளுக்கு அளவாக பரிமாறப்பட்ட அந்த அரைத்து விட்ட குழம்பின் ருசி இன்றைய மிக்ஸி மசாலாக்களிலும்
இல்லை. கோழியிலும் இல்லை என்பதே நிதர்சனம். இதுவும் பழகி விட்டது என்பதே உண்மை.

என்னுடைய சிறுவயதில் சிக்கன், பிரியாணி, பரோட்டா இந்த பெயர்களை எல்லாம் நான் கேள்விப்பட்டது கூட
கிடையாது. மாதத்தில் ஒருநாள் ஆட்டுக்கறி வாங்கி வந்து அம்மா வதக்கிக் கொடுக்க நாங்க உரலில் அரைத்து
கொடுக்கும் மசாலாவில் (அம்மியில் அரைத்தால் நான் பாதியை கீழே சிந்திவிடுவேன் என்று அம்மா உரலில்
அரைக்க சொல்வாங்க) வைக்கும் மணமணக்கும் குழம்பு மதியம் சுடு சாதத்துக்கு அவ்வளவு அருமையான
ருசியில் இருக்கும்.

சோம்பு, ஏலம், பட்டை, முழுமல்லி, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, மிளகு வதக்கியது இவை முதல்
கட்டமாகவும், தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா இவை இரண்டாம் கட்டமாகவும் அரைப்போம். மீதி குழம்பு
இரவு சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாக அடித்து பிடித்து காலியாகும்

அப்புறம் அப்பா காலையில் வேலை விட்டு வரும் போதே பத்தாம் தேதி சம்பளத்தை அடுத்த ஒரு
ஞாயிற்றுக்கிழமையில் வஞ்சிரம் அல்லது பாப்லேட் (வவ்வா மீன்) மீனுடன் மார்க்கெட்டில் சீசனுக்கு ஏற்ப
கிடைக்கும் மல்லாட்டை, வள்ளிக்கிழங்கு, பைத்தங்காய் என ஏதாவது வாங்கி வருவார். அம்மா அதை இட்லி
குண்டானில் வேகவைத்து தட்டில் பங்கு வைத்து காலையில் டிஃபனுக்கு பதிலாக கொடுத்துடுவாங்க.
(அப்போதெல்லாம் குக்கர் கிடையாது) அந்த பங்கை அண்ணன் கையில் சிக்காமல் பாதுகாத்து சாப்பிடுவதே
பெருங்கலையும், சாமர்த்தியமும். அக்கா கேட்க மாட்டாங்க.

மதியம் மீன் குழம்பு, வறுவலுக்காக பன்னிரண்டு மணிக்கே பசி எடுத்து விடும். நொடிக்கு ஒருமுறை நாங்க
கிச்சனை எட்டிப் பார்ப்போம். எங்களோடு சில சமயங்களில் சித்தப்பாவும் எங்க கூட்டணியில் இடம் பெறுவாங்க.
சுடச்சுட அவரவர் தட்டில் விழும் அந்த மீன் வறுவலும், கூடவே முள் குத்திக்க போகுது…. பார்த்து சாப்பிடு
என்கிற அம்மாவின் கனிவான குரலும்… பெரும்பாலும் குழம்புக்கு வாளை மீன்தான். அதில் முள் அதிகம்.

அடிக்கடி முள் தொண்டையில் மாட்டிக் கொள்வதும் சுடச்சுட வெறும் சாதத்தை அம்மா உருட்டி எங்க வாயில்
திணித்து விழுங்க வைத்து முள்ளை உள்ளே தள்ளுவதும் ஹைடெக் டெக்னிக். அதற்குள் கண்களிலிருந்து
அனிச்சையாக கண்ணீர் கொட்டும். ஆனாலும் அந்த முள் வாளையின் ருசி விடாமல் மீண்டும் மீண்டும் சாப்பிட
தூண்டும். இப்போதெல்லாம் முள் வாளை மீன் இனமே அழிந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை. இங்கு
புதுவையில் கிடைப்பதே இல்லை

மலரும் நினைவுகள் அழகுதான்….

அன்புடன் வனஜா செல்வராஜ், புதுச்சேரி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!