பொதுமக்கள் பயன்படுத்தும் பால், தயிர், மோர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி தொடர்பாக மக்களவையில் திங்கட்கிழமை திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழில் பதிலளித்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிர்ணயித்த வரியை விட அதிக வரிச்சுமையை மக்கள் மீது திணித்தது திமுக அரசுதான் என்று குற்றம்சாட்டினார்.
அவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி எம்பிக்கள் ஆட்சேபம் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். என்ன நடந்தது?
மக்களவையில் விலைவாசி உயர்வு தொடர்பாக அவை விதி 193இன் கீழ் நடந்த விவாதத்தில் உறுப்பினர்கள் பதிவு செய்த கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் அவருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் விவரம்:
நிர்மலா சீதாராமன் பேசும்போது, “உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா தற்போதுள்ள நிலையில் இருப்பதற்கு மக்கள்தான் ஒரே காரணம். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இன்றும் நாம்தான் வேகமாக வளரும் பொருளாதாரம். இதை உலக வங்கி போன்ற பெரிய அமைப்புகள் கூறியுள்ளன,” என்று தெரிவித்தார்.
“இன்றைய விவாதத்தில் பங்கெடுத்தவர்கள் தரவுகள் அடிப்படையில் விவாதத்தில் கருத்துக்களை பதிவு செய்யாமல் அரசியல் சார்ந்த கருத்துக்களையே பதிவு செய்தனர்.”
“ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும் எல்லா முடிவுகளும் ஜிஎஸ்டி குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பு மாநிலங்களால் எடுக்கப்படுகின்றன. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் மாநிலங்களுக்கும் ஒரு பங்கு வாக்களிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் உள்ளது. ஒருமித்த கருத்து அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப்படும்,” என்று நிர்மலா கூறினார்.
முன்னதாக, விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி பென்சில் விலை உயர்ந்தது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து பேசினார்.
அதற்கு பதிலளித்த நிர்மலா, “பென்சில் விலையில் எந்த மாற்றமும் கிடையாது என்று கூறினார். ஒரு சிறுமி பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் எழுதுகிறார். நாட்டின் பிரதமருக்கு தன் மனதில் உள்ளதை எழுதினால் அது அவரை சென்றடையும். பிறகு அவர் ஏதாவது செய்வார் என்ற எண்ணத்தில் எழுதுகிறார்,” என்று தெரிவித்தார்.
அப்போது கனிமொழி எழுந்து சில கேள்விகளை எழுப்பினார்.
அதுவரை இந்தி, ஆங்கிலத்திலேயே பேசி வந்த நிர்மலா சீதாராமன், மிகவும் ஆர்வத்துடன் கனிமொழி சில பிரச்னைகளை எழுப்புகிறார். அதனால் கண்டிப்பாக நான் அவருக்கு தமிழிலேயே பதில் அளிக்கப் போகிறேன் என்று கூறி தமிழிலேயே விளக்கத்தைத் தொடர்ந்தார்.
“2021, நவம்பர் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான வரியை ரூ. 5, டீசல் மீதான வரி ரூ. 10 என்ற வகையில் மோதி குறைத்தார். அதேபோல, 2022, மே மாதம் மத்திய அரசு திரும்பவும் பெட்ரோல் மீதான வரியை ரூ. 9.50 காசுகளும் டீசல் மீது ரூ. 7 என்ற வகையிலும் விலை குறைக்கப்பட்டது. எல்பிஜி உஜ்வாலா வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 மானியம் தருவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன்பு திமுக அதன் தேர்தல் அறிக்கையில் தேர்தலில் நாங்கள் வென்று ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5, டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4 குறைப்போம் என்றனர். அதைத் தவிர, மாநில அரசு எல்பிஜி மானியம் ரூ. 100 தருவோம் என்று கூறியது,” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே திமுக உறுப்பினர்கள் இடைமறித்து, “கருப்புப் பணத்தை திருப்பிக் கொண்டு வருவோம் என நீங்கள் கூட சொன்னீர்கள். அந்த கருப்புப்பணம் எங்கே?” என்று கேட்டனர்.
இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனாலும், தமது உரையை தமிழிலேயே நிர்மலா சீதாராமன் தொடர்ந்தார்.
திமுக உறுப்பினர்கள் கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் நிர்மலா சீதாராமனின் உரைக்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன், “நீங்கள் பேசும்போது நான் அமைதியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். பிறகு நான் பேசும்போது நீங்கள் ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். நான் பேசுவதை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்,” என்று கூறினார்.
அவரை சமாதானப்படுத்த சபாநாயகர் ஓம் பிர்லா முயன்றார்.
ஆனால், தமது பேச்சுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்கட்சியினர் செயல்படுவதாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
அவையில் உங்களுக்கு எப்படி பேசுவதென்றே தெரியவில்லை என்று திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினர். ஒரு சில உறுப்பினர்கள் நீங்கள் அடாவடித்தனமாக நடந்து கொள்கிறீர்கள் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அவர்கள் வெளிநடப்பு செய்த பிறகும் தமது உரையை தமிழிலேயே தொடர்ந்த நிர்மலா சீதாராமன், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை ஒருமுறை அல்ல இரண்டு முறை குறைத்து விட்டது. ஆனால், உங்களுடைய அரசாங்கம் (திமுக அரசு) மாநிலத்தில் ஏன் விலையைக் குறைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை மாநிலத்தில் உள்ள திமுக அமைச்சரிடம் (பிடிஆர் தியாகராஜன்) செய்தியாளர்கள் கேட்டபோது “நாங்கள் தேதியையா சொன்னோம். சொன்னோம் அவ்வளவுதான்,” என்று பதிலளித்தார். ஆனால் எதிர்கட்சியினர் என்னைப் பார்த்து அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக கூறுகிறார்கள்.
மத்திய அரசு விலையை குறைக்கும். ஆனால், நாங்கள் குறைக்க மாட்டோம் என்று கூறி முதலைக்கண்ணீர் வடிக்கும் கதை இது. மேலும், பேரவையில் அவர்கள் பேசும்போது டீசல் விலையை குறைக்கலாம்தான். ஆனால், அதை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள் என்ற தரவு எங்களிடம் இல்லை என்று அவர்கள் கூறினர்.
நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளை கலந்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திமுக எம்பிக்களுக்காக நீங்கள் பதிலளிப்பதாக இருந்தால் அவர்களுடைய மாநில மொழியிலேயே தெரிவியுங்கள் என்று அனுமதி அளித்தார்.
பால் விலையை அதிகரித்து விட்டீர்கள் என்று திமுக தலைவர்கள் கூறினர். ஆனால், நாங்கள் மிகத் தெளிவாக கூறியிருக்கிறோம். பிராண்ட்டட் பால் வகை மீதான வரியைத்தான் கூட்டினோமே தவிர சாதாரண கறந்த பாலுக்கோ லூஸ் ஆக வாங்கும் பாலுக்கோ எவ்வித வரியும் விதிக்கப்படவில்லை.
ஜிஎஸ்டி கவுன்சிலில் உங்களுடைய அமைச்சரும்தான் இருக்கிறார். அதில்தான் பிராண்ட்டட் ஐட்டங்கள் மீது மட்டும்தான் வரி போட வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது. அதை உயர்த்தியது நானோ மோதியோ கிடையாது.
ஒரு கிலோ தயிர் வாங்கினால் அதற்கு முன்பிருந்த பழைய விலை ரூ. 100. அதற்கு மேல் வரி போட்ட பிறகு அது ரூ. 105 ஆகும். ஆனால், நீங்கள் என்ன விலைக்கு விற்கிறீர்கள்? ரூ. 120க்கு விற்கிறீர்கள். ஜிஎஸ்டி கவுன்சில் ஐந்து சதவீதம்தான் வரி விதிக்கச்சொல்லியது. ஆனால், நீங்கள் போட்ட விலை என்ன?
இனிப்பாக இருக்கக் கூடிய மோர் அல்லது லஸ்ஸி மீது ஐந்து சதவீத வரி போட்ட பிறகு அது ரூ. 28.35 காசுகளாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ. 30க்கு விற்கிறீர்கள். ஜிஎஸ்டி மீது பழி போட்டு விட்டு நீங்கள் மக்களிடம் அதிக விலைக்கு விற்கிறீர்கள், பாரத்தை சுமத்துகிறீர்கள்.
அதுபோலவே, ரூ. 10க்கு விற்க வேண்டிய மோர் மீது ஐந்து சதவீத வரி விதிக்கப்பட்டால் அது ரூ. 10.50 காசுகளாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ரூ. 12க்கு விற்கிறீர்கள். இது எப்படி நியாயமாகும்?
விலையை உயர்த்தியதற்காக ஜிஎஸ்டியை காரணம் காட்டும் நீங்கள், பழியை ஜிஎஸ்டி கவுன்சில் மீது போட்டு விட்டு அதிக விலைக்கு பொருட்களை விதிக்கிறீர்கள். ஆனால், ஜிஎஸ்டி என்பது மத்திய அரசாங்கம் கிடையாது. அதில் அங்கமாக இருப்பது உங்களுடைய அமைச்சரும்தான். அவரும்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஏகமனதாக எல்லோரும் ஒருமித்த அடிப்படையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. அதில் ஏழைகளை பாதிக்கக் கூடிய வகையில் எதுவும் செய்யவில்லை என்று நிர்மலா சீதாராமன் பேசினார். மாறாக நீங்கள்தான் ஜிஎஸ்டி நிர்ணயித்த வரியை விட அதிக வரியை போட்டிருக்கிறீர்கள்.
தகனம், இறுதிச் சடங்கு, அடக்கம் அல்லது சவக்கிடங்கு சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்று கூறியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
முன்னதாக, ஜிஎஸ்டி வசூல் தொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் மேக்ரோ தரவுகளை மேற்கோள்காட்டிப் பேசினார் நிர்மலா சீதாராமன்.
இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடைந்து வருவதாகக் கூறிய அவர், ஜிஎஸ்டி வசூல் மற்றும் பிஎம்ஐ குறியீடு, இந்திய பொருளாதாரம் மேலும் வலுவடைந்து வருவதைக் குறிக்கிறது என்றார்.
கடந்த ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 28 சதவீதம் உயர்ந்து இரண்டாவது அதிகபட்சமான ரூ.1.49 லட்சம் கோடியைத் தொட்டது என்றும் 2017, ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் ரூ. 1.68 லட்சம் கோடியை எட்டியது என்றும் கூறினார்.
தகனம், இறுதிச் சடங்கு, அடக்கம் அல்லது சவக்கிடங்கு சேவைகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். இவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுடுகாடு கட்டுமானம் மீது நிலையான ஜிஎஸ்டி விகிதங்கள் விதிக்கப்படும். 2022ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டம்வரை மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜூன் மாத நிலுவைத் தொகை மட்டுமே நிலுவையில் உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.