இந்தியா

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சாலை மற்றும் ரயில் தட வசதியுடன் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

70views
அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, ஏற்கனவே உள்ள சராய்காத் மேம்பாலத்திற்கு அருகிலேயே, சாலை மற்றும் ரயில் தட வசதியுடன் கூடிய புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
புதிய மேம்பால திட்டத்தை ரூ.996.75 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் ரயில்வே துறை இணைந்து இந்த செலவை ஏற்றுக் கொள்ள இருக்கின்றன.இதுகுறித்து ட்விட்டரில் அடுத்தடுத்து தொடர்ச்சியான பதிவுகளை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். அவரது பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர்மட்ட பால அமைப்பு அமைப்பதற்காக மட்டும் ரூ.322 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை முழுமையாக கட்டமைக்க இருக்கிறது. இது மட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியின் உள்கட்டுமான திட்ட தன்னிநிறைவு என்ற இலக்கின் அடிப்படையில், பிரம்மபுத்திரா நதியில் ஏற்கனவே உள்ள சராய்கத் பாலத்திற்கு அருகிலேயே ரூ.996.75 கோடி செலவில், சாலை மற்றும் தண்டவாளத்துடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் வடக்கு கரை பகுதியில் உள்ள மக்களையும், தெற்கு கரையில் உள்ள மக்களையும் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் அமையும். அதாவது, பிற பகுதிகளுடன் கவுஹாத்தி பகுதியை இணைக்கும் வகையில் அமையும்.
இந்த மேம்பாலம் கட்டி முடித்து திறக்கப்பட்டால், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே தடையற்ற போக்குவரத்து சேவை கிடைக்கும். இதனால், தற்போதுள்ள போக்குவரத்து நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது” என்று கட்கரி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பிராந்திய பகுதிகள் போதிய வசதிகள் இன்றி பின்தங்கிய பகுதிகளாக இருந்து வரும் நிலையில், அவற்றை மேம்படுத்தும் விதமாக உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
வடகிழக்குப் பிராந்திய பகுதிகளை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும் வகையில் ஒரு வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கு இந்திய ரயில்வே துறை வெகு நாட்களாகவே முயற்சித்து வருகிறது. அந்த வகையில் வடக்கிழக்கு மாநிலங்களில் தலைநகரங்கள் ஒவ்வொன்றையும், நாட்டின் தலைநகரான டெல்லியுடன் இணைக்கும் வகையிலான போக்குவரத்து வசதிகளை 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறையின் இணையமைச்சர் ராசாஹேப் பாட்டில் தான்வே சில மாதங்களுக்கு முன்பாக கூறுகையில், “வடகிழக்கு மாநில தலைநகர்களை டெல்லியுடன் இணைக்கும் வகையில் ரயில்தடம் அமைக்கும் திட்டத்தில் 60 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள 40 சதவீதப் பணிகளை 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வோம்” என்று கூறியிருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!