164views
சிரஞ்சீவியம்
என் கல்லறையில் வந்துநின்று
கண்ணீர் வடிக்காதே
கல்லறைக்குள் நானில்லை
நான் மீளாத்துயில் கொள்ளவில்லை.
வெளியாயிரம் கொண்டு
வீசிவரும் காற்றுநான்;
பனிப்பரப்பில் வயிரமணிப்
பட்டொளியாய் ஜொலிப்பது நான்;
முற்றிய தானியத்துப்
பொலிவின் கதிரொளி நான்;
கார்காலப் பூமழைநான்
நீ கண்விழிக்கும் விடியலிலே
வட்டமிட்டு வானில்
பறந்தேகும் புள்ளினம் நான்;
இரவு வானில் இழைந்து மினுங்குகிற
தாரகை நான்;
மகளே என் கல்லறையில்
அழுது புலம்பாதே;
கல்லறைக்குள் நானில்லை
மரணம் எனக்கில்லை.
-
மேரி எலிசபெத் ஃபிரை
தமிழில்: நவஜீவன்
மலர்களின் செய்தி
ஆறுவழிச்சாலை
எட்டுவழிச் சாலையெல்லாம்
ஆகக்கடைசியிலோர்
ஒருவழிச்சாலையில் போய் முடிகின்றன.
எந்த ஊருக்கும் போகாத சாலைதான்
இறுதியில்
எல்லோரும் போகும் சாலை.
நடந்து செல்கிறவர்க்கும்
பறந்து செல்கிறவர்க்கும்
பயணநேரம் ஒன்றுதான்
கோடிகளில் புரண்டவரும் ஊர்க்
கோடியிலே உழன்றவரும்
கோடித்துணியாக ஒரு
காடாத்துணியுடன்
விடைபெறுகிறார்கள்
தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு
தரையிறங்க மறுக்கும் குழந்தை போலின்றி
மூடுபனி போர்த்த பள்ளத்தாக்கில்
மயிலிறகுபோல்
சரிந்திறங்கும் மனது வேண்டும்
இது
ஓசையின்றிப் பூத்து
அரவமின்றி உதிர்கின்ற
மலர்களிடம் கற்ற பாடம்.
-
நவஜீவன்
Vivek,… it’s really captivating.The translation is vivid with a placid flow.keep writing, translating and…… immediately publish.a collection