Ahn Cheol-soo, presidential candidate of the People's Party, speaks during a news conference at the Seoul Foreign Correspondents' Club in Seoul, South Korea, on Friday, Jan. 28, 2022. South Korean presidential election is scheduled for March 9. Photographer: SeongJoon Cho/Bloomberg
உலகம்

தென்கொரியாவின் புதிய அதிபரானார் யூன் சுக் யூல்

112views

புதிய அதிபராக யூன் சுக் யூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் தென்கொரியாவில் ஏதேனும் மாற்றம் வராதா என்று மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கையில், ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தல், தற்போது நடந்து முடிந்துள்ளது. தென்கொரியா தேர்தல் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொரியா, போரின் முடிவில் ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்தபோது, கொரியாவும் அமெரிக்கா வசம் சென்றது. அப்போது கொரியாவிற்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்த அமெரிக்கா, அவர்கள் தன்னாட்சியை நிறுவும் வரையில் வடகொரியாவை சோவியத் மற்றும் சீனாவும், தென் கொரியாவை அமெரிக்காவும் பார்த்துக் கொள்ளவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், இரு பிரதேசங்களும் வெவ்வேறு சித்தாந்தம் மற்றும் கருத்துகளை கொண்டிருந்ததால், இரண்டையும் இணைப்பது என்பது கடுமையான பணியாக இருந்தது. பின்னர் 1948-ல் இரு கட்சிகள் கொரியாவில் உருவெடுத்தன. ஒன்று, கம்யூனிச கருத்துகளைக் கொண்ட Democratic People’s Republic of Korea, மற்றொன்று அமெரிக்க சித்தாந்தத்தை ஆதரிக்கும் First Republic of Korea. அதன் பின்னர், தேர்தல் நடந்ததில் First Republic of Korea வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, சோவியத் வடகொரியாவிலிருந்து விலகியது. சிங்கமன் ரீ ( Syngman Rhee) முதல் கொரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வடகொரியாவிலிருந்து சோவியத் தன்னை விலக்கிக் கொண்டாலும், தென்கொரியாவிலிருந்து அமெரிக்கா முழுமையாக விலகிக்கொள்ளவில்லை. மேலும் அப்போதைய கொரிய அதிபர் ரீ அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டும் இருந்தது. ரீ ஒரு சர்வாதிகார ஆட்சியை கொரியாவில் நிறுவ நினைத்தார். அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுவோருக்கு தண்டனைகள் கடுமையாக இருந்தன.

ஆரம்பத்திலிருந்தே தனி நாடு கேட்ட வடகொரிய மக்கள், அப்போது ரீ யின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்து, தென் கொரியாவை நோக்கி ஜூன் 25, 1950 அன்று படையெடுத்தனர். வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையேயான முதல் கொரிய போர் ஆரம்பமானது. மூன்று ஆண்டுகள் நடந்த இந்தப் போரில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். 1953-ல் ஐநா-வின் தலையீட்டால் போர் நிறுத்தப்பட்டு, ஜூலை 27-ம் தேதி ஐநா-விற்கும் கொரியாவிற்குமான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதில் கொரியா, வடகொரியா, தென் கொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே 4 கிலோமீட்டர் அகலம் கொண்ட Demilitarized Zone (ராணுவம் நீக்கப்பட்ட இடம்) இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர், தென்கொரியாவில் தொடர்ந்து மிலிட்டரி அரசாங்கம், மக்கள் அரசாங்கம் என்று கொரிய அரசியல் மாற்றி மாற்றி கொரியாவை ஆட்டிவைத்தது. மீண்டும் சிங்க்மன் ரீ தென்கொரிய அதிபரானார். ஆனால் தொடர்ந்து சர்வாதிகார போக்கை கடைபிடித்து வந்த ரீ யின் அரசு, 1960-ல் மாணவர்களின் புரட்சியால் வீழ்ந்தது. முதல் ரிபப்ளிக் வீழ்ந்து, இரண்டாம் ரிபப்ளிக் உதயமானது. இரண்டாம் ரிபப்ளிக் கொரிய மக்களுக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்தது. ஆனால் அதுவுமே ஒரு வருடத்தில் மிலிட்டரி அரசால் களைத்தெரியப்பட்டது. அதன்பின் மூன்று, நான்கு, ஐந்தாம் ரிபப்ளிக் வரை தென்கொரியாவில் மிலிட்டரி அரசாங்கமே தொடர்ந்தது. 6-வது ரிபப்ளிகில் (1988 -தற்போது வரை) தான் கொரியா மீண்டும் சுதந்திர மக்களாட்சியை சந்தித்தது. அந்த காலத்தில் தான் தென்கொரியாவின் தலைநகரம் சியோலில் ஒலிம்பிக் போட்டிகள் அரங்கேறின. பின்னர் 1990-ல் இரு கொரியாவிற்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 1991-ல் இரு கொரியாவுமே ஐ.நா வில் உறுப்பினராக சேர்ந்தன.

கொரியா OECD என்று சொல்லப்படும் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்தது. ஆனால் அதே ஆட்சி காலத்தில் பல்வேறு இயற்கை சீற்றங்களை சந்தித்த தென்கொரியா, 1997-ல் பயங்கர பொருளாதார சரிவைச் சந்தித்தது. இதனால் அடுத்த தேர்தலில் அப்போதைய அதிபரான கிம் யங்க் ( Kim Young) எதிர்க்கட்சியிடம் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் தென் கொரிய அதிபராக பொறுப்பேற்ற கிம் டே வின் காலத்தில் பல மாற்றங்கள் அங்கு நடந்தேறின. கொரிய போரில் குடும்பங்களை வடகொரியாவிலும், தென்கொரியாவிலும் தொலைத்த குடும்பங்களை மீண்டும் ஒன்று சேர்த்தார். இதனால் இவருக்கு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரை ஆசியாவின் நெல்சன் மண்டேலா என்றும் அழைத்தனர். 20-ம் நூற்றாண்டில் உலகிலேயே மிகவும் ஏழை நாடாக இருந்த தென் கொரியா, 21-ம் நூற்றாண்டில் மிகப்பெரிய பணக்கார நாடாக மாறியது. வளர்ந்து வரும் ஆசிய நாடுகளான நான்கு புலிகளில் ( four tigers) சிங்கப்பூர், ஹாங்காங், தைவானுடன் சேர்ந்து தென்கொரியாவும் இடம்பிடித்தது.

1987-ல் தற்போதைய தென்கொரிய தேர்தல் முறை வடிவமைக்கப்பட்டது. அதன்படி 5 வருடங்களுக்கு மேலாக ஒருவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனால் இம்முறை இந்த தேர்தலில் மக்களாட்சி கட்சியின் சார்பாக லீ ஜே மியூங் ( Lee jae myong) மற்றும் மக்கள் அதிகார கட்சியின் ( People’s Power Party) சார்பாக யூன் சுக் யூல் (Yoon Suk Yeol) ஆகியோர் போட்டியிட்டனர். மார்ச் 9-ம் தேதியன்று தேர்தல் நடந்து முடிந்து, மார்ச் 10-ம் தேதி முடிவுகள் வெளியானது. அதில் யூன் பெருவாரியாக வெற்றி பெற்று, வரும் மே மாதம் 10-ம் தேதி அன்று தென்கொரிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.

தென் கொரியாவில் மொத்தம் இரண்டு முக்கிய தேர்தல்கள் உண்டு. ஒன்று அதிபருக்கான தேர்தல், மற்றொன்று பாரளுமன்ற தேர்தல். அதிபர் தேர்தல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும், பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறையும் நிகழும். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 2020-ல் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் முந்தைய ஆளுங்கட்சியான மக்களாட்சி கட்சியே வெற்றி பெற்றது. 300 இடங்களில் மொத்தம் 180 இடங்களில் வெற்றபெற்றது மூன் தலைமையிலான அரசு.

மக்களாட்சி கட்சியின் சார்பாக பங்கேற்ற லீ ஒரு முன்னாள் ஆளுநர் ஆவார். தென்கொரியா தலைநகரம் சியோலை சுற்றி உள்ள இடங்களை அவர் தான் நிர்வகித்து வந்தார். மக்கள் அதிகார கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும், வெற்றியாளருமான யூன், ஒரு முன்னாள் அரசு வழக்கறிஞர் ஆவார். பல காலமாக கட்சி வேறுபாடின்றி அரசு வழக்கறிஞராக பணியாற்றிய இவர், கடந்த வருடம் தான் அரசியலில் இறங்கினார்.

தென்கொரிய தேர்தலுமே கிட்டத்தட்ட இந்தியத் தேர்தலை போன்றது தான். பெரும்பான்மை இடங்களை யார் கைபற்றுகிறார்களோ, அவர்களே அதிபராக பொறுப்பேற்பர். 52 மில்லியன் மக்கள் வசிக்கும் தென்கொரியாவில் 44 மில்லியன் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கும் உரிமம் உடையவர்கள்.

கோவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட தென்கொரியாவில் கடந்த ஆண்டு மக்கள்தொகை சதவிகிதத்தில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமானது. ஏராளமான மக்கள், தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டனர். இது தவிர வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நல்உறவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தென்கொரியா தான். அதே சமயம் சீனாவுடனான தனது வர்த்தக உறவும், அமெரிக்காவுடனான தனது நீண்ட கால நட்பும் முறிந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படி ஏகப்பட்ட சவால்கள் அதிபராக பொறுப்பேற்கவுள்ள யூன் சுக் யூல்-க்கு இருக்கிறது. ஆனால், தற்போது அதிபராக பொறுப்பேற்கவுள்ள யூன் முந்தைய அதிபரான மூனை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டவர்.

வெறும் 1% ஓட்டு வித்தியாசத்தில் லீ யை தோற்கடித்த 61 வயதான யூன், முந்தைய அதிபர் மூன் ஆட்சியில் அரசு வழக்கறிஞராக வேலை பார்த்தார் (2019 – 2021). இதற்குமுன்பு தென்கொரிய அதிபராக இருந்த பார்க் க்யூன் (2013-2017) ஊழல் விவகாரம் தொடர்பாக பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான உழலை வெளியில் கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் தான் யூன். அரசு வாழ்க்கையில் இருந்து அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் தாமதமாக களம் கண்டபோதிலும், தன்னுடைய தேர்தல் உத்திகள் மூலம் மக்களை வசிகரித்து, வாக்குகளை அறுவடை செய்தார் யூன். இவரை முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் ஒப்பிடுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பிரசாரத்தில் அவரது கருத்துகளும் சரி, அவரது பேச்சும் சரி, எல்லாமே ட்ரம்பை ஒத்திருந்தது. தீவிரமான மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தென்கொரிய மக்கள், சரியான அதிபரை தான் தேரந்தெடுத்துள்ளார்கள் என்கிறார்கள்.

தேர்தல் பிரசாரத்தில் வடகொரியா விவகாரம் குறித்து யூன் தெரவிக்கையில், “வடகொரியா நம் மீது தாக்குதல் நடத்தினால் கண்டிப்பாக மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து எதிர் தாக்குதல் நடத்த ஒருபோதும் தென்கொரியா தயங்காது” என்று கூறினார். மேலும் அமெரிக்காவுடனான நட்பை பலப்படுத்தி தென்கொரியாவின் வர்த்தக உறவையும் அமெரிக்காவுடன் பலப்படுத்த போவதாய் அறிவித்தார். இவரின் இந்த முடிவால் சீனா – வடகொரியா இடையேயான உறவு முறிவதற்கு கூட வாய்ப்புள்ளது. அதேபோல, தேர்தல் பிரசாரத்தின் போது யூன் பேசியது அவருக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது.

குறிப்பாக, முன்னாள் அதிபர் சர்வாதிகாரியான சூன் டூ ஹவானை ஆதரித்து பேசியது என்று கூறலாம். மக்களாட்சிக்கு ஆதரவாகப் போராடிய மக்களை சூன் 1980-ல் தன் ராணுவ ஆட்சி மூலம் கொன்று குவித்தார். இதற்காக அவர், தான் உயிர் துறக்கும் வேளையிலும் ஒரு சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை. இவரை யூன் ஒரு சிறந்த அரசியல்வாதி எனக் கூற, அடுத்த நாளே அது கொரியன் ஹெரால்டு செய்தித்தாளில் முதல் பக்கத்தில் வந்தது. பின்னர் அதற்கு யூன் மக்களிடம் மன்னிப்பும் கேட்டார்.

தென்கொரியாவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும், குற்றங்களுக்கும் மற்ற நாடுகளைப் போல கடுமையான தண்டனைகள் இல்லை. இதனால் அவர்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் யூன் கூறிய கருத்து பயங்கர சர்ச்சையை கிளப்பியது. பாலின ஒற்றுமை அமைச்சகத்தையே நீக்க வேண்டும் என்று யூன் முன்மொழிந்தார். மேலும் பெண்ணிய கருத்துகளுக்கு எதிராகவும், பெண்ணியவாதிகளை குறித்தும் பிரசாரத்தில் விமர்சித்துள்ளார். இதனால் பெண்களின் மதிப்பை யூன் இழந்தாலும், பெருவாரியான ஆண்களின் மதிப்பை பெற்றார். பல ஆண் இளைஞர்கள் இவர் நமக்காக தான் பேசுகிறார் என்று இவரை ஆதரிக்கத் தொடங்கினர்.

இவரின் அதிகபட்ச அமெரிக்க ஆதரவால், தென்கொரியாவும் குவாட் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்திய நாடுகள் கூட்டமைப்பில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யூன், `குவாட் அமைப்பை எப்போதும் தென்கொரியா ஆதரித்து, அவர்களுடன் இணைந்து ஒற்றுமைக்காக செயலாற்றும்’ என்று தெரவித்துள்ளார். ஆனால், குவாட்டில் தென்கொரியா இணைவதைக் குறித்து வெளிப்படையாக எந்தவொரு கருத்தும் யூன் தெரிவிக்கவில்லை. வடகொரியா விவகாரம் குறித்து முந்தைய அதிபர் மூன் அமைதியாக கையாண்ட விதத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் யூன்.

யூனுக்கு பெரிதாக அரசியலில் அனுபவமும், அறிவும் கிடையாது. இதனாலேயே பலர் யூனை ட்ரம்புடன் வைத்து ஒப்பிட்டு பார்க்கின்றனர். ஆனால் யூனோ, `நாட்டின் சிறு பிரச்னைகளை எல்லாம் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் மூலம் தீர்க்கப்படும். பிரதான பிரச்னைகளுக்கு அதிபராக நான் முடிவெடுப்பேன் என்று’ தெரிவித்துள்ளார்.

இது தவிர உள்நாட்டு பிரச்னைகளாக கொரியாவில் பார்க்கப்படுவது கோவிட் தான். இதற்கு தனியே ஒரு கமிட்டி அமைத்து நோயை கட்டுப்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு தொகையும், நிதி நிவாரணமும் அளிக்கப்படும் என்று யூன் தெரவித்துள்ளார்

தென்கொரியாவின் மற்றொரு பிரதான பிரச்னையாக பார்க்கப்படுவது பொருளாதார ஏற்றத்தாழ்வு தான். வளர்ந்த நாடுகளான OECD நாடுகளில் அதிக அளவு பொருளாதார விளிம்பில் உள்ள மக்கள் தென்கொரியாவில் தான் உள்ளனர் (48.3%).

இதை சமாளிக்க பெருவாரியான வேலைவாய்ப்பும், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். 2026-ம் ஆண்டிற்குள் 2.5 மில்லியன் மக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் யூன் வாக்குறுதி அளித்துள்ளார்.

யூனின் வருகையால் தென்கொரியாவில் மாற்றம் ஏற்படுமா என்பது ஒருபுறம் இருந்தாலும், உலக அரங்கில் தென்கொரியாவின் நிலைபாடு எப்படி இருக்கும் என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இனி வரும் காலங்களில் தென்கொரியாவின் அரசியல் யூன் பிடியில் தான் இருக்கப்போகிறது. அதை அவர் எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!