நிகழ்வு

‘தாளடி’ நாவலுக்கு வடசென்னை தமிழ் சங்கம் வழங்கிய வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது

325views
ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் அண்மையில் எழுதிய நாவல் ‘தாளடி’
இந்த நாவல் இதுவரை 5 விருதுகளை பெற்றிருக்கிறது.
‘தாளடி’ என்ற இந்த புனைவின் மொழி சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி.  சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு.  வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக பார்த்திருக்கிறார் – மாலன்.
‘தாளடி 1967’ எதிர்காலத்தின் முன்னுரை – சந்தியா நடராஜன்.
மனசாட்சியோடு உரையாடும் நாவல் – சு.தமிழ்செல்வி.
கூட்டு நனவிலி மனம் செய்லபடும் போக்குகள் ‘தாளடி 1967’ -சுப்ரபாரதிமணியன்.
தமிழுக்கு புதிய வருகை, புதிய வகைப்பாடு – அமிர்தம் சூர்யா.
-இப்படி இலக்கிய ஆளுமைகளால் கொண்டாடப்படும் இந்த நாவலுக்கு, வடசென்னை தமிழ்ச்சங்கம் தமிழ் உரைநடைக்கான “வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது” வழங்கி அண்மையில் கௌரவித்தது.
சென்னை காஸ்மோபாலிடன் கிளப்பில் நண்பர்கள் இலக்கிய ஆளுமைகள், பத்திரிகையாளர்கள் சூழ ஒரு மழைநேர பிற்பொழுதில் இந்த விழா கோலாகலமாக களைக்கட்டியது.
கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் தலைமை தாங்கினார்.  நூலாசிரியருக்கு கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன்  வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருதினை வழங்க, நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் முனைவர் தமிழ் மணவாளன், நூல் குறித்துச் சிறப்பாக ஆய்வுரை நிகழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய சீனிவாசன் நடராஜன் “ஒரு கால கட்டத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ந்த அரசியல் பின்னணி கொண்ட சம்பவங்களை, பதிவு செய்ய விரும்பினேன். அதுதான் தாளடி. நான் பார்த்த மனிதர்களையும் நான் உணர்ந்த அனுபவங்களையும் இதில் உலவ விட்டிருக்கிறேன். இந்த  நிகழ்ச்சி எனக்குள் நிறைய மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. புதிய வேகம் பிறந்திருக்கிறது. இன்னும் பொறுப்புணர்வோடு எழுதவேண்டும் என்ற உணர்வை எனக்குள் விதைத்திருக்கிறது. என் அடுத்த படைப்புகளின் குரல் வேறுமாதிரியாக இருக்கும்” என்று உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவிஞர் அமிர்தம் சூர்யா, கவிஞர் நிமோஷினி, கவிஞர் சிங்கார சுகுமாறன், கவிஞர் சொர்ண பாரதி, இயற்கை ஆர்வலர் வானவன், கவிஞர் துரை. நந்தகுமார், ‘தேநீர் பதிப்பகம்’ கவிஞர் நா. கோகிலன், கவிஞர் வேல்கண்ணன், எழுத்தாளர் லதா, டிசைனர் சந்துரு, சுபா, கவிஞர் சூர்யா, நான் மீடியா  நாகா, திரைக்கலைஞர் ரேகா, கவிஞர் தேவசீமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை வடசென்னை தமிழ்ச்சங்க நிர்வாகிகள் இளங்கோவன், கருணாநிதி, வழக்கறிஞர் கு.பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மழையும் வெயிலும் இல்லாத அன்றைய மந்தகாச பகல் அண்ணாசாலையில் வாகன இரைச்சலுக்கு மத்தியில் அனாயசமாக  வழுக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!