சென்னை சூப்பர் ஹாக்கி ‘லீக்’ போட்டியில், நேற்றைய ஆட்டத்தில், அக்கவுன்ட் ஜெனரல் அணி, இந்திரா காந்தி அணியை வீழ்த்தியது.சென்னை ஹாக்கி சங்கம் சார்பில், ஸ்ரீராம் சிட்டி 58வது சூப்பர் டிவிஷன் ஹாக்கி ‘லீக்’ சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கின்றன.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கிரேட்டர் சென்னை போலீஸ் மற்றும் ‘சாய்’ என்ற இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணிகள் மோதின. இதில், போட்டி துவங்கிய ஆறாவது நிமிடத்தில், போலீஸ் வீரர் கந்தகுரு ஒரு கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து, ‘சாய்’ வீரர் சந்துரு ஒன்பதாவது நிமிடத்தில், ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து, 26வது நிமிடத்தில் போலீஸ் வீரர் சரவணன் ஒரு கோலும், 27வது நிமிடத்தில் ‘சாய்’ வீரர் மோகன்ராஜ் ஒரு கோலும் அடித்தனர்.மீண்டும் போட்டி சமநிலைக்கு திரும்பியது. விறுவிறுப்பான போட்டியின் முடிவில், 57வது நிமிடத்தில் போலீஸ் வீரர் சரவணன் மீண்டும் ஒரு கோல் அடித்ததில், 3 – 2 என்ற கோல் கணக்கில், போலீஸ் அணி வெற்றி பெற்றது.
நேற்று மாலை நடந்த போட்டியில், அக்கவுன்ட் ஜெனரல் மற்றும் இந்திரா காந்தி மெமோரியல் அணிகள் மோதின. அதில், 4 – 1 என்ற கோல் கணக்கில் அக்கவுன்ட் ஜெனரல் அணி வெற்றி பெற்றது.