தமிழகம்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி படம் இடம்பெற வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

69views

44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று (ஜூலை 29) முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் மட்டும் இடம்பெற்றுள்ளது, பிரதமர் மோடி படம் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடி பெயர் மற்றும் புகைப்படத்தைச் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், “தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்கிறார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது.

ஆனால் ஆளும் கட்சி இதனை தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படம் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.

ஆகவே, 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “குடியரசுத் தலைவர் தேர்தல் காரணத்தால் குடியரசுத் தலைவர் படம் இடம்பெறவில்லை. பிரதமர் விழா தொடங்கி வைப்பது 22ஆம் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய நாளிதழில் அவரது படம் இடம்பெற்றுள்ளது. அதோடு இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தலைமை நீதிபதி அமர்வு, “குடியரசுத் தலைவரும், பிரதமரும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கலாமே? 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில் நாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டது.

விசாரணைகள் நிறைவைடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் பெயர், புகைப்படங்கள் இடம் பெற வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கது அல்ல.

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்கள் பத்திரிகை, காட்சி ஊடகங்கள் என அனைத்து விதமான விளம்பரங்களிலும் குடியரசுத் தலைவர், பிரதமர் புகைப்படம் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவர்கள் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்களை யாரோனும் தேசப்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!