சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் சூப்பர் டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தெற்கு ரெயில்வே-வருமான வரி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
தெற்கு ரெயில்வே அணியில் சூர்யாவும், வருமான வரி அணியில் மகேந்திரனும் தலா ஒரு கோல் அடித்தனர். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஸ்டேட் வங்கியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் சோமன்னா 3 கோலும், அக்ஷய்குமார், ஸ்டாலின் அபிலாஷ் தலா ஒரு கோலும் அடித்தனர். ஸ்டேட் வங்கி தரப்பில் மாணிக்கவாசகன், சுதன் தலா ஒரு கோல் திருப்பினர். 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியன் வங்கி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் ஆடிய ஸ்டேட் வங்கி அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.