உலகம்உலகம்

குர்திஸ்தானில் பீரங்கி குண்டு தாக்குதல்; 9 பேர் பலி

62views

ஈராக் நாட்டில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் டோஹூக் பகுதியின் சாகோ மாவட்டத்தில் ஒரு பூங்கா செயல்பட்டு வந்தது. இந்தப் பூங்கா மீது நேற்று முன்தினம் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அப்பாவி மக்கள் அதிலும் குறிப்பாக 9 சுற்றுலாப்பயணிகளும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு துருக்கிப்படைகள்தான் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இதனால் ஈராக், துருக்கி இடையே தூதரக ரீதியிலான மோதல் வெடித்தது. உடனடியாக துருக்கியின் அங்காரா நகரில் இருந்த தனது தூதரக அதிகாரிகளை ஈராக் திரும்பப் பெற்றது. ஆனால் குர்திஸ்தான் போராளிகள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக துருக்கி கூறுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஹசன் தசின் அலி என்பவர் இதுபற்றி கூறும்போது, “இந்த தாக்குதல் கண்மூடித்தனமான தாக்குதல் ஆகும். எங்கள் இளைஞர்கள் பலியாகி விட்டனர். எங்கள் குழந்தைகளும் உயிரிழந்திருக்கிறார்கள். நாங்கள் யாரிடம் செல்வது?” என வேதனையுடன் குறிப்பிட்டார்.

பாக்தாத்தில் உள்ள துருக்கி தூதரை நேரில் அழைத்து ஈராக் தனது கண்டனத்தை பதிவு செய்தது. ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “துருக்கி படைகள் ஈராக்கின் இறையாண்மையை அப்பட்டமாக மீறி விட்டன” என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து ஈராக்கில் உள்ள கர்பலா நகரில் துருக்கி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்தில் துருக்கி விசா மையம் முன்பாக அந்த நாட்டின் கொடியை போராட்டக்காரர்கள் தீயிட்டுக்கொளுத்தினார்கள். பாக்தாத், நசிரியா நகரங்களிலும் போராட்டம் நடந்தது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்கவே முடியாது.

மேலும் அனைத்து நாடுகளும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின்கீழ் தங்கள் கடமைகளை மதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதே போன்று இங்கிலாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சாகோ பகுதியில் நடந்துள்ள தாக்குதலில் அப்பாவி மக்கள் இறந்திருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஈராக் அதிகாரிகளின் புலன்விசாரணையில் எங்கள் ஆதரவு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!