158
கம்பராமாயணத்துக்குப் பாவலர் விளக்கம் சொல்கிறார் என்றால் அங்கே பல்வேறு சமயத்தவர்களும் வந்து குழுமி விடுவார்கள்..இலக்கியக் கடல், மகாமதி ஷெய்கு தம்பிப் பாவலரின் தமிழ், அருவியெனப் பொங்கிப் பாயும். அந்தக் காட்டாற்று நீர்ப் பெருக்கில் கம்பர் சொல்லாத அல்லது நினைத்துப் பார்த்திராத இலக்கிய உவமைகளும் விளக்கங்களும் வந்து விழும்..
அப்படித்தான் ஒருமுறை ஒரு பாடலுக்கு விளக்கம் சொன்னார் பாவலர் …வந்தவர்கள், கேட்டவர்கள் இப்படியுமா என்று வியந்து போனார்கள்…
கம்பனில் ஒரு காட்சி….சீதாபிராட்டியை இராவணன் தூக்கிக் கொண்டு போய் விடுகிறான்.அவளைத்தேடி வரும் இராமன் வழியில் பல்வேறு பேர்களை சந்திக்கிறான்….அவர்களில் ஒருவன் சுக்கிரீவன்.அவன் ஏற்கனவே வாலியோடு பகைத்துக் கொண்டுஇருப்பவன்.
வாலியோ, இராம பக்தன்.
இராமன் நினைனைவிலேயே மூழ்கிக் கிடப்பவன்.வருகின்ற இராமனை வாலி சென்று காண்பதற்கு முன்பாகவே சுக்கிரீவன் முந்திக் கொள்கிறான்….
வாலி சுக்ரீவன் மனைவியைக் கடத்திக் கொண்டு வந்து தன்னவளாக்கிக் கொண்டிருக்கிறான்.
‘பிறன்மனை நோக்காப் பேராண்மையாளனாக’ ப் பேசப்படும் இராமன் காதுகளில் இந்தச் செய்தியை சுக்ரீவன்போட்டு வைக்கிறான்…
உதவிக்குக் கெஞ்சி நிற்கும் அவனுக்குத் துணையாக இராமன் வந்து வாலி யைக் கொன்று – அவனது மனைவியை மீட்டுத் தருகிறான்…. அப்படி தருகின்ற போது – இராமனுக்கு சுக்ரீவன் ஒரு வாக்குறுதி தருகின்றான்.
அதாவது தனது வானரப் படைகளைக் கொண்டு, சீதாப் பிராட்டியைத் தேடுவதில் இராமனுக்கு உதவுவதாக வாக்குத் தருகிறான்…
நாட்கள் கடந்து போகிறது, வாரங்கள், மாதங்கள் என்று கடந்த பிறகும் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுகிறான் சுக்ரீவன் …அவன் கொடுத்த வாக்குறுதியை இராமன், இலக்குவனிடம் சொல்லி அதை சுக்ரீவனிடம் சென்று நினைவு படுத்துமாறு தம்பியை அனுப்பி வைக்கிறான்.
இதுதான் கதைக்காட்சி.
அப்போது கம்பன் பாடுகிறான் …
“நஞ்ச மன்னவரை நலிந்தாலது
வஞ்சமன்று மனு வழக்காதலின்
அஞ்சிலம்பதில் ஒன்றறியாதவன்
நெஞ்சினின்று நிறுத்த நிலாவுவாய்…”
இதுதான் அந்தப் பாடல்…
நஞ்ச மன்னவரை – நஞ்சைப்போன்ற கொடிய மன்னர்களை
நலிந்தாலது வஞ்சமன்று ….கொன்றாலது குற்றமன்று …
மனு வழக்கு , ஆதலால் … அரச தர்மம்தான், ஆதலால்…
அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் …
ஐந்து வயதிலும் சரி, ஐம்பது வயதிலும் சரி, ஒன்றும் அறியாதவனாகிய சுக்ரீவன் ..
அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன் …
ஐந்தும் ஐம்பதும் ஒன்றும் சேர்ந்தால் ஐம்பத்தாறு… தமிழில் ஐம்பத்து ஆறாம் ஆண்டாகிய துந்துபி வருடத்தில் பிறந்த ஒன்றும் அறியாதவனாகிய சுக்ரீவன்…
அஞ்சிலம் பதில் ஒன்று அறியாதவன்…
அவனைக் கொல்வதற்கு நான் அஞ்சவில்லை, என்றாலும் என்னிடம் வந்து ஒரு நல்ல பதில் சொல்வதற்கு அறியாதவனாகிய சுக்ரீவன்…
ஐந்து இல் ஐம்பது இல் ஒன்று அறியாதவன்…
அவனைக் கொல்வதற்கு ஐந்து அம்புகள் தேவையில்ல, ஐம்பது அம்புகளும் தேவையில்லை..ஒரு அம்பே போதுமானது. அதனைக்கூட அறியாத சுக்ரீவன்…
அம் சில் அம்பு அதில் ஒன்று அறியாதவன்.
எம்மிடம் உள்ள அழகிய சில அம்புகளில் ஒன்றின் தன்மையைக்கூட அறியாத சுக்ரீவன்…(அம் – அழகிய)
அம் சிலம்பு அதில் ஒன்று அறியாதவன்
அழகிய கிஷ்கிந்தை மலையிலே வீற்றிருக்கின்ற ஓன்று மறியாத சுக்ரீவன்..(சிலம்பு – மலை)
நெஞ்சினின்று நிறுத்த நிலாவுவாய் ..நெஞ்சிலே பதியுமாறு எடுத்துக் கூறுவாய்…
கம்பன் எந்தக் கருத்தை உள்வைத்துப் பாடினான் என்று தெரியாது…
அதைக் கம்பன் மட்டும்தான் அறிவான்…
ஆனால், இதுவோ கம்பனும் காணாத காட்சி.. அவன் கற்பனையிலு விரியாத காட்சி..அற்புதமான இலக்கிய மாட்சி…தமிழிலக்கியச் சுவையாக அது பதிகிறது …இன்றளவும் நினைக்க – நினைக்க – படிக்கப் படிக்க அந்தச் சுவை நம் நெஞ்சை நிறைக்கிறது..பாவலரின் தமிழ் உணர்வு உலகெலாம் தெரிகிறது…
கம்பனின் கவிநயத்தைப் பாராட்டுவதா..
பாவலரின் சொல் நயத்தைப் பாராட்டுவதா…?
சேவைகள் பலவகை. இது தமிழுக்கானது…
பாவலர் காலம் இல்லை இப்போது. ஆனாலும் எத்தனையோ தமிழ் அறிஞர்கள் வருகிறார்கள், போகிறார்கள்… நானும், இந்தப் பாடலின் பொருள் தெரிந்ததில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், யாராவது இதை மீறி இன்னொரு பொருளும் விளக்கமும் தருவார்களா என்று.. இதுவரையில் நான் கேட்டதில்லை…
இதுதான் பாவலரின் தனித் திறமை.. இறைவன் அவருக்கு வழங்கிய வற்றாப் பேரறிவு…
இத்தனைக் கோடித் தமிழ் மக்கள் வாழும் உலகில், பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள் குழுவில் கம்பனுக்கு இப்படி ஒரு விளக்கம் சொன்னவர் பாவலர் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சிறப்பும் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் இல்லையா…?
எல்லாப் புகழும் இறைவனுக்கே…
-
அத்தாவுல்லா
add a comment