சிறுகதை

கனுப்பிடி

267views

     வார நாட்களில் மிகவும் அழகானதும் அமைதியானதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான். பரபரப்பில்லாத வேலைக்கான பெரிய ஓட்டங்கள் இல்லாத ஒரு அழகான நாளாகத்தான் எப்பொழுதும் ஞாயிற்றுக்கிழமை விடிகிறது.

மகிமாவுக்கு அந்த ஞாயிற்றுக்கிழமை மிக அழகானதாக தான் இருந்தது காலையில் அவள் அதிகாரி போன் செய்யும் வரை.வழக்கம் போல பரபரப்பான குரலில் பேசிய அவளின் சீப் ஒரு முக்கியமான ஆப்பரேஷன் குறித்து தெரிவித்து உடனடியாக டீமோடு கிளம்பி அண்ணாநகர் போகச் சொன்னார்.

“போச்சுடா..இனி இந்த நாள் அரோகரா தான்”! என நினைத்தவாறே டீம் மெம்பர்ஸ்க்கு தகவல் சொல்லி வாட்சப்பில் லொக்கேஷன் ஷேர் செய்து குளிக்கப்போனாள்.இருபத்தாறு வயதில் துடிப்பான கண்களுடன் கோதுமை நிறத்தில் அழகாக இருக்கும் மகிமா மத்திய அரசாங்கத்தில் புலனாய்வுப் பிரிவில் வாயில் நுழையாத பெயரில் உள்ள ரகசிய கண்காணிப்பு தொகுதி ஒன்றின் அதிகாரி.

ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் அப்பாவின் பிடிவாதத்தின் பேரில் படித்து மெடல் வாங்கி அவர் கையில் கொடுத்த கையோடு இந்த ரகசிய புலனாய்வுப் பிரிவுக்கு தேர்வெழுதி முதல்மதிப்பெண்ணில் தேர்ச்சியும் பெற்றாள்.

அவள் அப்பாதான் அடிக்கடி புலம்புவார் “நான் உன்னை எதுக்கு படிக்க வச்சேன் நீ என்ன வேல பண்ணிண்டிருக்க?..என் ஒரே பொண்ணு ஏரோனாட்டிகல் படிச்சு ஏரோபிளேனை பிரிச்சு மேயப்போறான்னு பிரண்ஸ்கிட்ட சொல்லிட்டு இருந்தா நீ என்னடான்னா ஜேம்ஸ்பாண்ட் வேலைக்கு போய் சேர்ந்துட்டு அடிக்கடி என் வயிற்றில் புளியை கரைச்சுட்டிருக்க!” என்பார்.

அப்பா ஏரோனாட்டிக்கல் உங்க சந்தோஷம் அதுக்கு தான் நல்லா படிச்சு மெடல் வாங்கிட்டேனோல்லியோ! இனி என் விருப்பத்துக்கு வேலை செய்ய விடுங்கோ! என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவாள்.

 

     சென்னையிலிருந்து நாற்பத்தி ரெண்டு கிலோ மீட்டர் தாண்டி படப்பையில் இருந்தது அவள் வீடு. தினசரி போய் வர முடியாதென்பதால் மத்திய அரசு ஒதுக்கிய குவாட்டர்சில் தங்கிக்கொண்டாள் கூடவே சமையலுக்கு அப்பாவின் ஒன்றுவிட்ட விதவை சகோதரி அலமு அத்தை இருக்கிறாள்.மகிமாவின் அம்மாவை விட அத்தை கறார் பேர்வழி. வெள்ளிக்கிழமை நல்லெண்ணை ஸ்நானம் மாதம் ஒருமுறை விளக்கெண்ணை பானம் தினசரி குளிச்சிட்டுதான் கிச்சன் பிரவேசம் என படுத்தி எடுப்பாள். அத்தையை அனுப்பிவிட்டால் அம்மா படப்பையிலிருந்து கிளம்பி வந்துவிடுவாள் அது இன்னும் பிரச்சனை.அப்பா படப்பை தோட்டம் மாடு கன்னுக்குட்டி என விட்டுட்டு வரவே மாட்டார். அம்மா வந்தால் சாப்பாடு கஷ்டம் அவருக்கு. இன்னொறு கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி ரெண்டுபேரும் தினசரி பாராயணம் பண்ணுவார்கள். எதுக்கு வம்பு அதுக்கு அலமேலு அத்தையே பெட்டர் என பலமுறை தோன்றியிருக்கிறது மகிமாவுக்கு.

அன்றும் அப்படித்தான் குளித்துவிட்டு தலை துவட்டும் போது அத்தை காபியோடு வந்தாள், என்னடி இது அதிசயம், ஞாயித்துக்கிழமை மதியம் வரைக்கு தூங்குவ இன்னிக்கு சூரியன் மேற்கில் விடிஞ்சிடுத்தா என்ன?.. என்றபடி கப்பை நீட்டினாள்.

“அதில்லை அத்தை ஒரு முக்கிய வேலை சீப் உடனே கிளம்பச்சொன்னார் அதான்”! என்றாள்.”அப்போ வேணும்ன்னா பலா வேரிலயும் காய்க்கும் அப்டித்தானே சரிசரி..நல்லது தான். சீக்கிரம் கிளம்பி வா தோசை வார்க்கறேன்”! என்றபடி கிச்சனுக்கு போனாள்.பிங்க் நிற குர்த்தி கறுப்பு ஜீன்ஸ் அணிந்து கொண்டு மறக்காமல் கழுத்தை சுற்றி மப்ளர் போன்ற துப்பட்டா அணிந்தாள். நெற்றிக்கு விபூதி வைத்துக்கொண்டு உள் டிராவை திறந்தாள் அங்கு பாயிண்ட் 50 கேலிபர் மேக்னம் வகை துப்பாக்கி சமத்தாக தூங்கிக்கொண்டிருந்தது. அதை விலக்கி வைத்துவிட்டு உள்ளே இருந்த பெப்பர் ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து இடுப்பு பெல்டில் இருந்த கொக்கியில் கோர்த்துக்கொண்டாள். துப்பாக்கி மிக ஆபத்தான வேலைகளுக்கு மட்டுமே என்பதில் மகிமா அதிக கவனமாய் இருந்தாள்.

டைனிங் டேபிளில் அத்தை வைத்திருந்த ரெண்டு தோசைகளை காரப்பொடியுடன் சாப்பிட்டுவிட்டு தனது வெள்ளை ஸ்விப்ட் காரில் கிளம்பி அண்ணா நகர் போனாள்.வி.ஆர் மால் அருகில் அவளின் டீம் காத்திருந்தனர். கிருஷ்ணா, அகில், கணேஷ், யோகி என நாலு துடிப்பான இளைஞர்கள். பொது இடத்தில் அதிகம் பேசிக்கொள்ள கூடாது என்பது எழுதப்படாத விதி. மௌனமாய் எல்லாரும் காரில் ஏறிக்கொள்ள கார் கிளம்பி அசோக் நகர் சென்றது. அசோக் பில்லர் தாண்டி வண்டியை நிறுத்திய மகிமா தன் திட்டத்தை கூறினாள்.வெளி நாட்டு உளவாளி ஒருத்தன் அஷோக் நகர் அப்பார்ட் மெண்டில் தன் நண்பனுடன் தங்கியிருக்கிறான். இருவரும் ஹேர் ஸ்டைலிஸ்டுகள் என்ற போர்வையில் எண்ணூர் துறைமுகத்தின் சில முக்கிய தகவல்களை சேகரித்து மெயிலில் அனுப்ப அந்த ரகசிய கோட் விவரங்களை இந்திய R&D பிரிவு படித்துவிட்டு துரோகிகளின் இருப்பிடத்தை துல்லியமாக மேப் போட்டு கையில் கொடுத்துவிட்டது.

இனி கைது செய்யவேண்டியது தான் பாக்கி.ஆனால் எதிரிகளை சேதாரமில்லாமல் பிடித்து இன்னும் என்னென்ன சேகரித்தார்கள் என தேடி அவர்களை அனுப்பியது யார் என எஅடிவேர்வரை எடுக்க வேண்டும். அது இந்த ஆபரேஷன் டீமின் ப்ரோஜக்ட்.மேப்பில் இருந்த மேபிளவர் அப்பார்ட்மெண்ட் சுமார் நூறு வீடுகள் கொண்ட பத்து மாடி கட்டிடம். ஏழாவது மாடியில் இருந்த அந்த வீட்டுக்கு எல்லாரும் போக வேண்டாம் முதலில் இருவர் போய் பார்த்துவிட்டு மற்றவர்களை அழைத்துக் கொள்ளலாம் என திட்டமிட்டுக் கொண்டனர்.

அகிலையும்.யோகியையும் கீழே நிறுத்திவிட்டு மகிமாவும் கிருஷ்ணாவும் அங்கிருந்த லிப்டில் ஏறி ஏழாவது மாடி போன போது வீடு பூட்டியிருந்தது. எதிர் வீடு மாவிலை தோரணம் கட்டி கொஞ்சம் ஆச்சாரமாக இருந்தது. கதவு ஒருக்களித்து திறந்திருந்தது. கிருஷ்ணாவை படிக்கட்டில் நில்லுங்க நான் இந்த வீட்டு கதவை தட்டி யார் இருக்கான்னு பார்க்கிறேன். நீங்களும் மற்ற நாலு பேரும் இந்த பசங்களைப்பற்றி விசாரிங்க எல்லாவிவரங்களையும் டெக்ஸ்ட் பண்ணிக்கலாம். நோ போன் கால் என்றபடி அவனை அனுப்பிவிட்டு எதிர்வீட்டு கதவை தட்டினாள்.கதவைத்திறந்த முதியவருக்கு சுமார் 65 வயது இருக்கும். இவளைப்பார்த்ததும் முகம் மலர்ந்தார். வாம்மா கொழந்தை நீ ராமசேஷன் போண்ணில்லையோ காலைலதான் உங்கப்பா போன்பண்ணி அனு வருவான்னு சொன்னான் வந்துட்டயே..குட் கேர்ல்.என்றபடி உள்ளே திரும்பி யோவ் ரங்காச்சாரி இங்க வாருங்காணும் ராமசேஷன் பொண்ணு வந்துருக்கா என்று அழைத்தார்.

 

     மகிமாவுக்கு என்ன நடக்கிறதென ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன் அடையாளங்களை மறைத்துக்கொள்ள கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ஒருவருட டெல்லி டிரைனிங்கில் கற்றுக்கொடுக்கப்பட்டு இருந்ததால் அனுவாக மாறிக்கொண்டாள். மெல்லிய.சிரிப்புடன் அவருக்கு ஒரு வணக்கம் வைத்தபடி வீட்டினுள் நுழைந்தாள்.அங்கு இன்னும் இரண்டு முதியவர்கள் இருந்தார்கள் எல்லாருக்கும் 65 வயதில் இருந்து எழுபதுக்குள் இருந்தது. வா அனு என்றபடி அருகில் வந்த பெரியவர் தன் பெயர் ரங்காச்சாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

உன்ன பார்த்ததில்லம்மா..உங்க அப்பா எங்க ஸ்னேகிதர். இங்க உட்கார்ம்மா என்ற படி சோபாவைக்காட்டினார்.உட்கார்ந்ததும் எதிர் சோபாவில் வந்து அமர்ந்தவரைக்காட்டிஇதோ இவர் ரங்கபாஷ்யம் ரிட்டேட் ஹிந்தி பண்டிட், நான் ரிட்டேட் மியூசிக் அகாடமி பிரின்சிபால், அதோ அவர் வேணுகோபால் பச்சையப்பன் கல்லூரில ரிட்டேட் ஆங்கில புரொபசர் இதோ இவன் சண்முகம் ரிட்டேட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர். நாங்களும் உங்கப்பாவும் ஒரு காலேஜ் கெட்டுகதர்ல சந்திச்சோம். எங்க பசங்க படிச்சுட்டு பாரீன்ல செட்டில்டு. ரங்கபாஷ்யம் மனைவி மகனோட அமெரிக்கால, வேணுகோபால் மனைவி மகளோட ஆஸ்திரேலியாவில் இருக்காங்க. எங்க ரெண்டுபேருக்கும் மனைவி இறந்துட்டதால நாங்க முதியோர் இல்லத்துக்கு போக பிரியப்படல. தனியா வீடு எடுத்து பழையபடி பேச்சிலர் லைப்.ஹேப்பி.தான் மா. ஆனா சில விஷயங்கள் எங்களால முடியறதில்ல. குறிப்பா லைப்ரேரி போய் புத்தகங்கள் தேடி எடுக்கிறது. நல்லா வாய்க்கு ருசியா சமைக்கிறது. இவன்ங்க வேலைக்காரி வேண்டாம்ன்னு சொன்னதால நாங்களே சமையல் எல்லாம்.வயசாயிடுத்தோல்லியோ எங்களைப்பற்றி தெரிஞ்சு ஞாயிற்றுக்கிழமைகள்ள மட்டும் எங்களுக்கு சமைச்சுத்தர, நல்ல புத்தகங்கள் கொண்டுவந்து தர தன் பொண்ணை அனுப்பறேன்னு உங்க அப்பாதான் சொன்னார். உனக்கு இந்த சேவை மனப்பான்மை இருக்கு அப்டின்னு.பெருமையா சொன்னார். உங்களைப்போன்ற யங்ஸ்டஸ்தான் இப்போ இந்த லோகத்துக்கு தேவை என பேசிக்கொண்டே போனார் அந்த நெற்றியில் ஒற்றை சிவப்புக் கோடு வரைந்திருந்த ரங்காச்சாரி.

உனக்காக தான் நாங்க காத்து இருக்கோம். என்ன புத்தகம் கொண்டுவந்திருக்க சொல்லு என்றார் உயரமாய் இருந்த ரங்கபாஷ்யம்.மகிமாவுக்கு அப்போது தான் புரிந்தது. கதவை தட்டிய உடன் கிடைத்த வரவேற்புக்கு அர்த்தம். இப்போ தான் அனு இல்லன்னும் சொல்ல முடியாது. சரி சமாளிப்போம்என்று நினைத்தபடி. அங்கிள் முதலில் சமையல் அப்புறம் புத்தகங்கள் போய் எடுத்துவரேன், என்றபடி கிச்சனுள் நுழைந்தாள்.அந்த நவீன சமையல் அறையில் சமைக்க எல்லா பொருட்களும் இருந்தன. ஆனால் ஒழுங்கற்று இருந்தது. அவைகளை அடுக்கவே ஒரு மணி நேரம் தேவை. கிருஷ்ணாவுக்கு watch the door என மெசேஜ் அனுப்பிவிட்டு, “அங்கிள் எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு கதவு அடைத்தால் மூச்சு முட்டுவது போல ஆகிவிடும் அதனால் மெயின் டோர் மட்டும் திறந்து வைங்க”! என்றாள். “சரிம்மா” என்றபடி கதவை அகல திறந்து டோர் ஸ்டாப்பரை போட்டார் ரங்கபாஷ்யம்.மகிமா கிச்சனை ஒழுங்கு படுத்தியபடி அங்கிருந்த ஜன்னல் வழியாக எதிர்த்த போர்ஷனை பார்த்தாள் ஆள் அரவமின்றி இருந்தது. உப்பு, பருப்பு, சர்க்கரையை அதற்குரிய பாட்டிலில் நிரப்பிவிட்டு பிரிட்ஜில் இருந்த காய்கறிகளை எடுத்து கட் செய்ய போனாள். சண்முகம் வந்து கொடும்மா நான் கட்பண்ணி தரேன் என்றபடி டிரேயை வாங்கிக்கொண்டு ஹாலுக்கு போனார். மீண்டும் ஜன்னலில் பார்த்தபோது நிழல் நகர்வது போல இருந்தது. அப்போ இவன்கள் வீட்டுக்குள் தான் இருக்கிறான்கள். உடனே போனில்.இந்த தகவலை கிருஷ்ணாவுக்கு மெசேஜ் பண்ணினாள். கிருஷ்ணாவும் அகிலும் வாட்டர் பாய்ஸ் போல தண்ணீர் கேனோடு மேலே வந்தார்கள். வாசலில் காய்வெட்டிக்கொண்டிருந்த சண்முகத்திடம் “அய்யா..இந்த வீடு பூட்டிருக்கு..தண்ணி கேன் கேட்டாங்க யாருமில்லையா”! என்றனர்.” இருப்பாங்களே ரெண்டு பசங்க..பியூட்டி சலூன்ல வேலை போல, இன்னிக்கு ஞாயிற்று கிழமை இல்லையா வீட்ல இருப்பாங்க இருங்க கூப்பிடறேன்”! என்றார்.”என்னங்க அய்யா பூட்டிருக்கு நீங்க கூப்பிடறேன்றீங்க”!”இல்ல அந்த டோர் டிசைன் அப்டி உள்ளதான் இருப்பாங்க” என்றபடி “தம்பி சந்தோஷ்!” என உரக்க விளித்தார்.

வாசல் கதவு லேசாக திறந்தது. ஒல்லியாய் ஒருவன் எட்டிப்பார்த்தான். “என்ன அங்கிள்.?.”இல்ல, தண்ணி கேட்டியாம் கொண்டுவந்திருக்காங்க” என்றார்.” இல்லியே”..என்றான் அவன். “சார் நீங்க 112 நம்பர் சந்தோஷ் தான?” என்றான் கிருஷ்ணா. “இல்ல சார் இது 212 “என்றான். “அச்சோ வீடு மாறிடுச்சு வாடா போகலாம் !”என அவன் திரும்ப எத்தனிக்க அந்த நேரம் யோகியும் கணேஷ்ம் புயலென அவர்களின் பின்னாலிருந்து அந்த சந்தோஷை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் விழுந்தார்கள்.என்ன என சுதாகரிப்பதற்குள் அவன் கையை பின்னால் திருப்பி விலங்கு போட்டார்கள். வீட்டுக்குள்ளிருந்து இன்னொருவன் வெளியே ஓடி கிருஷ்ணாவை தள்ளிவிட்டு காய்வெட்டிக்கொண்டிருந்த சண்முகத்தின் கையிலிருந்த கத்தியை பிடுங்கிக்கொண்டு எதிர் வீட்டுக்குள் நுழைந்தான்மகிமா இருந்த அந்த வீட்டில் பால்கனி இருந்தது ஆனால் குதித்தால் எலும்பு மிஞ்சாது இருந்தாலும் அடுத்த பால்கனிகளுக்கு தாவலாம். மஹிமா கிச்சனில் இருந்த பூந்தி போடும் ஜாரிணியை எடுத்து அவன் முகத்தில் அடிக்க அவன் கத்தியால் மகிமாவின் உள்ளங்கையை கிழிக்க ரத்தம் ஹாலில் கொட்டியது.பெரியவர்கள் “அடேய் “என அலற மகிமா.சட்டென இடுப்பில் இருந்த பெப்பர் ஸ்பிரே எடுத்து அவன் முகத்தில் ஸ்பிரேயரை அமுக்க உள்ளே வந்த கிருஷ்ணாவும் அகிலும் அவனை ஒரே அமுக்காய் பிடித்து கையில் விலங்கு மாட்டினார்கள். அதன்பின் அவர்களின் வீட்டுக்குள் தேடி லேப்டாப்கள் வரைபடங்கள் பென் டிரைவுகள் என துண்டுசீட்டுவிடாமல் அள்ளிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்.

மேடம் கையில என்ன ஆச்சு?” என அவர்கள் கேட்பதற்குள் வேணுகோபால் சார் அவள் கையில் காசித்துண்டால் பெரிய பேண்டேஜ் போட்டிருந்தார். மகிமாவின் ரத்தம் பார்த்து நால்வரும் அதிர்ந்து.போய் இருந்தனர். ரங்கபாஷ்யம் ஓடிவந்து சிறு குழந்தை மாதிரி அழுதார். கண்ணா வலிக்கிறதாம்மா? என்று கெட்டுக்கொண்டே கையை ரத்தம் சிந்தாமல் தூக்கி பிடித்தார். மகிமாவுக்கு சட்டென அப்பா நினைவுக்கு வந்தார். சின்னதில் இப்படித்தான் அவளுக்கு சின்ன காயம் பட்டாலும் தாங்கமுடியாது. சட்டென அப்பாவின் கண்கள் நிறைந்து போய்விடும்.”என்ன தம்பி நடக்குது இங்க ?யார் இவங்க?” நீங்க யாரு?” என்றார் சண்முகம்.

“இல்லய்யா இவங்க அன்னிய தேசத்து உளவாளிகள். இங்கேர்ந்து/சதிவேலை பண்ணிட்டிருந்தவங்களை பிடிச்சிருக்கோம். நாங்க சென்ட்ர்ல் இண்டலிஜென்ஸ் விங்க் என்றவன்.இவங்களுக்கு அடிபட்டிருக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம் என்றபடி மகிமாவை கைத்தாங்கலாக கிருஷ்ணா அழைத்துப்போனான்.பெரியவர்கள் கையைபிசைந்து கொண்டு கண்ணா பத்திரம் அனு. உங்க அப்பாட்ட சொல்ல நான் அவனுக்கு டிரை பண்ணினேன் லைன் கிடைக்கல. நீ போம்மா நான் சொல்லிக்கிறேன் என்றார்.மகிமா தான் அனு இல்லை என கடைசிவரை சொல்லவில்லை. அவர்கள் பார்வையில் தான் அனுவாகவே இருக்கட்டும். நிஜ அனு வந்தால் கூட தான் அடிக்கடி வந்து இவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

 

     கீழே தயாராக இருந்த அலுவலக காரில் கிருஷ்ணாவோடு மருத்துவமனை போனாள். மற்ற மூவரும் அவளின் காரில் கைதிகளை தலைமயகம் அழைத்து போனார்கள். சீப் போனில் அழைத்து வழக்கம் போல உற்சாக குரலில் வெல்டன் மை சைல்ட்..எனக்கு தெரியும் நீ எப்டியாவது இதை சாதிப்பேன்னு. டாக்டர்கிட்ட போய்ட்டு வீட்ல போய் ரெஸ்ட் எடு. நாளை பார்க்கலாம் என்றபடி போனை வைத்தார்.மகிமாவுக்கு உள்ளங்கை பயங்கரமாக எரிந்தது. ரங்கபாஷ்யம் அழுதது மனதில் என்னவோ செய்தது. அவளுக்கு உடனே அப்பாவை பார்க்கவேண்டும் போல இருந்தது.

மறு நாள் கனுப்பொங்கல். அப்பா நேற்றுதான் கெஞ்சினார் மகி எப்டியாச்சும் கனுப்பொங்கலுக்காவது வந்துடு குடும்பமே கூடி பாட்டிகிட்ட நெற்றில மஞ்சள் கீறிப்பா..நீயும் மஞ்சள் தீட்டி பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோ, சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றார். “போங்கப்பா நீங்க இன்னும் மாடு கன்னு கனுன்னுட்டு. வேலை இருக்குப்பா நான் வரலை”! என்றிருந்தாள்.

“சரிடா உன்னிஷ்டம்!” என அப்பா..அரைமனதாய் போன் வைத்தார்.மருத்துவர் மருந்து வைத்து கட்டியதும் டூ டேஸ் ரெஸ்ட் எடுங்க கையில் தண்ணீர் படாமல் பார்த்துக்கோங்க என்று காயம் ஆற சில ஆண்டிபயாட்டிக்ஸ் கொடுத்தார். வாங்கிக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தனர்.

நல்ல வேளை மேடம் அவன்கிட்ட துப்பாக்கி இல்ல காயம் கொஞ்சம் தள்ளியிருந்தா கையின் முக்கிய நரம்பு கட் ஆகிருக்கும். தப்பிச்சீங்க என்றான்..ஆமா.கிருஷ்ணா..என்றபடி என்னை கொஞ்சம் படப்பை வரை கூட்டிடு போறியா அப்பாவை பார்க்கணும் போல இருக்கு என்றாள். கண்டிப்பா மேம் போலாம் என்றபடி வண்டியை ஸ்ரீபெரும்புதூர் ரோட்டில் திருப்பினான்.

 

     இளமாலை வெயில் மெல்ல மேற்கில் இறங்கிக்கொண்டிருந்தது.மகிமா..அப்பாவுக்கு சொல்ல ஒரு அட்வெஞ்சர் கதையும் கூடவே அவருக்காக தான் கண்டுபிடித்த நாலு நண்பர்களையும் மனதில் நிறைத்துக்கொண்டாள். நகரத்தை தாண்டியதும் கிராமத்து வீதிகள் பொங்கலுக்கு வெள்ளையடிக்கப்பட்ட புதுசுவர்களுடனும் வேப்பிலை கொத்துக்களுடனும் தோரணமாடிக் கொண்டிருந்தது.

 

  • கமலி ஆனந்த் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!