ரஷ்யப் படைகள் தென் உக்ரேனின் மிக்கோலிவ் பகுதியை நேற்று தாக்கியதுடன் நாடு முழுவதும் நடத்தி வரும் அதன் தாக்குதல்களை முடுக்கிவிட்டன.
நேற்று நடந்த தாக்குதலில் மொத்தம் எட்டு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டன. இதனால் நான்கு மாடிக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் குறைந்தது மூவர் உயிரிழந்துவிட்டதாக மிக்கோலிவ் நகரின் தலைவர் தெரிவித்தார்.
இருப்பினும், வட்டாரத்தில் உள்ள வெளிநாட்டுக் கூலிப்படையினருக்கான பயிற்சித் தளத்தைத்தான் தன் படைகள் குறிவைத்த தாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.
எங்கும் போர்க்களம்
லிஸிசன்ஸ்க் நகரைச் சுற்றிவளைக்க ரஷ்யப் படைகள் முயன்று வரும் நிலையில் அப்பகுதியை ‘எங்கும் போர்க்களம்’ என்று கூறி வர்ணித்தார் லுஹன்ஸ்க் மாகாணத்தின் ஆளுநர். கடந்த சில நாள்களாக மத்திய உக்ரேனிலும் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக க்ரிவி ரியின் ஆளுநர் குறிப்பிட்டார்.
“பூமியில் இருந்ததற்கான அடையாளமே இல்லாதபடி பல கிராமங்கள் அழிக்கப்பட்டுவிட்டன,” என்று அந்தத் தாக்குதல்களைச் சாடினார் க்ரிவி ரியின் ஆளுநர் ஒலெக்சாண்டர் வில்குல்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தலைமையில் படைகள் தொடர்ந்து ஐந்தாவது மாதமாகத் தங்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
வேண்டுமென்றே வைத்த குறி
திங்கட்கிழமையன்று மத்திய உக்ரேனில் அமைந்துள்ள கடைத்தொகுதி ஒன்றில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துவிட்டனர். சுமார் 36 பேரை இன்னும் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தன் மக்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் ரஷ்யா வேண்டுமென்றே அந்தக் கடைத்தொகுதியைத் தாக்கியதாக உக்ரேன் கூறியது. தாக்குதல் நடத்தியபோது கடைத்தொகுதியில் யாரும் இல்லை என்றும் அதன் அருகிலுள்ள ஆயுதக் கிடங்கைத் தான் குறிவைத்தது என்றும் ரஷ்யா கூறிற்று.
“இந்தப் பகுதியை ரஷ்ய ஏவுகணை மிகத் துல்லியமாகக் குறிபார்த்துத் தாக்கியுள்ளது. வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் இது,” என்று காணொளி வழி உரை நிகழ்த்திய உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார். ரஷ்யப் படைகள் தங்களால் முடிந்த அளவுக்கு உக்ரேன் மக்களின் உயிரைக் குடிக்கப் பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
இருப்பினும் ரஷ்யாவின் பக்கமும் பல உயிரிழப்புகள் இருப்பதாகவும் வளங்கள் குறைந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலை நாடுகளின் நெடுந்தொலைவு ஏவுகணைகள் போன்ற ஆயுதங்கள் உக்ரேனைச் சென்று அடைவதற்குள் ரஷ்யா அதன் தாக்குதல்களை துரிதமாகவும் அவசர அவசரமாகவும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
“ரஷ்யர்கள் தங்கள் கையில் கிடைப்பதைக் கொண்டு தாக்குதல் நடத்துகின்றனர். பள்ளிகள், பாலர் பள்ளிகள், கலாசார மன்றங்கள் என ராணுவத் தொடர்பு இல்லாத இடங்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை,” என்றார் லுஹான்ஸ்க் ஆளுநர் செர்ஹிய் ஹைடாய் கூறினார்.
நேட்டோவின் பதிலடித் திட்டம்
இதற்கிடையே, ஸ்பெயின் தலைநகரான மட்ரிட்டில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் சந்தித்தனர். ரஷ்யாவின் செயல்களுக்குப் பதிலடி தருவது தொடர்பான கொள்கையைப் பற்றி பேசுவதும் அவர்களின் சந்திப்பில் ஓர் அங்கமாக இடம்பெற்றது.