விளையாட்டு

இலங்கையை வீழ்த்தியது ஆப்கன்: ஆசிய கோப்பையில் அசத்தல்

96views
ஆசிய கோப்பை லீக் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (‘டி-20’) தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இலங்கை அணிக்கு ஆப்கானிஸ்தான் பவுலர்கள் தொல்லை தந்தனர். பரூக்கி பந்தில் குசால் மெண்டிஸ் (3), சரித் அசலங்கா (0) அவுட்டாகினர். நவீன்-உல்-ஹக் ‘வேகத்தில்’ பதும் நிசங்கா (3) வெளியேறினார்.
இலங்கை அணி 5 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இணைந்த தனுஷ்கா குணதிலகா, பானுகா ராஜபக்சா ஜோடி நிதானமாக விளையாடியது. இவர்கள் இருவரும் அஸ்மதுல்லா வீசிய 6வது ஓவரில் தலா 2 பவுண்டரி அடிக்க 20 ரன் கிடைத்தன. நான்காவது விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது முஜீப் உர் ரஹ்மான் பந்தில் குணதிலகா (17) அவுட்டானார்.
வணிந்து ஹசரங்கா டி சில்வா (2), கேப்டன் தசுன் ஷனகா (0) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய பானுகா ராஜபக்சா (38) ‘ரன்-அவுட்’ ஆனார். மகேஷ் தீக்சனா (0), மதீஷா பதிரானா (5) ஏமாற்றினர். கடைசி நேரத்தில் சமிகா கருணாரத்னே (31) கைகொடுக்க, இலங்கை அணி 19.4 ஓவரில் 105 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 3 விக்கெட் கைப்பற்றினார்.
சூப்பர் துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஜ்ரதுல்லா ஜஜாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. மதீஷா பதிரனா வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த குர்பாஸ், மகேஷ் தீக் ஷனா வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். ஹசரங்கா பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜஜாய், கருணாரத்னே வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார். முதல் விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது குர்பாஸ் (40 ரன், 18 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார்.
இப்ராஹிம் ஜத்ரன் (15) ‘ரன்-அவுட்’ ஆனார். ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஜஜாய் (37), நஜிபுல்லா ஜத்ரன் (2) அவுட்டாகாமல் இருந்தனர். முதல் தோல்விபேட்டிங்கில் ஏமாற்றிய இலங்கை அணி, சர்வதேச ‘டி-20’ அரங்கில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் தோல்வியை பெற்றது. இதுவரை மோதிய இரண்டு போட்டியில், இரு அணிகளும் தலா ஒன்றில் வென்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!