இந்தியா

இருளில் மூழ்கிய புதுச்சேரி! மின்துறை தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம்-ஆளுநர் தமிழிசை வார்னிங்!

61views
புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்து மின்வாரிய ஊழியர்கள் 5-வது நாளாக தொடர் போராட்டம் நடத்துவதால் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது.
இதனையடுத்து பொதுமக்கள் நள்ளிரவில் தீப்பந்தம் பிடித்து போராட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்துக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரி மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க புதுச்சேரி பாஜக கூட்டணி அரசு தீர்மானித்தது.
தெலுங்கானா பதுகம்மா விழா.. ராஜ்பவனில் உற்சாகமாக கொண்டாடிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி பாஜக அரசின் இந்த முடிவுக்கு மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதில் புதுச்சேரி பாஜக அரசு உறுதியாக உள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.
புதுச்சேரியில் கடந்த 4 நாட்களாக மின்வாரிய ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் ஒட்டுமொத்த யூனியன் பிரதேசமும் இருளில் மூழ்கி உள்ளது. இதனால் கொந்தளித்த பொதுமக்களும் இரவும் பகலும் போராடி வருகின்றனர். இரவில் தீப்பந்தம் ஏந்தியபடி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தினர். மின்தடையால் பெரும்பாலான இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் பல மணிநேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரியின் கள நிலவரத்தை தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கண்காணித்து மின் தடையை உடனே சரிசெய்ய வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதையும் மீறி பொதுமக்களை சிரமப்படுத்தி தங்களின் கோரிக்கைகளை அறவழியில் போராடாமல்,பொதுமக்களுக்கு துன்புறுத்தும் போராட்டங்களிலிருந்து மக்களை காக்கும் பொறுப்பும்,கடமையும் அரசுக்கு இருப்பதால் அதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!