182
பெரியார்
இட்டார்
இடாதார் இழிகுலத்தார்…
நம் தமிழ் சமுதாயத்திற்குத்
தேவையானதை
இட்டார் பெரியார்
அதனால் –
அவர் பெரியார்!
அவர் –
புரையோடிப் போயிருந்த
சமூகப் புண்களுக்கு
அறுவை சிகிச்சை செய்த
ஆன்மீக வாதி!
தாழ்த்தப் பட்ட மக்களைத்
தலை நிமிரச் செய்ய
தண்டோரா போட்ட
விடுதலை முரசு….
இந்தியாவுக்குள்
இருந்து கொண்டே
பார்ப்பனீயத்தை எதிர்த்துப்
படை எடுப்பு நடத்திய
இரண்டாம் கஜனி!
வாளுக்குப் பதில்
வைத்திருந்தது என்னவோ
கைத்தடிதான்….
ஆனாலும் – அந்த
கைத்தடியின் முன்னால்
பொய்யர்களின் மெய்த்தடிகள்
எல்லாம் உருண்டன!
இவரது
நேரீயத்தின் முன்
நடு நடுங்கி நின்றது
நேர்மையற்ற ஆரீயம்!
அவர் வீரத்தின் முன்
நிற்க முடியாமல்
தோற்றுப் போனது சாதீயம்….
அவர் வீதிகளில்
இறங்கினார் …
வேற்றுமை வேதங்கள் விழுந்தன… ..
சாலைகளில் நடந்த போது
சாதீயத் தடை மேடுகள்
அகற்றப்பட்டன!
அவர் –
மேடைகளில் ஏறியபோது
புராணங்கள் ஒடுங்கின…
புழு புழுத்தப்
புராண லீலைகள்
வெலவெலத்து மடங்கின…
சமூகத்தின் புழு புழுத்த
பழமைகளை இவரது
பழுத்த தாடி தடவி விட்டது – அந்த
வெம்மை தாளாமல்
உயர்ந்த மேடுகள்
மூலையில் சோர்ந்தது!
இவரது கைத்தடியில்
அகற்றப்பட்டவை
முட்புதர்க் காடுகள் அல்ல
சமூகத்தை மூடிக்கிடந்த
முடை நாற்றக் கேடுகள்!
வெறும் –
அக்கப்போர் வீரரல்லர்
வைக்கப்போர் வீரர்!
மக்களின் அறியாமைக் கெதிராக
அவர் போர் தொடுத்தார்-
அது கண்டு
அந்த ஆண்டவனே சிரித்தான்-
ஆனால்
ஆண்டவனின் பேர்சொல்லி
அப்பாவி மனிதர்களைக்
கூறு போட்ட
ஆசாமிகள் எல்லோரும் எரிந்தான்!
இந்த
பகுத்தறிவுப் பகலவன்
அறிவைக் கூர்தீட்டிய
அஹிம்சாவாதி!
மனிதாபிமானத்தின்
மங்கா அகல் விளக்கு!
திராவிடத்தின் திருவிளக்கு!
-
அத்தாவுல்லா
add a comment