ஆசிய ஆணழகன் போட்டியில், ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பாராட்டினார்.மாலத்தீவில், 54வது ‘மிஸ்டர் ஆசியா’ ஆணழகன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 15ம் தேதி துவங்கி 21ம் தேதி வரை நடந்தன.இதில், இந்தியா உட்பட 32 நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று அசத்தினர். போட்டிகள், ஜூனியர், மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டன.
இப்போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில், 11 வீரர்கள் உட்பட 20 பேர் இந்தியா அணியில் பங்கேற்றனர். இதில், தமிழக வீரர்கள், ஐந்து தங்கம் உட்பட ஒன்பது பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர்.சென்னையைச் சேர்ந்த சுரேஷ் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘பாரா’ போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றார்.அவரை தொடர்ந்து, ஜூனியர் பிரிவில் சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரர் சுரேஷ்; 70 கிலோ பிரிவில் ஹரிபாபு; 100 கிலோவில் கார்த்திக்கேசுவர் மற்றும் 90 கிலோவில் நாமக்கல் வீரர் சரணவன் ஆகியோர், தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
அதேபோல், 70 கிலோவில் விக்னேஷ், ‘100 பிளஸ்’ எடை பிரிவில் ராஜ்குமார், புருஷோத்தமன் ஆகிய சென்னை வீரர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், ரத்தினம் என்பவர் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இவர்களுடன், 50 – 59 வயது பிரிவில் ஸ்டீபன் நான்காவது இடத்தையும், ‘பிஸிக்’ பிரிவில் கார்த்திக்ராஜ் ஐந்தாவது இடத்தையும் வென்று அசத்தினர்.
இதில், புருஷோத்தமன் மற்றும் ஸ்டீபன் ஆகியோர் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று முன்தினம் சென்னை திரும்பிய வீரர்களுக்கு, சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று தமிழ்நாடு சங்கத்தின் செயலரும் அணியின் பயிற்சியாளருமான அரசு மற்றும் பதக்கங்களை வென்ற வீரர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.