உலகம்

அடுத்த வாரம் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தலாம்- அமெரிக்கா தகவல்

73views

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக்காமல், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் 2006-ம் ஆண்டு முதல் இதுவரை 6 அணுகுண்டு சோதனைகளை நடத்தி அதிர வைத்துள்ளது.

கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியது. இது ஹைட்ரஜன் குண்டு என தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து, 2018-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்டு டிரம்பை, வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச இருந்ததால் அணுகுண்டு சோதனைகளுக்கு தனக்குத்தானே தடை விதித்தது.

டிரம்புடனான கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்தபோதும் கூட, அதன் பின்னர் இதுவரை அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தவில்லை.

இந்நிலையில், வடகொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 110-வது பிறந்த நாள் வரும் 15-ந் தேதி வருகிறது. தனது தாத்தா கிம் இல் சுங்கின் 110-வது பிறந்த நாளை பிரமாண்ட விழா நடத்தி கொண்டாட வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளார். அந்த நாள் பொது விடுமறை நாள் ஆகும்.

அந்த நாளில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த தீர்மானித்துள்ளதாக அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அந்த அதிகாரி கூறும்போது, நான் அதிகம் ஊகிக்க விரும்பவில்லை. ஆனால், இது மற்றொரு ஏவுகணை சோதனையாக இருக்கலாம். அணு ஆயுத சோதனையாகவும் இருக்கலாம். பதற்றம் ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் இன்றி கிம் இல் சுங்கின் 110-வது பிறந்தநாள் கடந்து சென்று விடாது என குறிப்பிட்டார்.

கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் தென்கொரியாவுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்தது நினைவுகூரத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!