தமிழகம்

திருநெல்வேலி தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

125views
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சிக்கந்தர், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட துணைத்தலைவர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயலாளர்கள் நூர் முஹம்மது, செய்யது அலி பாதுஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கல்வத் கனி, முஹம்மது அலி, தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், தென்காசி மாவட்ட கூடுதல் பொறுப்பாளருமான நிஜாம் முஹைதீன், மண்டல தலைவர் சுல்பிகர் அலி ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மக்கள் பணிகளை மென்மேலும் சிறப்பாக செயல்படுத்தி கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி – தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் சுமார் 430 கோடி செலவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்டது. 2020 செப்டம்பர் மாதம் பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை பணிகள் நிறைவு பெறவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி வழியாக கேரளாவை இணைக்கும் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அவசர மேல் சிகிச்சைக்காக தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் நோயாளிகள் என குண்டும், குழியுமான, பணிகள் நிறைவுபெறாத இச்சாலையில் பயணம் செய்யும் பல்வேறு தரப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் , வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செங்கோட்டை கூட்டுறவு பால்பண்ணை அருகில் என பொதுமக்கள் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கும் மேலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முக்கிய காரணியாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்களின் கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழுவின் இறுதியில் மாவட்ட செயலாளர் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!