தமிழகம்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல் சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக கவிஞர் மு.முருகேஷ் எழுதியது

39views
2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட நூல்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ஒன்றாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கவிஞர் மு.முருகேஷ் எழுதிய “யானை வருது யானை வருது… டோய்” என்ற பாடலும் இடம்பெற்றது.
இப்பாடலை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி படித்துவிட்டு, “குழந்தைகளுக்கான பாடல்கள் இப்படித்தான் ஓசைநயத்தோடு இருக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் ஆர்வத்தோடு படிப்பார்கள்” என்று பாராட்டினார்.
இப்பாடல் இசையமைக்கப்பட்டு, தற்போது பல்வேறு யூ-டியூப்பில் சேனல்களில் வலம் வருகிறது. இப்பாடலை Tamil School You Tube https://youtu.be/i-LUqP498vwபக்கத்தில் 4.3 கோடி பேரும், BUJJI TV-யின்  https://youtu.be/wuvOVWgooa0யூ-டியூப் பக்கத்தில் 2.6 கோடி பேரும், TAMIL MUTRAM https://youtu.be/8Q1-Wsraho4யூ-டியூப்பில் 1.4 கோடி பேரும் இதுவரை கேட்டுள்ளனர்.
இதுகுறித்து இப்பாடலை எழுதிய கவிஞர் மு.முருகேஷிடம் கேட்டபோது, “கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், விளையாட்டுகளை எழுதி வருகின்றேன். இதுவரை 20-க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்களையும் எழுதியுள்ளேன். சமச்சீர்க் கல்விப் பாடப்புத்தக உருவாக்கத்தில் 4 மாதங்கள் பணி செய்தேன். ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடப்புத்தகங்களில் சில பாடல்களையும், பாடங்களையும் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதிலும் ஒன்றாம் வகுப்புக்கான இரண்டாம் பருவத்திற்காக ‘யானை வருது யானை வருது யானை வருது டோய்…’ என்ற இந்தப் பாடலை எழுதினேன். இந்தப் பாடலைப் பாடும்போது குழந்தைகள் மிகுந்த உற்சாகத்தோடு குதித்து ஆடினார்கள். ஆனால், இத்தனை கோடி பேர் விரும்பிக் கேட்கும் பாடலாக இது வலம்வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை.
எனது ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ சிறுவர் கதை நூலுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான ‘பால சாகித்திய புரஸ்கார்’ விருதினை மத்திய அரசு வழங்கியது. தற்போது எனது குழந்தைப் பாடலை 8 கோடிக்கும் மேற்பட்டோர் விரும்பி கேட்டிருப்பதை விடவும் பெரிய விருது வேறென்ன வேண்டும்?” என்று மனநெகிழ்வோடு கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!