தமிழகம்

தமிழ் வளர்ச்சிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; ஆட்சி மொழிக் கருத்தரங்கில் கவிஞர் பேரா பேச்சு

228views
தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி மொழிக்கான பொற்கால ஆட்சி நடத்துகிறார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என தென்காசியில் நடந்த தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் கவிஞர் பேரா சிறப்பித்து பேசினார்.
தமிழ் வளர்ச்சித் துறை அரசு அலுவலர்களுக்கான தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்றது.
முதல் நாளில் நடந்த பயிலரங்கில் ஆட்சி மொழி வரலாறும் சட்டமும், அரசாணைகளும் ஆட்சிமொழி செயலாக்கமும் ஆகிய தலைப்புகளில் முனைவர் க.பசும்பொன், முனைவர் சிவசாமி ஆகியோர் பேசினர். இரண்டாம் நாளில் நடந்த கருத்தரங்கில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் தலைமையுரை வழங்கினார்.
தலைமையுரையில் “தமிழ் வளர்ச்சித் துறை மூலம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது மகிழ்ச்சியே. இந்த இரண்டு நாட்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகப் பணிகளில் கோப்புகளை தமிழில் கையாள வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன், கடையநல்லூர் அரசுக்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் வேலம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
நிறைவாக நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா பேசினார். அவர் பேசுகையில் “தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் வளர்ச்சித் துறை. கலைஞர் ஆட்சிக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் எண்ணற்ற தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழுக்காகப் பாடுபடுவோரை சிறப்பிக்க பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. புதிய விருதுகளை ஏற்படுத்தியும், விருதுத் தொகையினை உயர்த்தியும் வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பல போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. படைப்பாளிகளை ஊக்கப்படுத்த அவர்கள் வெளியிடும் சிறந்த நூல்களுக்கு பரிசும் வழங்கி வருகிறது. மேலும் நூல்கள் வெளியிட நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இப்படி எண்ணற்ற திட்டங்களை தமிழ் மொழிக்காகச் செய்து “மொழிக்கான பொற்கால அரசை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”. அவருக்கு நாம் என்றும் துணையிருப்போம்” இவ்வாறு கவிஞர் பேரா பேசினார்.
முன்னதாக சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராஜன் வரவேற்புரை வழங்கினார். தமிழாசிரியர் முனைவர் சரவணகுமார் தொகுப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பல அரசுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி
நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!