தமிழகம்

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல்

154views
சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று டி.ஜி.வைணவக் கல்லூரியின் தமிழ் இலக்கியத் துறை நடத்திய ஐந்து நாள் தேசியப் பயிலரங்கின் தொடக்க விழாவில் பத்திரிகையாளரும், கவிஞருமான மு.முருகேஷ் வலியுறுத்தி பேசினார்.
சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின் தமிழ் இலக்கியத் துறை சார்பில் ‘தமிழர் மரபும் தற்கால ஊடகங்களும்: திறன்மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு’ எனும் தலைப்பிலான ஐந்து நாள் கருத்தரங்கின் தொடக்க விழா பிப்ரவரி 20 அன்று காலை கல்லூரியின் வித்யாதர்ஷன் அரங்கில் நடைபெற்றது.
இத்தொடக்க விழாவிற்கு தமிழ் இலக்கியத்துறையின் தலைவர் (பொறுப்பு) முனைவர் க.ர.லதா தலைமையேற்றார். விழாவின் ஒருங்கிணைப்பாளரும் உதவிப்பேராசிரியருமான முனைவர் ஜ.சிவகுமார் வரவேற்புரையார்றினார்.
‘அச்சு ஊடகமும் இளைய தலைமுறையும்’ எனும் தலைப்பில் பத்திரிகையாளரும், மத்திய அரசின் பால சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளருமான மு.முருகேஷ் பேசியதாவது; தொடக்கக் காலத்தில் சமய நெறிகளைப் பரப்பும் நோக்கில் தான் பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. 1882-இல் இந்திய விடுதலைக்கான கருத்துகளை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் பத்திரிகைகள் ஈடுபட்டன. சுதேசமித்திரன், இந்தியா, விஜயா, கர்மயோகி, சக்கரவர்த்தி ஆகிய இதழ்கள் குறிப்பிடத்தக்கன.
நவீன அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியாலும், சமூக ஊடகங்களின் தாக்கத்தினாலும் அச்சு ஊடகம் அழிந்துவிடும் என்ற கருத்து தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அச்சு ஊடகங்களின் சமூகத்தேவை ஒருபோதும் குறைந்துவிடாது. செய்தியின் நம்பகத்தன்மைக்கு அச்சு ஊடகங்களே இன்றைக்கும் உறுதியளிப்பதாக உள்ளன.
இளைய தலைமுறையினர் வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் நெடுநேரம் செலவிடுகின்றனர். இதனால் மன-உடல் ரீதியான பல்வேறு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதைக் குறைத்து அன்றாடம் நாளிதழ்களைப் படிக்கிற நல்ல பழக்கத்தையும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமாகும்.
அச்சு ஊடகங்களில் பணியாற்ற சமூகத்தைப் பற்றிய தெளிவான பார்வையும், மொழி அறிவும் இருக்க வேண்டும். உண்மையின் வழி நின்று, நேரான சிந்தனையுடன் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு பல வாய்ப்புகள் இன்றைக்கு காத்திருக்கின்றன. சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே அச்சு ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.  நிகழ்ச்சியில் பேராசிரியர் ம.செந்தில்குமார், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவன தமிழ்த்துறை தலைவர் முனைவர் பா.ஜெய்கணேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகளும் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!