தமிழகம்

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவில் வீசிய சூறாவளி காற்று காரணமாக சேத்தூரில் பயிரிடப்பட்டிருந்த ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேருடன் ஒடிந்து சேதமாகி உள்ளது.

114views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம். மாற்றுத் திறனாளியான இவர் சேத்தூர் அருகே உள்ள 2 ஏக்கர் நிலத்தை குத்ததைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார்.
1,350 ஒட்டு ரக வாழை கன்றுகளை நட்டு கடந்த 10 மாதங்களாக பராமரித்து வருகிறார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களில் தற்போது குலை தள்ளி உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை செய்ய விவசாயி பாலதண்டாயுதம் முடிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இரவில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கோடை மழை பெய்தது. காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் உயரமாக வளர்ந்திருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டது.
தற்போது வரை 350க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முற்றிலுமாக தரையில் சாய்ந்து விட்டது.
மரங்களை குலையுடன் விற்பனை செய்தால், ஒரு மரம் ரூ. 400 வரை விலை கிடைக்கும். இந்த நிலையில் 350க்கும் மேற்பட்ட மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் தனக்கு ரூ. 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு தனக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விவசாயி பாலதண்டாயுதம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!