தமிழகம்

ராஜபாளையம் அருகே, கூலி உயர்வு பேச்சுவார்த்தையில் உடன்பாடு – விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

41views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படாமல், பழைய முறையில் கூலி வழங்கப்பட்டு வந்தது. புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி, இந்தப் பகுதி விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இது குறித்து 7 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து, உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் மதுரை மண்டல அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமையில், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், தொழிற் சங்கங்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் முதல் ஆண்டு 6 சதவீதமும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு 5 சதவீதமும் என 11 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும் என்று சுமூக முடிவு எடுக்கப்பட்டது. இதனையடுத்து விசைத்தறி தொழிலாளர்களின் 13 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, இன்று முதல் வழக்கம் போல விசைத்தறிக் கூடங்கள் செயல்படும் என்று தொழிற் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!