தமிழகம்

மாநில ஹாக்கி போட்டியில் தங்க பதக்கம் அரசு விளையாட்டு விடுதி வீரர்களுக்கு பாராட்டு

46views
தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம் அரசு விளையாட்டு விடுதி மாணவர்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டினார். பாரதியார் பிறந்த நாளையொட்டி, தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், 30 வது மாநில அளவில் 19 வயதுக்குட்பட்டோர் குழு விளையாட்டு போட்டிகள் நாமக்கல் கொங்கு நாடு பொறியியல் கல்லூரியில் டிச.7 முதல் டிச.10 வரை நடந்தது. ஹாக்கி போட்டியில் 40 அணிகள் பங்குபெற்றன. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் மூன்று லீக் ஆட்டங்களில் தேனி, கரூர், வேலூர் அணிகளை 9-0, 7-0, 9-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.
காலிறுதி ஆட்டத்தில் கன்னியாகுமரி அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதி ஆட்டத்தில் விருதுநகர் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர். இறுதி ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றனர். இறுதி ஆட்டத்தில் 2 கோல் உள்பட 13 கோல் அடித்த வீரர் விஷால், இறுதி ஆட்டத்தில் 1 கோல் உள்பட 11 கோல் அடித்த வீரர் விஷ்வா, இறுதி ஆட்டத்தில் 1 கோல் உள்பட 7 கோல் அடித்த அருண் மற்றும் மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த ராமநாதபுரம் அரசு விளையாட்டு விடுதி மாணவர்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம. காமாட்சி கணேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மூ.தினேஷ் குமார், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி தலைவர் மோகன், தலைமை ஆசிரியர் வள்ளுவன், செயலர் ரெத்தின சபாபதி, உடற்கல்வி ஆசிரியர் சிவா ஆகியோரும் வாழ்த்தினர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!