சிறுகதை

சாலியின் பொதுத்தேர்வு பயணம்

217views
பர்வீன் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரின் அன்பு கணவர் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு வாரிசுக்கு ஒரு மகன் சாலி, ஆசைக்கு ஒரு மகள் ஜீனத் உண்டு. தான் உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்.
சாலி மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். ஆறாம் வகுப்பு ‘E’ நிலையில் படிக்கும் மாணவன். விளையாட்டில் முதல் நிலை படிப்பிலும் விளையாட்டு. மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் வகுப்புகள் கிடைக்கும். மிகவும் நன்றாக படிக்கும் மாணவர்கள் ‘A’ நிலையில் இருப்பார்கள். ஆறாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான் உயர்நிலைப் பள்ளிகள் பள்ளியில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிக்கப்பட்ட வகுப்புகளில் அந்தந்த வகுப்பு கேற்ற பயிற்சித்தாள்கள் கொடுத்து பயிற்றுவிக்கப்படுவார்கள். இறுதி ஆண்டு தேர்வில் எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தான் வழங்கப்படும். அதில் பின் தங்கிய வகுப்பில் இருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து முன்னேற்றம் பெற்றால் அந்த மாணவன் மதிப்பின் அடிப்படையில் முன் நிலையில் உள்ள வகுப்பிற்கு அனுப்பப்படுவார்கள்.

பர்வீன் கலக்கமுற ஆரம்பித்தார். இதுவரை விளையாட்டாக இருப்பவன் இனியாவது படிப்பான் என்று பார்த்தால் பள்ளியிலும் கால்பந்து விளையாட்டு பயிற்சி மாலையில் நண்பர்களுடன் விளையாட்டு மனம் நொந்து கவலையுற்று களைப்பற்று கலங்கி சிந்திக்கும் வேளையில்… அம்மா… என்ற மகிழ்ச்சி குரலில் அழைத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தான் சாலி கூடவே ஒரு நண்பனும் வந்தான். அம்மா இவன் பெயர் கிரண். இவனும் ஆறாம் வகுப்பில் படிக்கிறான். நமது அடுக்குமாடி குடியிருப்பின் அருகாமையில் தான் வசிக்கிறான் கிரண்.
“நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்? “என்ற வினவினார். நான் ‘A’ நிலை என்றவுடன் வியந்தவர் சாலி தான் படிக்கிறதே இல்லப்பா… விளையாட்டாகவே இருக்கிறான். “காலாண்டு விடைத்தாள் உனக்கு கொடுத்து விட்டார்களா?” என்று கேட்டார். ஆமாம்… எல்லா விடைத்தாள் தாள்களும் கொடுத்து விட்டார்கள்.” இவன் ஒன்றுமே கொடுக்கவில்லை என்று சொன்னான். நீ ஏதாவது பயிற்சி வகுப்பு போகிறாயா?” என்று பர்வீன் கேட்க… ஆமாம் ஆண்ட்டி நான் பயிற்சி வகுப்பிற்கு போகின்றேன். அருகாமையில் தான்… நன்றாக சொல்லி தருவாங்க என்றுரைத்துவிட்டு வீடு திரும்பினான் கிரண்.
“சாலி…காலாண்டு விடைத்தாள்களை ஆசிரியர்கள் கொடுத்து விட்டார்களா?” என்று பர்வீன் கேட்டார். இல்லை அம்மா என்றான் இருந்தாலும் ஒரு ஐயப்பாடு உடனே பள்ளி பையை எடுத்துப் பார்த்தார். புத்தகங்கள் பயிற்சித்தாள்கள் கோப்புகள் மட்டுமே இருந்தன. இன்னும் தேடுதலை தீவிரப்படுத்தி பார்த்தார். விடைத்தாள்கள் நான்காக மடித்து உன் பையினுள் இருந்தது. எடுத்துப் பார்த்தால் தமிழில் மட்டும் தேர்ச்சி மற்ற பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண்கள். பார்த்தவுடனேயே கோபத்தில் பொங்கினார். இதோ விடைத்தாள்கள் இருக்கு “பொய் சொல்கிறாயா?” என்று கூவிக்கொண்டே அடிக்க ஆரம்பித்தார். மதிப்பெண்கள் குறைவாக வாங்கிவிட்டேன் என்று சொல்லி இருந்தாலும் மனம் மாறி இருக்கும். பொய் வேற சொல்கிறாய். இரண்டு மடங்கான கோபத்தை அடித்தே குறைத்தார். அம்மா… அம்மா… அம்… அடிக்காதீங்க அடுத்த முறை நல்ல மதிப்பெண் வாங்குகிறேன் எனக்கு கணக்கு வரமாட்டேங்குது… கண்களிலிருந்து கண்ணீரும் மூக்கிலிருந்து சளியும் வருவதை துடைத்துக் கொண்டு… அழுது கொண்டே… சொன்னான்.
கொஞ்சம் கொஞ்சம் வீடு அமைதி நிலைக்கு வந்தது. ஜீனத் பயத்தில் ஓரிடத்தில் அமர்ந்து அவள் பள்ளி வீட்டு பாடங்களை செய்து கொண்டிருந்தாள் ஓரக் கண்ணால் சாலி தேம்பித் தேம்பி அழுவதை பார்த்தபடி. அப்போது கதவு திறக்கும் சத்தம் “ஏன் இங்கு செருப்பு கலைந்தபடி இருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே சாலியின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தவுடன் சாலி அவசர அவசரமாக அழுவதை நிறுத்தி கண்களைத் துடைக்க முயற்சிக்கும்போது வீட்டின் அமைதி அவரிடம் காட்டி கொடுத்தது. “ஏன்? என்ன நடந்தது? என்று வினவும் தருவாயில் பர்வீன் உரத்த குரலில் நடந்ததை விளக்கினார். கடும் கோபம் கொண்ட தந்தை சினம் கொண்ட சிங்கம் போல் உறுமினார். இருவரும் சேர்ந்து உரக்க பேசி முடித்த போது இடி இடித்து நின்றது போலிருந்தது.
மறுநாள் கிரண் அலைபேசி எண் வாங்கி கிரண் தாயாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மெல்ல ஆரம்பித்தார்…. சாலி மிகவும் விளையாட்டு பிள்ளையாய் இருக்கிறான். அவனை கிரண் படிக்கும் பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன் அந்த ஆசிரியை எப்படிப்பட்டவர்? என்று. ஆசிரியை பெயர் உமா ஒரு இந்திய பெண்மணி வீட்டிலேயே பயிற்சி கூடம் வைத்திருக்கிறார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காமல் கற்றுத் தருவார். ஆசிரியை பணியை அர்ப்பணிப்புடன் செய்வார். நீங்கள் சாலி பற்றி தெளிவாக சொல்லி சேர்த்து விடுங்கள் என்று கிரண் தாயார் ஆதரவாக பேசினார்.
ஆசிரியை உமா பொறுமையும் நிதானமும் கொண்டவர். மாணவர்களுக்கு எளிமையான முறையில் புரியும்படி கற்றுவிப்பது அவரின் திறமை. மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணம் கொண்டவர்கள் அவர்களுக்கு ஏற்றார்போல் கற்பிக்கும் ஆற்றல் கொண்டவர்.
அன்று மாலையே, பர்வீன் சாலியை பயிற்சி கூடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆசிரியையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சாலியைப் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தினார். “சாலியை உங்களிடம் பயிற்சி வகுப்பிற்கு அனுப்ப விரும்புகிறேன். மேலும்… காலாண்டு தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான். நேற்று கோபத்தில் நன்றாக அடித்து விட்டேன். ” என்று பகிர்ந்தார் பர்வீன் கொஞ்சம் கலக்கத்துடன். “அடிப்பதும் அறிவுறுத்துவதும் உங்கள் கோபத்தை குறைக்குமே தவிர அவன் படிப்பிற்கு உதவாது. அவனின் விடைத்தாளை நன்கு ஆராய்ந்து அவன் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி புரியும்படி கற்றுக் கொடுத்தால் நிச்சயம் ஆர்வத்துடன் கற்றுக் கொள்வான்” என்றார் ஆசிரியை மென்மையான குரலில். ஆசிரியையின் இன்முக வரவேற்றலும் தன்மையான உரையாடலும் பர்வீனுக்கு தன்னம்பிக்கை வரவைத்தது என்றாலும் சாலி ஒத்துழைப்பு கொடுப்பானா? என்று ஐயத்தில் மனம் குழப்பத்துடன் விடை பெற்றார்.
ஆசிரியை உமா கணித பயிற்சித்தாளை சாலியிடம் கொடுத்து எழுத சொன்னார் அவன் எழுதும் போது எப்படி செய்கிறான்… எவ்வாறு செய்கிறான் என்று கவனித்தார். வாரத்திற்கு மூன்று நாட்கள் வகுப்புகள் கொடுத்து கணிதம், அறிவியல், ஆங்கிலம் பாடங்கள் நடத்தி பயிற்சி கொடுத்தார். பாடம் எடுக்கும் போது அவன் கவனிக்கும் முறை, புரிந்து கொள்ளும் முறை அத்தனையும் கிரகித்துக் கொண்டார். ஒரு வாரமானது நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அவனின் கவனிச்சிதறலே காரணம் என்ற அறிந்தார் ஆசிரியை அதனால் அவனுக்காக எளிமையான கணித கேள்விகள் கொடுத்து எளிமையான முறையில் பயிற்சியை ஆரம்பித்தார். ஒரு கணிதத்தை எப்படி சுருக்கமாகவும் எளிமையாகவும் செய்வது என்ற முறையை சொல்லிக் கொடுக்கும் போது அவனுக்கு ஆர்வம் அதிகமானது. கவனச் சிதறலினால் அடிப்படையிலேயே நிறைய தவறுகள் இருந்தது. பயிற்சியின் மூலமும் எளிமை முறையும் மீண்டும் மீண்டும் தவறை சுட்டிக்காட்டி பயிற்சி கொடுத்து அடிப்படை கணிதத்தை கற்றுக் கொண்டான் ஆர்வத்துடன் அடிப்படை புரிந்ததும் அடுத்த நிலைக்கு உயர்த்தினார் கேள்விகளை.
அரையாண்டு தேர்வுக்காக பள்ளியில், பள்ளியில் நடத்தும் ரெமிடியல் வகுப்பிலும், பயிற்சி வகுப்பிலும் பயிற்சி பெற்றான். தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது அவன் பயிற்சியால். பள்ளி நிர்வாகம் ஆசிரியர் – பெற்றோர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆசிரியர் “சாலி முன்னேற்றம் அடைந்துள்ளான். இதேபோல் தொடர்ந்து முயற்சி செய்தால் நிச்சயம் இன்னும் நல்ல மதிப்பெண்கள் அவனால் எடுக்க முடியும்.” என்று அன்பாக சொன்னார். ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீடு திரும்பும் போது ஏதோ புதிதாக தென்றல் வருடியது போல் ஓர் உணர்வு பர்வீனுக்கு.
அரையாண்டு முடிந்ததும் 1 மாதம் முழுவதும் பள்ளி விடுமுறை. விடுமுறையை நன்றாக பயன்படுத்த அறிவுறுத்தினார் ஆசிரியை உமா. சாலிக்கு அதிக பயிற்சி கொடுக்கலானார். அங்குள்ள பாடங்களை படித்துப் புரிந்தால் தான் வினாக்களுக்கு சொந்தமாக பதில் அளிக்க முடியும். மனப்பாடப்பகுதி கிடையாது. அதனால் நிறைய பயிற்சி எடுத்தால் மட்டுமே சிறப்பான மதிப்பெண்கள் எடுக்க முடியும். அதை உணர்ந்த சாலி படிப்பில் ஆர்வத்துடன் கல்வி கற்க ஆரம்பித்தான்.
அரசு, பொது தேர்வுக்கான தேதியை அறிவித்தது. மாணவர்களும் எந்த மாதிரி ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இரவில் தூங்க வேண்டும் என்றும் பயிற்சித்தாள்கள் பழக வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தி மேலும் பெற்றோர்களுக்கு தகவலையும் அனுப்பி வைத்தது. அன்று முதல் பர்வீன் சாலிக்கு ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவினை கொடுக்க ஆரம்பித்தார் அது உடல் நலத்திற்காக, ஆதரவாகவும் அரவணைப்பும் கொடுத்து படிப்பதை கவனித்தார் இது சாலியின் மன பலத்திற்காக. பர்வீனின் மனம் வேறு எதிலும் திசை திரும்பாமல் தேர்வை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அன்று தேர்வு நாள். காலை நேரம் பொழுது புலர்ந்தது. மழை லேசாக பெய்ய ஆரம்பித்தது. “திக் திக்” என்றது. சாலியை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு கூடவே சென்றார். கவனக்குறைவாக செய்யக்கூடாது… தெரிந்த வினாவிற்கு முதலில் பதிலளி… அடித்து அடித்து எழுதாதே கரெக்ஷன் டேப் பயன்படுத்து என்று அறிவுறுத்திக் கொண்டே.
தொடர்ந்து தேர்வுகள் நடந்து முடிந்தது தேர்வுகள் முடிந்து விட்டது என்று ஒரு பக்கம் மனம் அமைதி பெற்றாலும் மதிப்பெண்கள் என்ன வருமோ? நல்ல பள்ளியில் உயர்நிலைக் கல்விக்கு இடம் கிடைக்குமா? என்ற கவலை ஒட்டிக்கொண்டது அவருக்கு.
அன்று தேர்வு முடிவு தெரிவிக்கும் நாள் காலை 7.30 மணி முதல் மதிப்பெண் பட்டியலை வழங்கவும் 11 மணிக்கு ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், பள்ளி முதல் இடம் கைப்பற்றிய மாணாக்கனுக்கும், ஒவ்வொரு பாடத்தின் பள்ளி முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கும் பரிசு அளிக்கும் விழாவினை பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இது வருடா வருடம் நடக்கும் நிகழ்வு.

சாலியும் பர்வீனும் மனதில் ஒரு பயத்துடனே சென்றனர்.  மதிப்பெண் பட்டியலை வாங்க. ஆசிரியர் “சாலி வகுப்பு ‘E’ ல் முதல் மாணவனாக வந்துள்ளான் என்று மதிப்பெண் பட்டியலை ஒரு கோப்பில் போட்டு நீட்டியபடி அரங்கத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார் ஆசிரியர். ஆனந்தத்தில் கை நடுங்க மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டார். மதிப்பெண் பட்டியலை பார்த்த பர்வீன் முகம் சூரியனைப் பார்த்த செந்தாமரைப் போல் மலர்ந்தது மகிழ்ச்சியில். சாலியின் நெற்றியில் முத்தமிட்டார் என் கனவை நினைவாக்கி விட்டாய் என்று குதூகலத்தில் துள்ளி குதித்தார்.
விருது வாங்கும் மாணவர்கள் முன் வரிசையில் அமர வைத்தார்கள். சாலி பெரிய அரங்கத்தின் மேடையில் விருது வாங்கும் தருணத்தில் பெரிய வெள்ளி திரையில் “சாலி முகமது, வகுப்பின் முதல் மாணவன் என்று காட்டியது. இதனை மிகவும் பெருமையுடன் அலைபேசியில் படம் பிடித்தார் பர்வீன்.
விருதினை வாங்கின கையோடு ஆசிரியை உமாவை பார்க்க சென்றார். அவர்கள் விருதை காட்டி எல்லையற்ற மகிழ்வினை வெளிப்படுத்தினார்கள். உங்களிடம் வந்த பிறகு தான் படிப்பில் ஆர்வம் வந்து படித்தான் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால் நல்ல பள்ளியும் கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ஆசிரியை உமா “நான் பயிற்சி கொடுத்தாலும் தன் நன்மைக்காக என்ற தன் உணர்வே அவனை வழிநடத்தியது. இனிமேல் தானாகவே படிப்பான் அப்படித்தானே சாலி” என்றார். “ஆமாம் ஆசிரியை” என்றான் நெகிழ்ச்சியுடன்.
இது கதையல்ல நிஜம்.
கருத்து ; முயற்சி ; பயிற்சி ; வெற்றிக்கு வழி ; ஆசிரியராலும் பெற்றோரின் ஆதரவாலும் எவ்வித ஒரு வித்தையும் நல் வித்தாக்க முடியும்.
உங்களுக்கு இதுபோல் அனுபவம் ஏற்பட்டுள்ளதா? என்பதை பின்னூட்டத்தில் தெரியப் படுத்துங்கள்.
– கீதா அருண்ராஜ்

10 Comments

  1. தன் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோரும் விரும்புவர்.அதிலும் தாயானவள் தன் குழந்தைகள் சிறந்த மதிப்பெண் பெற்றால், தான்மதிப்பெண் பெற்றது போல மகிழ்ச்சி அடைவாள்,தன் குழந்தையின் கல்வி சிறப்பாக இருக்கும்வரை அவள் மனம் ஓயாது.எனக்கும் அனுபவம் உண்டு.
    கல்வி அறிவை வளர்ப்பதற்காக என்பதை குழந்தைகளுக்கு புரியவைத்து, உரைநடையோடு அல்லாமல் செயல்முறையில் சொல்லித்தரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    ஆசிரியர் மாணவனின் நிலையை அறிந்து அதற்கு தகுந்தாற் போல கல்வி போதிப்பது சிறப்பு.
    கீதா அவர்களே தங்களின் சிறுகதை அருமை. தொடருங்கள்………..

    1. சிறப்பான பின்னுட்டம் அளித்தமைக்கும் உங்கள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. உங்களின் பெரும் ஆதரவுக்கு உளமார்ந்த நன்றி.

    1. மிக்க நன்றி. அனைத்து மாணவர்களுமே திறமையானவர்கள். அவர்களை போற்றப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.

  2. அருமை. புரிதல் நம்மிடம் இருந்து ஆரம்பித்து அதை பயிற்சி கொடித்து குழந்தை மேன்மை அடைய செய்வது பெற்றோர்கு பெரிய பங்கு உண்டு. அதை புரிந்துகொண்டு மாணவன் உழைத்த உழைப்பு ரெண்டும் பெரிய விஷயம் மாணவரும் பெற்றோரும் இதை இருவரையும் தொடர்பு படுத்தி அதை சரி செய்வது என்பது முதல் பங்கு ஆசிரியருக்கு கதை மிக அருமை

  3. It’s great work!! Just no words to express the feelings..wow feel.. Heartfelt Congrats on the efforts you made for the kid/ kids there.. the way of your writing 💐💐💐💐

    1. Thank you so much. Once a child has become a winner and experienced the true feeling of success, they will want to replicate that again and again

  4. அருமை கீதா ஒவ்வொரு தாயின் உணர்வுகளை படம் பிடித்து எழுத்தில் பிரதிபலித்து உள்ளாய்

    1. மிக்க நன்றி சிவகாமி. அழகாய் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!