சிறுகதை

போய் வா கணவா பொழுதோட…

185views
சிறுகதை :
“வாடி ஒரு எட்டு போயிட்டு வருவோம் அப்படியே கல்லு மாதிரி நீயும் உட்கார்ந்து மாவு அரைச்சுக்கிட்டு இருக்க. என்னதான் இருந்தாலும் உறவும் உரிமையும் இல்லாம போகுமா.”
ஆட்டுக்கல்லில் மாவரைத்து கொண்டு இருந்த ரேணுகாதேவி, மாலதி அக்காவின் பேச்சை கேட்காது போல இன்னும் கவனமாக வேகமாக மாவரைத்துக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் ஒளிர்ந்தன. விட்டு விட்டு கேட்கும் குயிலின் ஓசை போல அவள் மனதும் விட்டுவிட்டு மூச்சு வாங்கியது.
நேரம் ஆக ஆக அவள் வீட்டு முன் பல சொந்தக்காரர்கள் வந்து கூடினர். எல்லோரும் ரேணுகா தேவியை பார்த்துக் கொண்டே இருந்தனர்.
அவள் சற்றும் மனம் தளராமல் மனதில் சிறு அசைவு கூட இல்லாமல் அவளுடைய அன்றாட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுந்தரிஅக்கா ஜமுனாஅத்தை எல்லோரும் அவள் நடவடிக்கையின் மேல் கோபம் கொண்டு, ” ஆயிரம் இருந்தாலும் அவன் உனக்கு தாலி கட்டின புருஷன்.  இன்னைக்கு மண்ணோடு மண்ணாக செத்துக் கிடக்கான். தூக்க முன்னாடி பாத்ட்டு வந்தரலாம் அந்த ஜென்மம் மோட்சம் அடையட்டும்.
ஒருவேளை சொர்க்கத்துக்கு போகையில உன்னை பார்க்கவில்லை ண்ணு கொரை இல்லாமல் அது ஆவியா அலையுதோ என்னமோ” என்று ஜமுனாத்தை சொன்ன போது இவளுக்கு சிரிப்பதா அழுவதா கோபப்படுவதா எனத் தெரியவில்லை.
அவள் எதற்கும் கவலைப்படாமல் தனது ஹோட்டலை திறக்க எத்தனித் தாள் . காயம் பட்டு காயம் பட்டு கல்லாய் போன களிம்பேறிய மனது எதையும் சிந்தை செயலுக்குள் கொண்டு செல்லும் நிலையில் இல்லை.
காட்சி கண்ணன் இருந்த திசையை கூட பார்ப்பதற்கு அவளுக்கு உடன்பாடு இல்லை. எவ்வளவு ஆசையோடும் எவ்வளவு அன்போடும் பரிவோடும் குடும்பம் நடத்தி இருப்பாள். மரம் போல மிகப்பெரிய இட்லி சட்டி எடுத்து வைத்து இட்லி ஊத்திவைத்து சட்னி வகைகளை வாளியில் மாற்றி வைத்து வேலைகளைத் தொடங்கி விட்டாள். மகன் தினேஷ் தான் கொல்லிப் போடணும்.
“அதுல எதுவும் சொல்லிடாத ஆத்தா.  12 படிக்கிறியான் இன்னைக்கு பரீட்சை எழுதி வரட்டும்.  அவனை நான் கூட்டி போயிட்டு வந்துடறேன் “என அண்ணன் ராசு சொன்ன பொழுது அதையும் காதில் வாங்காத மாதிரி வேலை செய்து கொண்டே இருந்தாள்.
தினேஷ் அரையாண்டு தேர்வு பரிட்சை எழுதி முடித்து வந்த பின்பு வீட்டின் வாசலில் இவ்வளவு பேர் கூட்டமாய் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனான். ஜமுனாத்தையும் செல்லாக்காவும் அவனை கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள்.
“அப்பா தினேஷ் உங்க அப்பன் உன்னைய விட்டுட்டு போய்ட்டான அப்பா. அழகுபெத்த பிள்ளைய அனாதையா விட்டுட்டு போய்ட்டானப்பா நட்டாத்துல உங்கள எல்லாம் விட்டுட்டு போக எப்படித்தான் அவனுக்கு மனசு வந்துச்சோ கொஞ்சமாவது நெஞ்சில் ஈரமில்லாம இப்படி போய் சேர்ந்துட்டான் ” அவர்கள் மார்பிலும் தலையிலும் அடித்துக் கொண்டு வருவதை இவளால் காண சகிக்கலை.  அப்படியே நீங்கள் பார்க்கலாம் உங்கள் விருப்பம் போல் அங்கே போய் அழுகலாம் இங்கு எதுக்கு புலம்புறீங்க.  சரிதான் அதுக்கு என்ன பண்ண முடியும் ஆனது ஆய் போச்சு ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு மனுஷன் இறந்து போன பிறகு சாமிக்கு சமம் என்று சொல்வாங்க இப்படி எல்லாம் வீராப்பு வீம்புமா இருந்தா சரி இல்ல. உங்க அண்ணன் மட்டும் எப்படி சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி உன் மகனை கூட்டிட்டு போக ஆசைப்படுறான்.”
அதுவரை அமைதியாக இருந்த வீராயி கூந்தலை அள்ளி முடிந்து புடவையை தூக்கி சொருகி சண்டை போடுவது போல் பேசத் தொடங்கினாள். “
உங்களுக்கு என்ன வாய் புழிசுச்சா மாங்காய் புளிச்சதா என்று பேசிட்டு போவீங்க. அவபட்ட கஷ்டம் யாருக்கு புரியும். அவ அண்ணங்காரன் இன்னைக்கு கூட்டிட்டு போக தயாராக இருக்காண்ணா சொத்தஎழுதி வைத்திருக்கிறானே அதுக்கு காரணம் இருக்கு .சும்மா இல்ல தன் பிள்ளையை தான் வளர்த்த மருமகனுக்கே கட்டிக் கொடுக்க ஆசைப்படுறேன் .  இவன் போய் கொல்லி வச்சாத்தான் அங்க இவன் அப்பன் இவன் பேர்ல எழுதி வச்ச 10 சென்ட் நிலம் இவனுக்கு கிடைக்கும்.  இல்லாட்டி அத அவங்க பங்காளிகாரங்களேஆட்டைய போட்டுருவாங்க. அவங்க அப்பன் கடைசியாக இருந்த வீட்டிலேயே இவனுக்கு பங்கு கிடைக்காமல் செஞ்சுருவாங்க. கூட பிறந்தவனே அதேன் அவங்க பெரியப்பா வே ஆட்டைய போட தயாராக இருக்கான். அதனால தான் கொல்லி வச்சிட்டா நாளைக்கு பஞ்சாயத்து பேசும்போது கொல்லி வச்சிருக்கத சொல்லி சொத்தை தட்டி போடலாம்ல. அதுக்கு தான் அவங்க அண்ணே ஆர்வமா இருக்கும்.  அப்படியே அவங்க அண்ணன் வேணா மனுசன மதிக்காம காசு பணத்தை மதிச்சு இருக்கலாம் ஆனால் இருக்கும்போது ஒரு மனுஷியா கண்டுக்காம நோக வச்சுட்டு அவ பேச்ச கேக்காம இருந்த அவுங்க அப்பன இவன் போய் பார்க்கத்தான் வேணுமா உங்களுக்கு என்ன ஒரு நாள் பேசிட்டு அடுத்த இழவுக்கு போயிடுவீங்க.  ஆனா அவ வாழ்ந்த வாழ்க்கையை அவ கண்ட கணவ உங்களால திருப்பி கொடுக்க முடியுமா.  போவீங்களா உங்க வேலையப்பாத்துட்டு”
– என வீராயி முழங்கியது  அந்தத் தெருமுழுவதும் கேட்டது. இவ்வளவு சத்தமாக உயிரா பேசியபோதும் கூட எதுவும் நடக்காது.
“போலாம் மாமா” கூட கிளம்ப ஆயத்தமாய் இருந்த தினேஷை கூப்பிட்டு தட்டு நிறைய இட்லி போட்டு சாப்பிட வைத்து அனுப்பினாள்.
ஒரு சின்ன மினி லாரியில் ஒரு பெருங்கூட்டம் கிளம்பஆயத்தமானது.
தப்புக்குண்டு என்ற ஊருக்கு இங்கிருந்து சொந்த பந்தங்கள் லாரி ஏறிக்கொண்டு போய்க்கொண்டிருப்பதை ரேணுகாதேவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரவின் நிசப்தத்தை அங்கு கேட்ட சோகப்பாடல் கிழித்து கொண்டிருந்தது. உசிலம்பட்டி கனகா கரகாட்ட குழுவினர் எங்கு இழவு நடந்தாலும் சோகத்தை பிழிந்து அவர்கள் பாடுகிற பாடல் கல்லையும் கரைக்கும் தினேஷுக்கு புதுமையாக இருந்தது.  அவன் பிறந்ததிலிருந்து அந்த ஊருக்கு வந்ததில்லை. அங்குள்ள மக்களைப்பார்த்ததில்லை. அந்த நிலைமை அவனுக்கு புதிதாக இருந்தது. இறந்து போன அப்பன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு சாயலில் இவனை போல தான் அவன் இருந்தான். எவ்வளவுதான் வறுமையில் வாழ்ந்தாலும் பல்வேறு வேலைகள் செய்தாலும் தன் மகனுக்காக அவன் சேர்த்து வைத்த சொத்தை பத்தி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டுக்குள் அவன் நுழைந்ததும் அவன் அப்பத்தா இருளாயி இவனை கட்டிக்கொண்டு அழுதது அவனுக்கு என்னவோ போல் இருந்தது. வெளியில் பூ அலங்காரத்தோடு தாயாராக இருந்தது பெரிய பாடை .
ஒல்லியான உருவமைப்போடு கீழே படுக்க வைத்து இருந்தான் காட்சி கண்ணன். பெரியப்பன் இவனைப் பார்த்ததும் நகத்தைக் கடித்துக் கொண்டே இருந்தான். அங்கு இருந்த சொந்த பந்தங்கள் பெரிய மாயன் ராசு காட்சி கண்ணனின் நண்பர்கள் எல்லோரும் கூட மாட சூழ்ந்து இறுதி கட்ட காரியங்களை செய்ய தொடங்கினார்.
இருளாயி அப்பத்தா சுயநலவு இல்லாமல் அப்பப்ப மயக்கம் போட்டு எழுந்தது. இந்த கிழவியோட குடிப்பழக்கம் தான் மகனையும் பலியாகிவிட்டது என்று எல்லாரும் அரசல் புரசலாக சொல்லுவாங்க. பேசிக் கொண்டார்கள். கிழவியோட போதாத இந்த குடி பழக்கம் தன் மகன் மருமகள் பேரப்பிள்ளை என்று நன்றாக வாழ வேண்டிய குடும்பம் இன்னிக்கு நாசமா போக காரணம் நட்டாத்துல நிக்குது எல்லாத்துக்கும் இந்த சூனியக்கார கிழவி தான் காரணம் என்று ஒரு பேச்சு போய்க கொண்டிருந்தது.
பொதுவாக புதைப்பது தான் அவர்கள் வழக்கம்.  ஆனால் இவன் ஆஸ்பத்திரியில் நீண்ட காலம் இருந்த காரணத்தினால் கல்லீரல் பழுதாகி குணப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு மாத காலம் படுத்த இந்த காரணத்தினால் அவனை எரிக்கத்தான் வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி முடிவெடுத்தார்கள்.
அவசரகதியில் அத்தனை சடங்குகளும் நடந்தேறின.  இரவோடு இரவாக அவன் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு எரியூட்டப்பட்டது. அவசரகதி. சில சடங்குகள் மட்டும் பின்பற்றப்பட்டன. பல சடங்குகள் பின்பற்றப்படவில்லை. அதுவுமே ஊரில் சிலரின் பேச்சுக்கு காரணமாக இருந்தது.
“ரேணுகா உன்னை தப்புக்குண்டில் இருந்து பொண்ணு பாக்க வந்திருக்காங்க சட்டுபுட்டுன்னு சேலையை மாத்திட்டு வந்து நில்லுத்தா
அதிகம் வாய் பேசாத உலகமே அறியாத ரேணுகா. பதினோராம் வகுப்பில் இன்னும் முடிக்கவில்லை ஆனால் ஓங்குதாங்க வளர்ந்து இருந்தாள்.
இருளாயி, காட்சி கண்ணன் பெரியவன் லட்சுமணன் அவன் சம்சாரம் என்ற ஒரு பத்து பேருக்கு மேல் அந்த பொண்ணு பார்க்க வந்திருந்தார்கள். அந்த ஊருக்கு பண்ணைப்புறம் அருகில் இருக்கும் அழகான புலிக்குத்தி என்ற கிராமத்திற்கு வந்திருந்தார்கள். வந்த பொழுது அங்கே சாராய நெடி அடித்தது.  இருளாயி குடித்திருப்பது யாருக்கும் தெரியாது.
இருளாயியின் கணவன் மாயன் இறந்த பொழுது அவன் விட்டு சென்ற கடையை பராமரித்து பிள்ளைகளை ஆளாக்கும்போது அவன் விட்டு சென்ற பழக்கமான சாராயம் குடிக்கும் பழக்கமும் பழகி விட்டாள் இருளாயி. மூத்தவன் லட்சுமணன் பலமுறை கண்டித்து இருக்கிறான். ஆனால் இளையவன் காட்சி கண்ணன் அம்மாவுக்கு வாங்கி வருவது போல அவனும் அடித்து பழகி இருக்கிறான். இப்படி ஒரு குடிகார குடும்பத்திற்கு வாக்கப்பட போறோம் என்று இந்த பச்சை மண்ணு ரேணுகாதேவிக்கு தெரியாது.
11-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்து மேற்கொண்டு படித்து அந்த ஊரில் டீச்சராக வேண்டும் என்பதுதான் அவளுடைய ஆசை. யாரிடமும் அதிகம் பேசாமல் உலகம் தெரியாத பிள்ளையாக வளர்ந்தவள்.  தான் உண்டு பள்ளிக்கூடம் உண்டு வீடு உண்டு படிப்பு உண்டு என்று இருந்தவள் .
பெரியவர்களாக பார்த்து ஏதேதோ பேசி முடித்து திருமணம் என்று சொன்னார்கள்.
அவள் அழுதது அன்று இரவு மழையாக பொழிந்தது. ஊரே இருண்டது மின்சாரம் தடைபட்ட நாளில் தான் அவள் திருமணம் முடித்து அந்த ஊருக்குள் நுழைந்தாள்.

ஒரே புயல் மழை காற்றும் இருட்டும் வானம் கருத்து அவளின் அவல நிலையை பறை சாற்றுவது போல இருந்தது. ரேணுகாதேவி காட்சி கண்ணனை கூட பார்க்காமல் அவனுக்கு மனைவியாக ஆக்கப்பட்டு அந்த தப்புகுண்டு ஊருக்கு வந்தாள்.
ஆரம்பத்தில் அவன் அன்பாகத்தான் இருந்தான். ஆட்டோ ஓட்டுவது சமையல் வேலைக்கு செல்வது என்று கிடைத்த வேலையெல்லாம் செய்தான். காட்சி கண்ணனுக்கு நண்பர்கள் அதிகம் யார் வந்து கூப்பிட்டாலும் எப்பொழுதும் கூப்பிட்டாலும் எங்கு கூப்பிட்டாலும் எதற்காக கூப்பிட்டாலும் எதையும் யோசிக்காமல் அவர்கள் பின்னால் சென்று அவர்கள் சொல்லும் வேலையை முடித்து அது குடியில் வந்து முடியும்.
நாள்தோறும் குடித்துவிட்டு வருவது வாடிக்கையானது. முதலில் சிணுங்கினாள். அழுதாள். பிறகு துடித்தாள்.  கணவன் குடிகாரன் மாமியார் கொடுமைக்காரி பிறந்த வீட்டில் வழி இல்லை கூட பிறந்த அண்ணன் சொத்தை மட்டும் பார்த்து தங்கச்சியை கழட்டி விட நினைக்கிறான். ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்து கிணற்றில் விழுந்து விடலாமா மருந்து அடிக்கலாமா அல்லது தூக்கு போட்டு தொங்கலாமா எதைச் செய்தாவது மாய்த்துக் கொள்ள வேண்டும் என எண்ணியிருந்தபொழுது அவளைப் பார்ப்பதற்கு வீராயி வந்தாள்.
“ஏன் இப்படி ஒரு மாதிரி இருக்க.  உன்னை இப்படி ஒரு நாளும் பார்த்ததில்லையே. உலகம் தெரியாத ஒரு பிள்ளையை இப்படி போய் கல்யாணம் என்ற பெயரில் வம்புல மாட்டி விட்டார்களே” என்று வேதனையை கொட்டினாள்.
“நீ எதுக்கும் கவலைப் படாத கடவுள் இருக்காரு. மனச விட்டுவிடாத” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது ரேணுகாதேவி வாந்தி எடுத்தாள்.
ரேணுகாதேவி மாசமானது உறுதியானது. அப்போது அவளுக்குள் ஏற்பட்ட அதிர்வலைகள் ஒரு நம்பிக்கை தந்தது வேறு ஒரு உலகத்தில் அவளை சஞ்சரிக்க வைத்தது. மற்றும் ஒரு பரிமாணத்தில் வாழ்க்கை நகர்த்ததற்கான நம்பிக்கையை அந்த செய்தியை உறுதி அளித்தது. வீராயி சொல்வதைக் கேட்டு எப்படியாவது அன்பால் அவனைத் திருத்தலாம் என்ற நம்பிக்கையில் நல்ல உறுதியாயிற்று. திருமணத்திற்கு பின்பு அதிகமாக பேசாத ரேணுகா தேவி காட்சி கண்ணன் இடம் பிரியமாக பேச தொடங்கினாள்.
அவனும் நல்லபடியாக தொழிலை பார்த்து தந்தை வைத்திருந்த பழைய பாத்திரங்களை எல்லாம் ரிப்பேர் செய்து புதிதாக ஓட்டல் தொடங்கி நல்லபடியாக வியாபாரம் பார்த்தான்.  வேறு காலத்திற்கு இவள் அம்மா வீட்டுக்கு சென்று வந்த காலத்தில் மீண்டும் பழையபடி பழைய கிழவி கதவ திறடிஎன்ற மாதிரி மீண்டும் வேதாளம் முருங்கை மரத்துக்கு ஏறியது எல்லாம் இருளாயிகிழவியின் கைங்கரியம் என்று நினைத்துக் கொண்டாள்.
குழந்தை பிறந்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் வீட்டுக்கு போனபோது அவன் உச்ச போதையில் நாள்தோறும் வந்து வம்பு இழுத்துக் கொண்டு இருந்தான்.
வேப்பம்பட்டி பெரிய பஞ்சாயத்துக்கு ஆளுகள் எல்லாம் வரவழைக்க சொல்லி பெரிய பஞ்சாயத்து கூட்ட வேண்டும் என்று நினைத்து ஒரு முடிவு எடுத்தவளாக ரேணுகா தேவி பஞ்சாயத்திற்கு எல்லோரையும் அழைத்தாள். ரேணுகா தேவி வாக்கப்பட்டபோது வந்த அத்தனை பெரிய மக்களும் அங்கே வந்திருந்தார்கள். பொண்ணு வீட்டுக்காரங்க ஒரு பக்கம் மாப்பிள்ளை காட்சி கண்ணு வீட்டுக்காரங்க இன்னொரு பக்கம்.
பெரிய கிடாமீசை வைத்திருந்த பெரியவர் தான் தொடங்கினார்.
“அம்மா ரேணுகா உன் மனசுல பட்டதெல்லாம் சொல்லுமா. என்ன நினைக்கிறியோ அது தெளிவா சொல்லு.  வழிமறை இல்லாமல் புரியிற மாதிரி சொல்லுமா.”
அவள் பேசப் போவதை பார்த்து எல்லோருக்கும் ஆச்சரியம் இவளா இங்கு பேசப்போகிறாள். குரல் வருமா பேச தெரியுமா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டு நின்ன பொழுது, ” ஐயா பெரியவங்கள கும்பிட்டுக்கொள்கிறேன்.  எனக்கு அதிகமா படிக்கவைக்கல. இந்த மனுசன நம்பி நான் வாக்கப்பட்டு இந்த ஊருக்கு வந்தேன். ஆனால் நல்ல மனுஷன் தான் எனக்கு எதுவும் குற்றம் வர வைக்கல.  எந்த விதமான தொந்தரவு இம்மிஷ கொடுக்கல ஆனா எங்க மாமியார் காரி குடிப்பா அவ குடிக்கு ஏதோ ராத்திரி ராத்திரி யாருக்கும் தெரியாம வாங்கி வந்து வீட்டுக்குள்ளே குடிக்கிறா அவ குடிச்சு குடிச்சு பழகிவிட்டு என் புருஷன் காரனையும் பழக்கி விட்டா.  ஒழுக்கமா வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சு குடும்பத்தை பாக்காம இப்படி ஆத்தாளுக்கு பாதி வாங்கி கொடுத்து இவர் பாதி ஊத்திக்கிட்டு சொத்த பூரா அழிச்சிடுவாருன்னு பயமா இருக்கு எங்களுக்கு இவர் மேல நம்பிக்கை இல்லை. எங்களுக்குன்னு ஒரு ஆம்பள புள்ள பொறந்து இருக்கு இனிமே அத பாக்கணும் குடும்பத்தை பாக்கணும் நல்லபடியா வாழனும் ஒரே பேச்சு. சாராயமா சம்சாரமா முடிவு என்னன்னு நீங்களே கேட்டு சொல்லுங்க. குடும்பம் நடத்தணும்னா இந்த ஆள குடிக்கிறதை நிப்பாட்ட சொல்லுங்க.”
இப்படி ஊர் முன்னாடி அவ பேசினது இவங்களுக்கெல்லாம் பெரிய மரியாதை குறைவா போச்சு. காட்சி கண்ணன் வம்பு பிடித்தவனாக ஆத்தாளின் பேச்சு கேட்டுக் கொண்டு “என்னால குடிக்கிறது நிப்பாட்ட முடியாது. நான் குடிச்சுக்குவேன் பொண்டாட்டியும் பாத்துக்குவேன். சம்மதம்னா சொல்லுங்க குடும்பம் நடத்துறேன் இல்லனா அத்து உடுங்க ” என்று நா கூசாம பேசினான் காட்சி கண்ணன்.
அன்று அவன் பேசிய வார்த்தை ஒன்றும் இடியாக அவள் மனதில் இறங்கியது என் மேல் காதல் இல்லை என் மேல் ஆசை இல்லை என் உடன் வாழ அவருக்கு விருப்பமில்லை. சாராயம் தான் முக்கியம் என சொன்ன அந்த மனிதனை திரும்பி கூட அவள் பார்க்க விரும்பவில்லை.
ஒன்றும் தெரியாத பெண்ணாக இருந்தவளுக்கு உலகம் புரிய தொடங்கியது. கையில் மகனைப் பிடித்துக் கொண்டு தன் ஊருக்கே சென்று விட்டாள். அது முதல் அவனைப் பற்றி அவள் நினைக்கவே இல்லை.
அண்ணன் ராசுவின் வற்புறுத்தின் காரணமாக இரண்டாம் தரமாக ஒருத்தனுக்கு வாக்கப்பட்டாள். அவனும், இவள் போட்டு இருந்த நகைக்காக ஆசைப்பட்டு முடிந்தவரை அவள் இளமையை அனுபவித்து விட்டு அவளை விரட்டி விட்டான்.
ஒட்டுமொத்தமாக எல்லா ஆண்களையும் வெறுத்துவிட்டு தன் ஊருக்கே வந்து கடை தொடங்கி பிள்ளையை 12 வரைக்கும் படிக்க வைத்து விட்டாள். இடையில் பலமுறை யார் யார் மூலமாகவோ காட்சி கண்ணன் இவளை பார்க்கவும் சமாதானம் பேசவும் பலமுறை முயற்சித்தான்.  அது ஒன்றுமே பலிக்கவில்லை.  கிழவி இருக்கும் வரை நம் வாழ்க்கை சரியாக வராது அவர்கள் ஒரு வேலை இறந்துவிட்டால் பார்க்கலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் கடைசி வரைக்கும் கிழவி குடியும் கொடுத்தனமாக தன் மகனையும் கெடுத்து சீரழித்துக் கொண்டிருந்தாள்.
காட்சி கண்ணன் மீது இருந்த கோபத்தை விட அவன் ஊர் மீது இருந்த கோபத்தை விட அவன் இருந்த திசை மீது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
கொஞ்சமும் விவரம் தெரியாத வயதில் தன் காதலை எல்லாம் அவன் மதிக்கவில்லை அவன் குடியடிமையாகி விட்டான் என்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மொட்டை அடித்து சடங்கு முடித்து வந்த தன் மகனை கட்டிக்கொண்டாள். அதுவரை அம்மாவின் முகத்தை கூர்ந்து பார்க்காத மகன் தினேஷ் அவளை அன்புடன் பார்த்தான். காட்சி கண்ணனுக்கு நடந்த இறுதி ஊர்வலத்தை பற்றியும் அப்பாவின் முகத்தை பற்றியும் அந்த ஊரை பற்றியும் விரிவாக அம்மாவிற்கு எடுத்துச் சொன்னான். அப்பனை படுகுழியில் தள்ளிய இருளாயி அப்பத்தா எப்பொழுதும் அதேபோலத்தான் அங்கே போவோர் வருவோரை பார்த்து குடிக்க காசு கேட்டு குடிப்பதற்கு சரக்கு வாங்கி வரச் சொல்லி பேசுவதையும் தினேஷ் மறைக்காமல் அம்மாவிடம் சொன்னான்.
அவள் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் “போய்வா கனவா பொழுதோட….”
யாழ் எஸ் ராகவன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!