தமிழகம்

மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து பேச வேண்டும்: சென்னை குறும்பட விழாவில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு.

51views
சென்னை தலைமைச் செயலகம் – புனித ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க “CSI புனித மேரி” தேவலாயத்தை பற்றிய ஆவணப்படம் ‘வெஸ்ட்மினிஸ்டர் அபே ஆப் தி ஈஸ்ட்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வியாழனன்று சென்னை கமலா திரையரங்கில் வெளியிடப்பட்டது.
வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், “இது ஒரு தேவாலயத்தின் கதை மட்டுமல்ல, ஒரு தேசத்தின் கதை. நம் தேசத்தின் கதை மட்டுமல்ல. நம்மை ஆண்ட தேசத்தின் கதை. தேவனின் பெயரால் அந்த ஆட்சி நடைபெற்றிருக்கிறது என்பது தேவனின் கதையாகவும், ஆளப்பட்ட மனிதர்களின் கதையாகவும் இதை பார்க்க வேண்டும்.
இந்த தேவாலயம் குண்டு துளைக்காத முறையில் கட்டப்பட்டது.  பீரங்கி தாக்குதலின் போது உள்ளே இருந்த  ராபர்ட் கிளைவ் குண்டு துளைக்காத கட்டுமானத்தால் உயிர் பிழைத்தார். இச்சம்பவத்தால் தேவன் மீதே அச்சம் ஏற்படுகிறது. இன்னொரு வகையில் யோசித்தால் பிரிடீஸ்காரர்களிடம் இந்த நிலம் சிக்காமல் போர்ச்சுகிசியர்கள் இடம் சிக்கியிருந்தால் பலமடங்கு கொடூரம் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கும்.
ஏனென்றால் போர்ச்சுக்கல் கைப்பற்றிய இடங்களில் நிகழ்ந்த காட்சிகளை நினைத்துப் பார்த்தால் பிரிட்டிஷார் ஆட்சி முறை அதைவிட மேல் என்று கூறலாம்.
இன்றைய சமூகத்தில் நிகழ்ந்திருக்கக் கூடிய சிலநல்ல மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சார்லஸ் மன்றோ. அவர் இல்லை என்றால் தமிழ்நாடு இன்னொரு பீகாரகவோ, உத்திரபிரதேசமாகவோ இருந்திருக்கும். ஜமீன்தார் முறை இல்லாமல் ரயத்வாரி முறையைக் கொண்டு வந்ததன் மூலம் கூடுதல் திறனோடு நிலக்குவியல் நோக்கி தமிழகம் நகராமல் இருக்க காரணமாக இருந்தார்.
350 ஆண்டுகால தேவாலயத்தின் வரலாற்றை மிக நேர்த்தியாக தொகுத்து வழங்கியுள்ளனர். கடந்த 300 ஆண்டுகால இந்திய வரலாற்றின் முக்கிய தடயங்கள் தேவாலயங்களுக்குள்ளும், ஆவணக் காப்பகங்களுக்குள்ளும் புதைந்துகிடக்கின்றன. இந்த வரலாறு எழுதப்படும் போது பல வரலாற்றின் வாசல்கள் திறக்கும். கிளாரிண்டா தேவாலயத்தினுடைய வரலாற்றை எழுதினால் அது தென் தமிழகத்தின் முக முக்கியமான வரலாற்று ஆவணமாக இருக்கும். தீயுக்குள் இருந்து பிறப்பெடுத்த நவீன பெண்ணின் கதையாக இருக்கும்.
அமெரிக்க மதுரை மிஷனரிகள் உருவாக்கிய தேவாலயத்தினுடைய வரலாற்றை எழுதினால் 200 வருட தென் தமிழகம் எப்படி இருந்தது என்பதற்கான ஆவணங்கள் கிடைக்கும்.
இறைப்பணியாளர்களுக்கும் காலனி ஆட்சியாளர்களுக்கும் இருந்த முரண், அதுதான் மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண். இவற்றை நீங்கள் பேச முன்வர வேண்டும். ஒரு பெரும் இயக்கத்தை துவக்கியிருக்கிறீர்கள். உலகிலேயே தேவாலயம் குறித்த முதல் ஆவணப்படம் இதுவாகத்தான் இருக்கக்கூடும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தேவாலயத்தின் கதையை ஸ்ரீஜித், கிருபா லில்லி எலிசபெத், ரபீக் இஸ்மாயில் மூவரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் அழகியல். இந்த அழகியல் பாதுகாக்கப்பட வேண்டும். அதை சில சக்திகள் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் சிதைக்க நினைக்கிறார்கள். அந்த அழகியலை அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்போம்.
செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!