கட்டுரை

நானும் என் அமீரக பயணமும்….

635views
Rj நாகா
நான் மீடியா மற்றும் கீழை நியூஸ் இணைந்து வருங்காலங்களில் ஊடகத்துறையில் பல புதிய  முயற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் இனிய தருணமிது.
ஒரு சிறு பயணமாக அக்டோபர் மாத இறுதியில் ஷார்ஜாவில் நடைபெற இருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு செல்ல திட்டமிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செல்கிறேன்.
அமீரகம் நிறையவே மாறியிருந்தது.
துபாயில் அரசு பேருந்துகள் செல்ல புது வழி தடத்தை உண்டாக்கி இருந்தனர்.
ஒவ்வொரு நிமிடமும் புதுமைகளை உள்ளடக்கிய அமீரகத்தில் 15 நாட்கள்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் ஷார்ஜா பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கினேன்.
அமீரகம் ஒரு தாய் பாசத்துடன் என்னை அன்பாக ஏந்திக்கொண்டது.
முதல் நாளே மிக முக்கிய நாளாக அமைந்துவிட்டது. நண்பர் சரவணன் தன்  வீட்டில் என்னை தங்கிக்கொள்ள சொன்னது பேரன்பின் அழகு.
ஷார்ஜா அபுசகாராவில்  இருந்து துபாய்க்கு செல்வதும் நண்பர்களை சந்திப்பதுமாகவே காலை முதல் இரவு வரை பயணம் கட்டமைக்கப்பட்டது.
நவம்பர் 2 முதல் 13 வரை புத்தகக் கண்காட்சி.  நவம்பர் ஒன்றாம் தேதி கலந்தாய்வுக் கூட்டம்.  41 வது இந்த புத்தகக் கண்காட்சியில் 83 நாடுகளை சேர்ந்த 1632 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட இந்த கண்காட்சியில் 2000 அரங்குகள் 13,00,000 புத்தகத்தலைப்புகள் 17,00,000 பார்வையாளர்கள் என பங்கெடுத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பக உரிமையாளர் திரு. புகழேந்தி, நூல்குடில் பதிப்பகம் சார்பாக திரு.மெய்யப்பன், காலச்சுவடு பதிப்பகம் சார்பாக திருமதி மைதிலி, யுனிவர்சல் பப்ளிகேஷன் திரு. ஷாஜகான், டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக திரு. வேடியப்பன் இவர்களுடன் நானும் கலந்து கொண்டேன்.

புத்தகங்கள் வாசிப்பதும், எழுத்தாளர்களை கௌரவப்படுத்துவதும் ஒரு நாட்டின் உன்னத செயல்களில் ஒன்று.

ஒருபக்கம் புத்தகக்கண்காட்சியில் பங்குபெற்றாலும் இன்னொரு பக்கம் வணிகத்தின் அடுத்தகட்ட நகர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தேன்.
நண்பர் செய்யது ஆபிதீன் எனக்கு இறைவனால் எனக்கு கொடுக்கப்பட்ட உன்னத நண்பர் என்பேன்.
அவர் கீழை நியூஸ் என்ற இணைய செய்தி நிறுவனத்தை பல ஆண்டுகள் நடத்திக் கொண்டிருந்தவர்.  “சத்தியபாதை” என்ற மாத இதழையும் நடத்திய மிகப்பெரிய  அனுபவமும் அவருக்கு உண்டு.
அவருடன் இணைந்து வரும்  காலங்களில் நான் மீடியாவின் எல்லா ஊடகப் பணிகளும் நடைப்பெற சாத்தியங்களை உண்டு பண்ணியிருக்கிறேன்.

அந்தச் செயல் திட்டத்திற்கு அமீரகத்தில் சில முக்கிய பிரபலங்களையும், ஆகச்சிறந்த தொழிலதிபர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்தோம்.
மன வளத்தை பாதுகாக்க தொடர்ந்து எழுதியும் பேசியும், ஆலோசனை வழங்கியும் வரும் பிரபல மனநல நிபுணர் திருமதி ஃபஜிலா ஆசாத் அவர்களை அல் வஹீதாவில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்தோம்.

வரும் காலங்களில் தனது பங்களிப்பை   நம் ஊடக செய்லபாடுகளுக்கு வழங்குவதாக சொன்னார்.
நண்பர் ஆபிதீனின் ஊர்க்காரர் என்பது கூடுதல் தகவல்.
அமீரகத்தில் இரண்டு வானொலிகள் பிரபலம்.  அதில் மிக முக்கியமாக தற்போது மக்களால் கவனிக்கப்படும் கில்லி 106.5 பண்பலையின் உரிமையாளர் திரு. கனகராஜா அவர்களை அஜ்மானில் இருக்கும் அவரின் இன்னொரு அலுவலகத்தில் சந்திக்க சென்றோம்.
சூடான சுலைமானியுடன் எங்கள் உரையாடல் ஆரம்பமானது.
சௌதியில் இருந்து காலையில் விமானம் வழியாக துபாய் வந்திருந்த ஆபிதீனின் களைப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகிக்கொண்டிருந்தது.

மூன்றாவது வானொலி வந்துவிடக்கூடாது என்றும் இருக்கும் வானொலியின் பலத்தை கூட்டக்கூடிய சாத்தியங்களை விவாதித்தோம்.
கில்லியில் நேரம் slot  எடுப்பது குறித்து பேசினோம்.  சில நேர்காணல்களை தொடர்ந்து செய்யுமாறு என்னை அவர் கேட்டுக் கொண்டார்.
விரைவில்  எங்கள் திட்டப்படி கில்லியில் நானும்-கீழைநியுஸும் இணைந்த தயாரிப்பு நிகழ்ச்சி ஒன்று  “வானொலி வரலாற்றில் முறையாக” என்ற அடையாளத்துடன் வலம் வரலாம்.
பொழுதிற்கு  நன்றி சொல்லி விடைப் பெற்ற எங்கள் தொடர் பயணம் மறுநாள் காலையில் புஜைராவிற்கு ஆயத்தமானது.  மதியம் சந்திக்க இருந்த சந்திப்பு காலை என்றான பிறகு வேகத்தை துரிதப்படுத்தினோம்.
திரு,முருகேசன் அவர்கள் புஜைரா தமிழ் சங்கத்தை நிறுவி பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி அனுபவம் வாய்ந்தவர்.
மாஸ் ஈவென்ட்ஸ் என்கிற நிறுவனத்தை அவர் துணைவியார் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தாதா -என்ற ஒரு உணவகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் அவர் ஒரு கணக்கு பதிவாளர் என்பது கூடுதல் தகவல்.
காலை சிற்றுண்டியுடன் பேச்சு ஆரம்பமானது. வரும் பொங்கல் தமிழர் திருவிழாவிற்கு தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகளுக்கு நுண்ணணு ஊடக அனுசரணையாளராக ( Digital partner ) நாம் இணைவதற்கான ஒப்பந்த வடிவத்தை விவாதித்தோம்.
விரைவில் இணைந்து செயல்பட சாத்தியங்கள் உருவாகும்.
மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளுக்கு வணிகம் செய்துவரும் Power flow நிறுவனத்தின் பங்குதாரர் திரு கல்லிடைக்குறிச்சி முகமது முகைதீன் அவர்களை அழகான அலுவகத்தில் கொட்டும் வெயில் நேரத்தில் சந்திக்க சென்றோம். பேரன்பின்முகமன்களுடன் வரவேற்றார்.

அவர் ஒரு தமிழ் ஆர்வலர், சமூக பற்றாளர், எழுத்தாளர்.
நான் பண்பலையில் தொடர்ந்து அவரது செயல் திட்டங்களுக்கான வரைவுத் திட்டத்தினை நாங்கள்  விரிவாக விவாதித்தோம்.
அங்கிருந்து புறப்பட்டு ராசல் கைமா தமிழ்ச்சங்க கௌரவ தலைவர் திரு பூபதி அவர்களை மெட்றாஸ் ரெஸ்டாரண்டில் சந்தித்தோம்.
நல்ல பசி. சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டே தமிழ்ச்சங்க பணிகளின் முன்னெடுப்புகளுக்கு  ஊடக அனுசரணை வழங்குவது குறித்தான பேச்சாக அது அமைந்தது.
அமீரகத்தில் எனக்கு இன்று இருக்கும் இவ்வளவு  வரவேற்புக்கும், அங்கீகாரத்திற்கும் இவர்தான் காரணம்.  மீண்டும் ஒரு வாய்ப்பை இவர் வழங்காமல் போய்  இருந்தால் இன்றும் இவனும் இல்லை இந்த நானும் இல்லை.
திரு. சோனா ராம் அவர்கள்.  தமிழ் 89.4 பண்பலையின் முன்னாள் உரிமையாளர். தற்போது ASR நிறுவனத்தின் சொந்தக்காரர். கணக்கு பதிவாளரான இவரின் கணக்கு இதுவரை தப்பியதேயில்லை.

உயரமான கட்டிடத்தில் சந்தித்தோம். Business Bay பகுதியில் அவரது அலுவலகம்.
உலகத்தின் உயரமான கட்டடிடம் இருக்கும் புர்ஜ் கலீபா பக்கத்தில். அன்னார்ந்து பார்த்தால் உழைப்பின் உயரத்தை நம்மால் உணர்ந்துகொள்ளமுடியும்.
நிறைய  ஆலோசனைகள் வழங்கினார்.
எவரையும் சார் என்று அழைப்பதில் ஆர்வம் காட்டாத நண்பர் ஆபிதீன்  அவரை சார் என்று  அழைக்க பிரியப்படுவதாக சொன்னது தான் என்னை ஆச்சரியப்படுத்தியது.
உயர்ந்த கட்டிடங்களில் இருப்பதால் மட்டுமே யாரும் பெரிய மனிதர்கள் ஆவது கிடையாது. உயர்ந்த எண்ணங்களால் மட்டுமே அது வாய்க்கப்படுகிறது. அது என் நண்பருக்கும் நான் மதிக்கும் திரு சோனா ராம் அவர்களுக்கும் பொருந்தும்.
அங்கிருந்து மீடியா உலகில் அடிக்கடி தன்னை நிறமாற்றிக் கொண்டிருக்கும் என் மதிப்பிற்குரிய திரு அசோகன் சுப்ரமணியன் அவர்களை ஸ்டுடியோ சிட்டியில் இருக்கும் அவரது கலையகத்தில் சந்தித்தோம்.
வீடியோ தொழில் நுணுக்கங்கள்  மற்றும் புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் குறித்து பல விடயங்களை கதைத்து விட்டு கருப்பு நிற தேநீரை இரண்டு மிடறு பருகிவிட்டு எப்படியாவது  அமீரகத்தின் ஊடக செயல்பாட்டில் நானும்-கீழையும் இணைந்து வெற்றிப் பயணத்தை தொடங்க சபதமேற்ப்படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம்.
அமீரகத்தில் குறுநாடகம், குறும்படம், இதெல்லாம் ஒரு திருவிழாவாக நடத்திக்கொண்டிருக்கும் மறைந்த ஆளுமை திரை ஜாம்பவான் எழுத்தாளர் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பெயரன் திரு.ஆனந்த் சுப்ரமணியன் அவர்களையும், அமீரக ஈவென்ட்டுகளில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்திக் கொண்டிருக்கும் திருமதி ரமா மலர்வண்ணன் அவர்களையம் பில்லிசாயில் சந்திப்ப்பதாக ஏற்பாடு.
சில பல காரணங்களால் ஆனந்த் அவர்களை சந்திக்க முடியாவிட்டாலும் அந்த வெற்றிடத்தை ரமா அவர்கள் இட்டு நிரப்பினார்.
வருங்காலத்தில் நமது ஊடக செயற்பாட்டிற்கு துணை செய்வதாகவும் சொல்லி தன்  வாழ்த்துகளை  தொலைபேசி வழியாக தெரிவித்து நம்மை உற்சாகப்டுத்திய  திரு ஆனந்த் அவர்களை நம்மால் மறக்கமுடியாது.
ஏற்கனவே திட்டமிட்டப்படியே ஈமான் பண்பாட்டு கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஆகச்சிறந்த பத்திரிகையாளர் திரு ஹமீது யாசீன் அவர்களை மத்திய நேர மந்தி சாப்பிட சென்று அளவளாவியது கூடுதல் ஆனந்தம்.
நிறைய  ஆலோசனைகளை முன்வைத்தார். இணைந்து செயல்பட்டு பலம் பொருந்திய ஊடகமாக நாம் வருவோம் என்று நமது தன்னம்பிக்கையை  அதிகப்படுத்தினார்.  இவருடன் GFX Finance நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் நண்பர் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் இணைந்து கொண்டது கூடுதல் பெருமை.

வெள்ளிக்கிழமை காலையில் திரு ஜெபக்குமார் அவகளின் ஏற்பாட்டில் சித்திரையின் வைகறை கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது.
அமீரகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் வெற்றிகரமாக வலம்வரும் பல  தொழிலதிபர்களை எங்களால்  சந்திக்க முடிந்தது.
RIDE app – உணவு பட்டுவாடாக்காகவே( Food Delivery )  பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டது இந்த செயலி.

ஏற்கனவே தமிழகத்தில் கீழக்கரையில் வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் கீக்கீ ( KEEGGI ) செயலியின் அடுத்த கட்ட நகர்வு அமீரகத்தில் RIDE app.

சந்திப்பும், சிந்திப்புமாக அமீரக பயணம் இருந்தது.
இதற்கிடையில் புத்தகக்கண்காட்சியில் “நீயா நானா” திரு கோபிநாத் அவர்களை சந்தித்ததும், ஆகச் சிறந்த எழுத்தாளர் நடிகர் திரு ஷாஜி அவர்களை சந்தித்ததும், 64 கிராமப்புற மாணவ மாணவிகளுடன் அமீரக மண்ணின் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்த்தித்ததும் இந்த பயணத்தின் மறக்க முடியாத நினைவுகளாக பதிபவை.
இலக்கை தீர்மானித்தபடி துடுப்பை செலுத்துகிறோம்.
இறைவன் ஒரு மாலுமியாக எங்களை வழி நடத்துவாராக…..
எல்லா புகழும் இறைவனுக்கே.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!