தமிழகம்

சதுரகிரிமலையில், நாளை தேய்பிறை பிரதோஷம் மற்றும் தை அமாவாசை பூஜைகளுக்காக, சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி

57views
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள். நாளை, தை மாத தேய்பிறை பிரதோஷம் நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை தேய்பிறை பிரதோஷம், வரும் 21ம் தேதி (சனி கிழமை) தை அமாவாசை என நாளை முதல், வரும் 22ம் தேதி (ஞாயிறு கிழமை) வரை 4 நாட்கள் பக்தர்கள், சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தை அமாவாசையன்று முன்னோர்கள் ஆன்மா சாந்தி பெறுவதற்காக, சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். சித்தர்கள் வாழும் புண்ணிய மலை என்று, ஏராளமான பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், தை அமாவாசையன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனி கிழமையன்று அமாவாசை வருவதால், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பக்தர்களின் வருகையை எதிர்பார்த்து, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
செய்தியாளர் : வி.காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!