146views
ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் முழுமையாக கிடைக்க அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்ட அளவில் மேற்கொண்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் முன்னிலையில் அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. விவசாயப்பணிகள் துவங்கியதை யொட்டி விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அந்தந்த ஆண்டிற்குரிய வேளாண் உபகரணங்களை மானியத்துடன் வழங்க வேண்டும். கலைஞரின் ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்ட செயல்பாடுகள், விவசாயிகளின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி பகுதிகள் மட்டுமின்றி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ப தரிசு நிலங்கள் மேம்பாடு, பண்ணைக்குட்டை அமைத்தல் பணிகளை முன்னுரிமை படி இத்திட்டம் மூலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தனிநபர் வீடு கட்டும் திட்டம், மகளிர் சுய உதவிக்குழு மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து திட்டங்களை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும். கலைஞர் நகர்புற திட்டம், நமக்கு நாமே திட்டம், அமிர்த் சர்வோர் திட்டங்களை பயனாளிகளுக்கு உரிய காலத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.






