தமிழகம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியை, மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

213views
இந்தியத் திருநாட்டின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணை மேயர்  விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 31 பேருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மேயர் சங்கீதா இன்பம் வழங்கினார். சிவகாசி மாமன்றத்தில் 48 உறுப்பினர்கள் உள்ளனர். மன்ற உறுப்பினர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் உட்கட்சியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில், மாமன்ற உறுப்பினர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 38 உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளுக்கு வராமல் புறக்கணித்தனர்.
இதனால் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. அப்போது போட்டோ எடுப்பதற்கு வசதியாக என்று, தூய்மை பணியாளர்களை தரையில் அமர வைத்து மேயர், துணை மேயர், ஆணையாளர் உட்பட பலர் தூய்மை பணியாளர்களுக்கு பின்னால் நின்று கொண்டு போட்டோ எடுத்துள்ளனர். தூய்மை பணியாளர்களை அவமதிக்கும் வகையில், அவர்களை தரையில் அமர வைத்ததாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதிகாரிகள் இனிப்புகள் வழங்கினர்.

சிவகாசி மாநகராட்சி ஆனபின்பு நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியை, பெருவாரியான மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு செய்தது, தூய்மை பணியாளர்களை தரையில் அமர வைத்தது என பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!