தமிழகம்

தென்காசியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

105views
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் முதல்வரின் முகவரித்துறையின் சிறப்பு குறைதீர்வு வாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். தமிழக முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தின் மூலம் இயன்முறை சிகிச்சை கருவிகளோடு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் தசை பயிற்சி அளித்தல், செயல்திறன் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு, விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் மற்றும் இத்துறையின் வாயிலாக மறுவாழ்வு திட்டங்கள் குறித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று ( டிசம்பர் 3 ) வழங்கினார்கள்.
அதன் அடிப்படையில் நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு இருப்பிடத்திற்கே சென்று மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் தசை பயிற்சி அளிக்க அனுப்பி வைத்தார். அவ்வாகனத்தின் தசைபயிற்சி அளித்தலுக்காக வந்த மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு நடைவண்டி (WALKER) மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 360 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) நடராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர நாராயணன், உதவி ஆணையர் (கலால்) ஜி. ராஜமனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!