தமிழகம்

இலங்கை பூர்வீக தமிழர்களுக்கு நிரந்தர குடியுறிமை வழங்க வேண்டும் ! மக்கள் உரிமை இயக்கத்தின் நிறுவனர் தலைவர் சிவனடியார் கோபால் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் !

52views
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும். இலங்கையில் இரு வகையான தமிழர்கள் உள்ளனர். 1.பூர்வீகத் தமிழர்கள். 2. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையகப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கவும், பராமரிக்கவும் அழைத்துச் செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள். 2012 ஆம் ஆண்டு இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கின் படி இந்தியப் பூர்வீகத் தமிழர்கள் 839,504 பேரும், இலங்கையின் பூர்வீகத் தமிழர்கள் 2,269,266 பேரும் இலங்கையில் வசித்து வருகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இன மோதல்களின் தொடர்ச்சியாக உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்த வித பாதுகாப்புமில்லாத மீன்பிடிப் படகுகளில் 1983ம் ஆண்டு முதன் முதலில் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். வசதி வாய்ப்புள்ள சிலர் விமானம் மூலமும் தமிழகத்திற்கு வருகை தந்தனர். தொடர்ந்து 1983-1987, 1989-1991, 1996-2003, 2006-2010 ம் ஆண்டுகளிலும் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தனர். தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்தின் கணக்கின் படி இக்காலப்பகுதியில் மொத்தமாக 3,03,076 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் நோக்கி வந்துள்ளனர்.
அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. அகதியாக வரும் மக்களை இங்கு வைத்து அவர்கள் உண்மையான அகதிகள் தானா என்பதை உறுதி செய்த பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போராளிக் குழுக்களைச் சார்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் பட்சத்தில் மண்டபத்தில் உள்ள தடுப்பு முகாம்களிலோ அல்லது செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இருந்த சிறப்பு முகாம்களிலோ தடுத்து வைக்கப்பட்டனர். தமிழகத்தில் மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவாணிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு,  வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்கள் ஆகும். இங்கு ஒவ்வொரு முகாமிலும் சுமார் 500 முதல் 1500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஓரளவு பொருளாதார வசதியுடன் வருகை தந்தவர்கள் காவல்துறைப் பதிவுடன் முகாம்களுக்கு வெளியே சென்று வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை காவல் நிலையம் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தங்களது பதிவுகளை அல்லது அனுமதிகளை புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.  தற்போது தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்த 65000 பேர் வசித்து வருகின்றனர். இவர்களைத் தவிர முகாம்களுக்கு வெளியே சுமார் 35000 பேர் வசித்து வருகின்றனர்.
குடும்பத்தோடு அகதிகளாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் தமிழக அரசையும் மத்திய அரசையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!