தமிழகம்

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் இணைந்து நடத்திய ‘வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்கம்

71views
தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை,ஐசிடி அகாடமி மற்றும் இந்திய உணவுக் கழகம் ஆகியன இணைந்து வாழ்க்கை அறிவியல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதுமையான வணிக நடைமுறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி என்ற தலைப்பிலான ஒருநாள் சர்வதேசக் கருத்தரங்க நிகழ்ச்சியை இன்று 21.12.22 காலை 10.00 மணியளவில் நடத்தின. இறைவணக்கத்துடன் இனிதே துவங்கிய இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ் சுமையா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
கல்லூரியின் தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன்னிசா அப்துர்ரஹ்மான் அவர்கள் இணைய வழி வாழ்த்துரை வழங்கினார்.கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனத் தொடர்பு இயக்குநர் எம் எஸ் இர்ஃபான் அஹமது அவர்கள் குறிப்புரை வழங்கினார்.பின்னர் பல்வேறு கருப்பொருள்களின் அடிப்படையிலான ஆறு தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. வாழ்க்கை அறிவியல் பற்றிய முதல் அமர்வை ஐக்கிய நாட்டின் (UK) உணவு ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பல்கலைக்கழகத்தின் துணை இயக்குநரும் நியுட்ரிஜெனிடிக்ஸ் பேராசிரியருமான முனைவர் விமல்கரணி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.அதில் நியுட்ரிஜெனட்டிக்ஸ் உடல் பருமன், நீரழிவு மற்றும் இதய நோய்களை உருவாக்க மரபணு பிரதிகள் எவ்வாறு காரணமாகின்றன என்பது குறித்து பேசினார்.
இரண்டாம் அமர்வு துல்லிய ஊட்டச்சத்து அணுகுமுறை என்ற தலைப்பில் மலேஷியாவின் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் இரசாயன அறிவியல் உயிரியல் மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சித் துறையின் உதவிப் பேராசிரியரான முனைவர் அண்டோ கோர்டெலியா டிரானிஸ்லாஸ் ஆண்டனி தனபால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.நியுட்ரிஜெனோமிக்ஸ் மற்றும் புற்றுநோய் என்ற தலைப்பிலான மூன்றாம் அமர்வை வங்காள தேச ஊட்டச்சத்து மற்றும் உணவு அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் கலிதா இஸ்லாம் அவர்கள் நடத்தினார். முழுமையான ஆற்றல் மதிப்பீடு மற்றும் இரசாயன எதிர்வினைக் கண்டுபிடிப்புக் கணக்கீட்டுப் பொருட்கள் அறிவியலின் சமீபத்திய கோட்பாட்டு முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான நான்காவது அமர்வை ஜப்பானின் டோஹோகு பல்கலைக்கழகத்தின் நியு இன்டஸ்ட்ரி கிரியேஷன் ஹேட்சரி சென்டரின் எமிட்டஸ் பேராசிரியர் முனைவர் யோஷிகி கவாசோ அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.அதில் உயிர் அறிவியல் மற்றும் வாழ்க்கை அறிவியல் ஆகியவற்றின் எதார்த்தப் போக்கு கணக்கீட்டு அறிவியலுக்கு எப்படி ஒரு தீர்வாகிறது என்பது பற்றிப் பேசினார்.

 

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் SLIT வர்த்தகப் பள்ளியின் இணை முதன்மையர் கலாநிதி நாகலிங்கம் நாகேந்திர குமார் அவர்கள் ஐந்தாம் தொழில்நுட்ப அமர்வை நடத்தியதுடன் உந்துவிசை வாடிக்கையாளர்களின் ஆளுமை பற்றியும் பேசினார். உயர் திறன் தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் விநியோகிக்கப்பட்ட கணினிகள் எவ்வித ம் பயன்படுத்தப்படுகிறன என்ற தலைப்பிலான ஆறாம் அமர்வில் சூஸ் துனிசியா பல்கலைக்கழக மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்ப உயர் நிறுவனத்தின் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஹம்தி ஹசன் தலைமையேற்று நடத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடந்த நிறைவு விழா நிகழ்ச்சியில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவர் வருண் குமார் அவர்கள் நீரழிவு நோயைப் பற்றி தகவல்களை எடுத்துரைத்தார். இறுதியாக மனையில் மற்றும் ஊட்டச்சத்து துறையின் தலைவர் முனைவர் முத்து மாரீஸ்வரி நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்சியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளின் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத் கான் அவர்களும் பேராசிரியர்களும் அலுவலகப் பணியாளர்களும் செய்திருந்தனர்.
செய்தியாளர் சந்தோஷ் சிவம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!