தமிழகம்

தென்காசியில் டெல்லியை சேர்ந்த செவிலியர்; காணாமல் போன நிலையில் குடும்பத்தினருடன் இணைந்ததால் மகிழ்ச்சி

327views
தென்காசியில் டெல்லியை சேர்ந்த காணாமல் போன செவிலியர் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிக்கு பின் குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லியை சேர்ந்த செவிலியர் ரூபி. அவர் திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்த நிலையில் தம்முடைய சான்றிதழ்கள், உடைமைகள் தொலைந்து போக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தென்காசி பேருந்து நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் சுயநினைவின்றி சுற்றி திரிந்துக் கொண்டிருந்தார். பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஜெயபிரகாஷ், தென்காசி வட்ட காவல்துறை உதவியுடன் வடகரை பகுதியில் அமைந்துள்ள அன்பு இல்லம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு முதற்கட்ட முதலுதவி சிகிச்சை, உணவு உடை, ஆற்றுப்படுத்தல், காப்பக பொறுப்பாளர் ராஜேஷ் அளித்தார். காப்பகத்தில் தங்கியிருந்த அவரால் தம்முடைய விலாசம், உறவினர் பற்றிய குறிப்புகளை கூற இயலவில்லை. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட அவருக்கு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர மனநல பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோயின் தாக்கம் காரணமாக அவரது விலாசம் தொலைபேசி எண் போன்ற விவரங்களை கூற இயலவில்லை. தன் கணவர் ஒரு மருத்துவ பிரதிநிதி என்பதை மாத்திரம் மறைமுகமாக கூறினார். இதையடுத்து மனநல மருத்துவர் நிர்மல் அந்த நிறுவன அனைத்து மாநில அதிகாரிகள் மூலம் விசாரித்த போது டெல்லியில் அவர் இருப்பது கண்டறியப்பட்டது.
டெல்லியில் உள்ள அவரது தொலைபேசி எண் கிடைக்க பெற்று தொடர்பு கொண்டு ரூபியின் தற்போதைய பாதிப்பை பற்றி விளக்கி கூறினார். இதன் தொடர்ச்சியாக அவரது சகோதரி காப்பகத்தில் உள்ள ரூபியை வீடியோ காலில் தொடர்பு கொண்டு அடையாளம் கண்டு கொண்டார். ரூபியை காணாது அவரது குழந்தைகளும், குடும்பமும் சோகத்தில் இருந்ததாகவும், இந்த செய்தி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். காப்பகம் வந்து அவரை கூட்டி செல்வதாக உறுதியளித்தார்.
இதையடுத்து திங்கள் கிழமை காலை ரயிலில் ரூபியின் குடும்பத்தினர் தென்காசி வந்தடைந்தனர். உறவினர்களை கண்ட ஆனந்தத்தில் ரூபி அவர்களை கட்டிபிடித்து மகிழ்ந்தார். ரூபியின் 12 வயது மகள் தாயை கட்டிப்பிடித்து மகிழ்ந்ததை பார்க்கும் போது அனைவரும் கண்களிலும் கண்ணீர் வந்தது. தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் இணை இயக்குநர் பிரேமலதா முன்னிலையில், மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் ரூபி அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டார்.
மேலும் ஒரு மாதத்திற்கான மனநல மாத்திரைகளை வழங்கி தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் உறைவிட மருத்துவர் ராஜேஷ், மனநல மருத்துவர் நிர்மல், நோடல் ஆபிசர் கார்த்திக் அறிவுடை நம்பி, காப்பக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர். ரூபியும் அவரது உறவினர்களும் மாவட்ட அதிகாரிகளுக்கும் காப்பக செவிலியர்கள், சமூக நல பணியாளர், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றிகள் கூறி விடை பெற்றனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!