தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது என கூட்டத்தில் முடிவு

57views
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம், கொசவங்குளம், திருவரங்கை, டி.கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சேரந்தை, சேனாங்குறிச்சி, அடஞ்சேரி, கல்பார் கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஏர்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆறாம் வகுப்பு முதல் படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு உரிய நேரத்தில் அரசு பேருந்து வசதி இல்லை. ஏற்கனவே இயங்கிய அரசு பேருந்துகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பள்ளிக்கு சென்று வர ஆட்டோ பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இக்கிராமத்தினர் அரசு உப்பு நிறுவன தொழிலாளர்கள் வாழும் பகுதியாகும். மிகவும் .பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவ, மாணவியர் என்பதால், தினமும் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தொடர்ந்து படிக்க முடியாமல் இடைநிற்றல் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண கிராம தலைவர்கள், அரசு உப்பு நிறுவன தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சேரந்தையில் இன்று மாலை நடந்தது.
உப்பு நிறுவன சங்க துணை செயலர் வடிவேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் எம்.சிவாஜி, உப்பு நிறுவன சங்க தலைவர் கே.பச்சமால், உப்பு நிறுவன சங்க துணை தலைவர் முருகவேல் உட்பட கிராம தலைவர்கள், உப்பு நிறுவன தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுடைய படிப்பு கனவை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியரை சந்தித்து பள்ளி செல்லும் நேரத்திற்கும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் நேரத்திற்கும் அரசு பேருந்து வசதி செய்து தரக்கோரி பள்ளி குழந்தைகள், பெற்றோர், உப்பு நிறுவன சங்க தொழிலாளர்களுடன் சென்று மனு அளிப்பது
என முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!