தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு

25views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி ஊராட்சி கிராம மக்கள் அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்டது ஆண்டிப்பட்டி ஊராட்சி.  இந்த ஊராட்சியில் அண்மையில் புதுவாழ்வு திட்ட பணியாளர்களை கொண்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என ஒரு பட்டியல் எடுக்கப்பட்டதாகவும், இந்த பட்டியலில் முறைகேடு உள்ளதாகவும் இதனால் கிராமத்தில் ஏனைய பேருக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் 100 நாள் வேலை கிடைப்பதில் தடை ஏற்படுவதாக கூறியும், கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் அக்கிராம மக்கள் இன்று 100 நாள் வேலைப் பணிகள் நடைபெறும் பணித்தளத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்படவே ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடைய பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடம் வந்த வாடிப்பட்டி போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் பணி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!