தமிழகம்

பணி நிரந்தரம் கோரி பரிதவிக்கும் பகுதி நேர ஆசிரியர்கள் : தமிழ்நாடு முதல்வருக்கு 1 லட்சம் மனு அனுப்பி கோரிக்கை

92views
கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையத்திலிருந்து தமிழக முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒரு லட்சம் மனு அனுப்பும் பணி தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பாண்டியன், லதா ஆகியோர் தலைமையில் ஒரு லட்சம் மனுக்கள் அனுப்பும் பணியைத் தொடங்கி வைத்துக் கூறியது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதி அறிவித்துள்ளதுபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனுக்கள் அனுப்புகிறோம். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில், நடைபெற்ற 2 பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பணி நிரந்தரம் அறிவிக்கவில்லை.
நடைபெறவுள்ள 3-வது பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  இதுவரை 6 கட்சியினர், சட்டப்பேரவையில் பேசியும் மற்றும் அனைத்துக்கட்சியினரும் எங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வருகிறார்கள்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கடந்த 10 ஆண்டாக சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் பேசிய கோரிக்கையைதான் நாங்கள் கேட்கின்றோம்.  நாங்கள் 12 ஆண்டுகளாக ரூ. 10ஆயிரம் தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம்.
எனவே, கால தாமதம் செய்யாமல் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வடிவேல், சங்கர், ஜெயந்தி,தமிழ்ச்செல்வி, சுமதி, விஜி உட்பட பலர் பங்கேற்று, மனுக்களை அனுப்பினர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!