கவிதை

சொர்க்க வாசல்.

195views
பத்தடி தவிர்த்து
புழுதி படிந்த பெரிய வீடும்
புழங்காத ஆடம்பரப் பொருட்களும்
வறுமையறியா வயிறும்
உறங்காத விழிகளும்
உறக்கம் கலையாத அலைபேசியும்
அலைக்கழிக்கிறது.
உன்னை விடவும்
ஓடி உழைப்பேன் என்று
உயரே பார்த்த கடிகாரம்
முக்காலமும் ஓடி
எக்காளம் இசைக்கிறது.
புயலின்
ஆங்கார ஓசை மனதில்
புயல் அடித்து ஓய்ந்த
அலங்கோல ரீங்காரம்
வீட்டில்
எதிரே
என் பெயர்
எழுதிய சோறு
எடுத்துக் கொண்டு புறப்பட்டால்
எதிர்ப்பட்ட எவ்வளவு பேர்
பசியில்
எச்சில் இலைக்குக் கூட
எத்தனை
நாய்கள்.
சிதறிய பருக்கைக்கு
சிறகைச் சுருக்கிய பட்சிகள்
காலிச்
சட்டியோடு வீடு திரும்புகையில்
மனம் மகிழ்வால் நிரம்பி
வழிகிறது
ஓங்கார இசை
உள்ளும் புறமும்
நடைபாதை கூட
சொர்க்க வாசலாக
மிதக்கிறது
சு சுசிலா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!