தமிழகம்

சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை தூர்வாரி மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்

46views
சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி தூர்வாரி, மிகப்பெரும் நீர்நிலையாக மீட்டெடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகவும், தண்ணீர் தட்டுப்பாடு மிகுந்த பகுதியாகவும் இருந்து வந்தது. மேலும் இந்தப் பகுதியில் முள் செடிகளும் அதிகமாக இருப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து போனது. இதனை சீரமைக்க வேண்டும் என்று இந்தப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முடிவு செய்தனர். இவர்கள் ஒன்று கூடி வஸ்வவனம் என்ற சமூகநல அமைப்பை துவக்கினர். சமூகவலைதளம் மூலம் ஒன்றிணைப்பு பணிகளை செய்த இவர்கள், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த லாக்டவுன் காலத்தில், முதன்முறையாக தங்களது பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்தனர்.
மரக்கன்றுகளுக்கு ஊற்றுவதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்போது தான் விஸ்வநத்தம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருந்த கண்மாய் ஒன்று மண்மேவி புதைந்து போனது தெரிய வந்தது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் முழுமையான ஒத்துழைப்புடன், முதல்கட்டமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான கண்மாயை தூர்வாரும் பணிகளை துவக்கினர். சுமார் 6 மாத காலம் கடுமையான உழைப்பினால் தூர்ந்து கிடந்த கண்மாய் மீட்டெடுக்கப்பட்டது. மீட்டெடுத்த கண்மாயின் நடுவில் மியாவாக்கி காடு அமைக்கப்பட்டது.
தற்போது பெய்த மழையினால், தூர்வாரப்பட்ட கண்மாய் நிரம்பியுள்ளது. கண்மாயில் நீர் நிரம்பியிருப்பதால், இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்திருப்பதாக இந்தப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர். தூர்ந்து போன கண்மாயை மீட்டெடுத்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அந்தப்பகுதி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!