தமிழகம்

நெல்லையில் கலைஞர் தமிழ் 100 பன்னாட்டு கருத்தரங்கம்; கவிஞர் பேரா அறிக்கை

151views
நெல்லையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜூன் 3-ல் “கலைஞர் தமிழ் -100″என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கருத்தரங்க அமைப்பாளருமான கவிஞர் பேரா விடுத்திருக்கும் அறிக்கையாவது, “கடந்த ஆண்டில் தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் “கலைஞர் தமிழ் ” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடத்தப்பட்டு ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது. 2023-ஆம் ஆண்டில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூறாவது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக அவரது தமிழ் படைப்புகளை பாரெங்கும் பரப்பும் நோக்கில், கலைஞரின் படைப்புகளின் ஆய்வுநோக்கில் “கலைஞர் தமிழ்-100″என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் நடத்த பொதிகைத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக கலைஞரின் தமிழ் படைப்புகளின் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது. கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகிறது. கலைஞரின் ஆட்சித் தமிழ், கலைஞரின் இலக்கியத் தமிழ், கலைஞரின் நிர்வாகத் தமிழ், கலைஞரின் இதழியல் தமிழ், கலைஞரின் மேடைத் தமிழ், கலைஞரின் திரைத் தமிழ், கலைஞரின் அரசியல் தமிழ் என்ற ஏழு தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர் என யாவரும் ஆய்வு கட்டுரையை வழங்கலாம். கட்டுரைகளை ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் பிழையின்றி தட்டச்சு செய்து யூனிட்கோட் எழுத்துருவில் கட்டுரைகளை kalaignartamizh100@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரைகள் வருகிற ஏப்ரல் 30-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். கட்டுரைகள் வேர்டு டாக்குமெண்டாக மட்டுமே அனுப்ப வேண்டும். கட்டுரைகளில் ஏதேனும் ஒரு பகுதியை நீக்கவோ அல்லது கட்டுரையினையே நீக்குவதற்கோ கருத்தரங்க அமைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் ISBN எண்ணுடன் நூலாக்கம் செய்யப்பட்டு கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும். கவியரங்கத்திற்கு “கலைஞர் தமிழ்- 100″ என்கின்ற தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் யூனிகோட் எழுத்துருவில் கவிதைகளை மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். கருத்தரங்க கட்டுரைக்கான கட்டணமாக பேராசிரியர்கள் ரூபாய் 700, ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ரூபாய் 500, தமிழ் ஆர்வலர்கள் ரூபாய் 500 செலுத்த வேண்டும். கவியரங்கத்திற்கு கவிதை அனுப்புவோர் கட்டணமாக ரூபாய் 300 செலுத்த வேண்டும். கட்டணத்தை 890 39 26 173 என்ற கூகுள் பே எண்ணில் செலுத்தலாம். கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம் ஜூன் 3ஆம் நாள் அன்று சிறப்பு அழைப்பாளர்களின் தலைமையில் திருநெல்வேலியில் நடைபெறும். கருத்தரங்கம் மற்றும் கவியரங்கில் நேரடியாக கலந்து கொள்கின்ற கட்டுரையாளர்களுக்கு அவர்கள் பெயர் அச்சிடப்பட்ட சான்றிதழும், ஆய்வுக் கோவையும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படும். இந்த சிறப்புமிகு கருத்தரங்கம் மற்றும் கவியரங்க நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ் இலக்கிய படைப்புகளை பாரெங்கும் பரப்புகின்ற இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும் என பன்னாட்டுத் தமிழ் அன்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!