தமிழகம்

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

244views
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் காணாமல் போனது. தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தான்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்பொழுதிலிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் இந்தப் பகுதியிலேயே நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காளைகளின் உரிமையாளர்கள் பாலமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் பாலமேடு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையோரமாக வீட்டில் கட்டியிருக்கும் காளைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கட்டி இருக்கும் கயிறை அறுத்து காளைகளை பிடித்து சென்றுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இந்தப் பகுதியில் சென்றுள்ளதாகவும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
இதே வாகனம் சில தினங்களுக்கு முன்னால் சேலம் மாவட்ட பகுதியில் இரவில் காளைகளை பிடித்து வாகனத்தில் ஏற்றும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருடப்பட்ட சம்பவம் காளை வளர்ப்பவர்கள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!