தமிழகம்

நீதி அமைப்புகள் தவறுகளுக்கு அப்பாற்பட்டதல்ல! – சு.வெங்கடேசன், எம்.பி.,

140views
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இரண்டு நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவையில் நீதிபதிகளின் நியமனம் சார்ந்த கேள்விகளுக்கு இந்தியாவின் சட்ட அமைச்சர் நீண்ட பதிலளித்தார். அது வெறும் பதி லல்ல, நீதித்துறையின் மீதான கடும் தாக்குதல். இந்திய நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன. உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கான 30 சதவீத மான இடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கெல்லாம் நீதித்துறை தான் காரணம் என்று வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
என்ன தகுதி இருக்கிறது?
இதெல்லாம் சரியா, தவறா என்பதை பற்றி ஆராய்வ தற்கு முன்பு, அதை பேசுவதற்கு இன்றைய ஆளுங் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்பது தான் முதல் கேள்வி. நீதித்துறையின் கட்டமைப்புகளை எவ்வளவு சீரழிக்க முடியுமோ, அனைத்தையும் செய்து கொண்டி ருப்பவர்கள் நீங்கள். உங்களது முக்கியமான அமைச்சர் ஒருவருக்கு எதிராக தீர்ப்பு எழுதினார் என்ப தற்காகவே ஒருவரை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆக்க விடாமல் பார்த்துக் கொண்டவர்கள் நீங்கள். உங்களுக்குச் சாதகமாக ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக, அவரை கவர்னர் ஆக்கி அழகுபார்த்தவர்கள் நீங்கள். உங்களுக்குச் சாதகமாக வழிபாட்டுத்தல வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காகவே, அவ்வளவு மாசு படிந்த ஒரு உருவத்தை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்த வர்கள் நீங்கள் என்பதை இந்த நாடறியும்.
நீதிபதியின் கூற்றும் நிலைக்குழுவின் முக்கியத்துவமும்
நாடாளுமன்றத்திற்குள்ளே நடப்பதை எல்லாம் பார்க்கும் பொழுது 130 கோடி மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற உயரிய பொறுப்புணர்ச்சியோடு ஒன்றிய அரசு இல்லை என்பது வெளிப்படையாக தெரி யும். “நீங்கள் முழுமையாகவும் முறையாகவும் விவா தத்தை நடத்தாமல் சட்டத்தை நிறைவேற்றுகிறீர்கள். அதனால் நீதிமன்றங்கள் படும்பாட்டை பாருங்கள்” என்று உச்சநீதிமேன்ற தலைமை நீதிபதியாக இருந்தவரே கூறினார். 15 ஆவது மக்களவையில் நிறைவேறப்பட்ட மசோ தாக்களில் 70 சதவீதமான மசோதாக்கள் நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையாக விவாதிக்கப் பட்டு அதற்குப் பிறகுதான் சட்டங்களாக மாறி அவை யிலே நிறைவேறியது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 16ஆவது மக்களவையில் 23 சதவீத மசோதாக் கள் மட்டுமே நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டன. இப்பொழுது 17ஆவது மக்களவையில் 17 சதவீதம் மட்டுமே நிலை குழுவுக்கு அனுப்பப்பட்டது. ஒரு மசோதாவை 130 கோடி பேருக்கும் பொருந்துகிற ஒரு சட்டத்தை ஒரு மக்களவையிலோ, மாநிலங்கள வையிலோ நான்கு மணி நேரம் விவாதிக்க முடி யாது. எனவே கூடுதல் நேரம் கொடுத்து அதில் இருக்கின்ற அனைத்தையும் பற்றி விவாதிக்கத் தான் நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். நிலைக்குழு அந்த மசோதாக்களை பல நாட்கள் விவாதிக்கலாம். அதில் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. அதிலெல்லாம் விவாதித்து பின்பு நாடாளு மன்றத்திற்கு வரும்பொழுது தான், அது இன்னும் செழுமை அடையும். இன்னும் கூர்மை அடையும் என்ப தற்காக தான் அப்படி ஒரு முறையை உருவாக்கி னார்கள். ஆனால் இங்கே விவாதமே கிடையாது.
இந்த குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள் பிரதமர் பேசுகிறார். “இந்த கூட்டத்தொடரில் அனைத்து விதமான விவாதங்களும் நடைபெற வேண்டும். விவா தங்களுக்குப் பின்பு தான் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்கிறார். ஆனால் அவர் ஒரு விவாதத்தைக் கூட அவையில் அமர்ந்து கேட்டது கிடையாது. ஒரு மாநில தேர்தலு க்கு 30 மணி நேரம் செலவழிக்கும் பிரதமர் ஒரு கூட்டத் தொடருக்கு மூன்று மணி நேரங்கூட செலவழிக்க மாட்டார். அவருக்கு மற்றவர்கள் சொல்வதை கேட்க காதுகள் கிடையாது. அதே போல மற்றவர்களுக்கு வாய்களும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார். விவாதத்தின் மீதும், ஜனநாயக மரபின் மீதும் இந்த அரசுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே இது.
மசோதாவின் நகலை கொடுக்காமலே…
ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கு அந்த மசோதா வின் நகலை குறைந்தது ஏழு நாட்களுக்கு முன் வழங்க வேண்டும். ஆனால் கொடுக்கப்படுவதில்லை. ஏழு மணி நேரத்திற்கு முன்னும் கொடுக்கவில்லை. காஷ்மீருக்கு அதிகாரத்தை பறிக்கின்ற சட்டத்தை மாநிலங்களவையில் அமைச்சர் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். உறுப்பினர்கள் யார் கையிலும் இந்த மசோதாவின் நகல் இல்லை. இந்த அவையில் என்ன நடக்கிறது? எங்கள் கையில் அந்த நகலை கொடுங்கள்! என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதறிக்கொண்டிருந்தார்கள். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மசோதாவின் நகலில், கல்வித் தகுதி பற்றிய குறிப்பில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் அதே மசோதாவின் இந்தி மொழியில் அதனு டைய தகுதியாக இளங்கலைப் பட்டம் என்று குறிப் பிட்டிருக்கிறது. இப்படி ஒரு மசோதா நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டும் விட்டது.
வழக்காடு மொழி
வழக்கறிஞர் சங்கத்தின் தமிழக பிரிவின் முன்னு ரிமை பிரச்சனையாக “வழக்காடு மொழியாக தமிழ்” என்பதை நடைமுறைப் படுத்துவதில் இருக்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழி யாக தமிழ் இருக்க வேண்டும் என்று தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்று வரை குடியர சுத் தலைவரின் அனுமதி இன்றி கிடப்பில் கிடக்கி றது. அதற்கு அனுமதி மறுப்பதற்கான காரணம் என்ன? இந்திய வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற தீர்ப்புகள் முதன்முதலில் 1870இல் மொழிபெயர்க்கப்பட்ட மொழி தமிழ்! வேதநாயகம் பிள்ளை சென்னை உயர்நீதி மன்றத்தின் அனைத்து தீர்ப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்தார். இந்தியாவின் முதல் சட்ட அகராதி உருவாக்கப்பட்டது தமிழில்தான்.
நீதிமன்றங்களில் எதிரொலிக்கும் குரல்கள் உழைக்கும் மக்களின் காதுகளில் கேட்க முடியாமல் எது தடுப்புச் சுவராக இருக்கிறதோ, அதை எல்லாம் சரி செய்வது, நீதித்துறையின் கடமை. வழக்காடு மொழி யாக தமிழ் மாற்றப்பட வேண்டும் என்பதற்காக உறுதி யான போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கிளைகள், தென் மாநிலங்க ளில் உருவாக்க வேண்டும். முதன்முதலில் மெக்காலே குற்றவியல் சட்டத்தை இந்த மாநாடு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் இருக்கும் ஊட்டியில் தான் எழுதினார். மெக்காலே வின் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. காலனியவாதிகளின் நோக்கம் வெளிப்படையானது தான். ஆனால், மெக்காலே இந்திய குற்றவியல் சட்டத்தை எழுதும் வரை ஆங்கிலேயருக்கும், இந்திய ருக்கும் வழக்கு இருந்தால், அது அன்றைய தலைமை யிடமான கல்கத்தாவில் தான் நடைபெற வேண்டும் என்ற சட்டம் இருந்தது. குற்றவியல் சட்டம் உருவாக் கப்பட்டதற்குப் பிறகு தான் எல்லா நீதிமன்றங்களிலும் ஆங்கிலேயருக்கு எதிராக வழக்கு நடத்த முடிந்தது. அன்றைய சூழலிலேயே ஒற்றை மையத்தை மெக்கா லேவே தகர்த்து விட்டார். ஆனால் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு ஒற்றை மையம் தான் இருக்க வேண்டும் என்று சொல்வதை தவிர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
90 சதவீதம் நீதிபதிகள் யார்?
இன்றைக்கும் முற்பட்ட சமூகத்தில் இருந்து மட்டுமே 90 சதவிகிதம் நீதிபதிகள் வருகிறார்கள், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தி லிருந்து ஏன் பத்து சதவீதத்தை தாண்டவில்லை, நீதிக்கோ நீதிசார்ந்த அறிவுக்கோ சாதி தகுதியாக அமையக்கூடியதா? இந்தப் பிரச்சனையை களைய வேண்டியது ஜனநாயகத்துக்கு அடிப்படையல்லவா? பொருளாதார ரீதியான நலிந்த பிரிவினர் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். பலன் அடைகின்ற சமூகத்தை பின்னணியாகக் கொண்ட 5 பேர் இந்த வழக்கை விசா ரிக்கலாமா? அமர்விலே இருக்கிற ஐந்து நீதிபதிகளும் பலனடைகின்ற சமூகத்தை பின்னணியாக கொண்ட வர்கள். பாதிப்புக்குள்ளாகும் சமூகத்தை பின்னணியா கக் கொண்ட பகுதியில் இருந்து ஒரு நீதிபதி கூட இல்லை என்று கேள்வி எழுப்பினார். இது சாதியின் குரல் அல்ல, ஒட்டுமொத்தமான அரசியல் சாசனம் எந்த சமத்துவத்தை பேசுகிறதோ, அதற்கான குரல். ஏன் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின ருக்கான வழக்கு விரைவில் எடுக்கப்படுகிறது? சிஏஏ வழக்கு, காஷ்மீரின் உரிமை பறிக்கப்பட்ட வழக்கு இன்னும் ஏன் விசாரணைக்கு எடுக்கப்படவில்லை?
நீதியின் மரணம் போல
2014 லிருந்து 2020 வரை “உபா” (UAPA) வின் கீழ் ஏழு ஆண்டுகளில் 690 வழக்குகள் பதிவு ஆகி யுள்ளது. 10552 பேர் கைது ஆகியுள்ளார்கள். அரசியல், சமூக, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், எழுத்தா ளர்கள், வழக்கறிஞர்கள் அவர்களில் அடக்கம். இந்திய குற்றவியல் சட்டத்தின் 124 A இன் படி தேசத் துரோக குற்றச்சாட்டுக்களின்படி 450 வழக்குகள் இந்த எட்டு ஆண்டுகளில் பதிவாகியுள்ளன. பீமா கொரேகான் வழக்கு ஆட்சியாளர்களின் அராஜகத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் பாஸ்ட னைத் தலைமையகமாகக் கொண்டு, ‘ஆர்சினல் கன்சல்டிங்’ என்னும் பெயரில் உள்ள டிஜிட்டல் தடய அறிவியல் ஆய்வகம், வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, 2017க்கும் 2019க்கும் இடையிலான ஆண்டுகளில் பாதிரி யார் ஸ்டான் சுவாமியின் கணினியில் அவரைத் “தேச விரோதி” எனக் காட்டுவதற்கான சாட்சியமாக பொய் யான ஆவணங்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறியிருக்கி றது. பாதிரியார் ஸ்டான் 2014இ லிருந்து கண்காணிக் கப்பட்டு வந்திருக்கிறார். மிகக் கொடூரமான முறை யில் அவர் சிறையில் நடத்தப்பட்டார். நீதியின் மரணம் போல அவரின் மரணம் நிகழ்ந்தது.
எமர்ஜென்சியின் போது அரசியல் சாசனப் பிரிவு 21 இன் கீழ் உள்ள உயிர் வாழும் உரிமை கூட நடப்பில் இல்லை. உச்ச நீதிமன்ற அமர்வு 4 : 1 என்ற முறையில் தீர்ப்பு அளித்தது. அந்த நான்கு பேர் வர லாற்றில் நிலைக்கவில்லை. ஆனால் அந்த ஒருவர் எச். ஆர். கண்ணா இன்றும் போற்றப்படுகிறார். அப்படிப் பட்ட நிறைய கண்ணாக்கள், கிருஷ்ணய்யர்கள் தேவைப்படுகிற காலம் இது.
உச்சகட்ட அவலம்
இந்திய நீதி முறைமையின் மீது நம்பிக்கை இழந்து விடவில்லை. ஆனால் நீதி முறைமை தன்னை நிரூபிக்க வேண்டிய இடத்தில் உள்ளது. தேசியம் பேசுகிற ஆட்சியாளர்கள் நீதிமன்ற வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அந்நிய நன்கொ டைகளை அரசியல் கட்சிகள் பெறுவதற்கான சட்டத்தை (Foreign Contribution Regulation Act) 1974 லிருந்து பின் தேதியிட்டு திருத்தியது உச்ச கட்ட அவலம். வருமான வரி, அமலாக்க இயக்குநரகம், சி.பி.ஐ ஆகிய அமைப்புகள் எல்லாம் “எஜமானர் குரல்” ஆக மாற்றப்பட்டுள்ளன. தேர்தல் அணி மாற்றம், கட்சி தாவல், ஆட்சி கவிழ்ப்பு ஆகியவற்றில் எல்லாம் இத்த கைய “சுயேச்சையான” அமைப்புகளின் தயவில், தலையீட்டில் அரங்கேறுகின்றன. பரபரப்பாக பேசப் படும் வருமான வரி சோதனைகள் பின்னர் டீல் படிந்தவுடன் நீர்த்துப் போகின்றன. இங்குதான் வழக்கறிஞர்களின் பணி முக்கியமா கிறது.
ஒரு முறை உச்சநீதிமன்றத்தின் சிறப்பு மலர் இப்படி ஒரு தலைப்புடன் வந்தது. “It is Supreme, but not infallible” “உச்ச பட்ச நீதி அமைப்புதான், ஆனால் தவறு செய்யாது என்பதல்ல”.
இதை நாம் மக்களின் கண்காணிப்புக்குள்ளாக்க வேண்டும். நமது விமர்சனம் பிரச்சனைகளைக் களைந்து அதை திருத்தி முன்னேற்றுவதற்கான விமர்ச னம். இன்றைக்கு மிகப்பெரிய தாக்குதல் இந்திய அரசி யல் சாசனத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டு இருக்கி றது. இந்த தாக்குதலுக்கு எதிராக அரசியல் சாசனத் தின் மேன்மையை, சாரத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது. அதில் முன்னணியின் இருந்து வழி நடத்துபவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும்.
(திருப்பூரில் நடைபெற்ற அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாநில மாநாட்டில் ஆற்றிய துவக்கவுரையின் பகுதிகள்).
செய்தியாளர் :வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!