1.36K
“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால் ஐகத்தினை அழித்திடுவோம் “என்றான் பாரதி, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் “என்கிறது மணிமேகலை. பாரதி இருந்தால் நம் சகோதரன் பொன்னமராவதி பாலசந்தர் அவர்களை கண்டு மகிழ்ந்திருப்பார்.
கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அனைவரும் ஒடுங்கி இருக்க இவரோ பிறர் பசி போக்க அன்போடு உணவை அவர்கள் இருக்கும் இடம் கொண்டு சேர்க்கிறார். இவர் ஒரு பன்முக தன்மை கொண்டவர். மிகச் சிறந்த கவிஞர். எழுத்தாளர். கதாசிரியர். நாடக கலைஞர். அழிந்து போன நாட்டுபுற கலைகளை மீட்டெடுக்க பல நிகழ்வுகளை நடத்திவருகிறார். அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலில் இருந்து ……
-
தங்களின் பெற்றோர்கள் பற்றி கூறுங்கள்?
என்னோட அப்பா சென்ன கேசவலு . தமிழ் ஆசிரியர். நல்லாசிரியர் விருது வாங்கியவர்கள் பள்ளியே தனது வீடாக ,மாணவர்களே தனது குழந்தையாக, எண்ணி கடமை தவறாமல் வேலை பார்த்த பண்பாளர். ஆரம்பத்துல குமரி அனந்தன், கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ சங்கரய்யா இவங்களோட மதுரையில் வேலை பார்த்தாங்க. நான் பொறந்து 13 நாளில் அப்பாவிற்கு வேலை போயிருச்சு. .அதுக்கு பிறகு அரசு வேலைக்கு வந்தாங்க நிறைய ஊர் கிட்டதட்ட 17ஊர் மாற்றம்.
நல்லாசிரியர் விருது இப்போது பலபேர் வாங்கறாங்க. ஆனா அப்பாவிற்கு கிடைச்சது. அம்மா பெயர் ரெங்கநாயகி. சின்னவயது முதலே கலைகள் ஆர்வத்தால் கற்று பிறருக்கு பயன்படுவது போல செயல்பட்டாங்க. .
எனக்கு ஒரு அக்கா ஒரு தங்கை. அக்கா விஜயலக்ஷ்மி ராதாகிருஷ்ணன்.நல்ல ஓவியர்.ஓவியர் ராஜா வின் சிஷ்யை. தங்கை ஷீலா நல்ல டான்ஸர்.தமிழ் ல முனைவர் பட்டம் பெற்றவர்.இப்ப சிங்கப்பூர் ல சிங்கப்பூர் அரசின் பணியில் ( பள்ளி ஆசிரியர்)
-
சமூகத்திற்கு பல அரிய சேவை செய்து வருகிறீர்கள் . எப்போது இந்த தொண்டினை ஆரம்பித்தீர்கள்?
அரிய பெரிய சேவைகள் எல்லாம் இல்லைங்க.என்னால் முடிந்தது செஞ்சுக்கிட்டு இருக்கேன். ஆரம்பம் அப்படினா …..எங்க தாத்தா திருவையாற்றில் இருந்த போதுஅவங்க வீட்டில் எந்த விதமான உடையோ அதே வீட்டில் வேலைப்பார்க்கும் அனைவருக்கும்.. எங்க அப்பா நிறைய பிள்ளைகள் படிக்க பணம் கட்டி இருக்கார்.சாப்பாடு போட்டு இருக்கார். (அப்பெல்லாம் மதிய உணவு கிடையாது)
அப்போது இருந்து மனதில் உதவிசெய்யும் எண்ணம் பதிஞ்சி இருக்கும் என்று நினைக்கிறேன். அறியா பருவத்தில் இருந்தே எங்கள் வீட்டில் நானும் என் சகோதரிகளும் செய்ய ஆரம்பித்தது உள்ளோம்.
-
இந்த சமூக பணியில் தங்கள் மனைவியின் பங்கு?
கல்யாணமாகி சில நாட்களில் நான் இத செய்வேன் அத செய்வேன் அப்படின்னு சொன்னேன். உடனே ஏற இறங்க பார்த்தார். ஆனால் பாருங்க இப்போ வரைக்கும் ஒண்ணும் சொல்ற தில்லை. ஆனால் இப்போது கொரானா காலத்தில் மட்டும் கொஞ்சம் பயம் கொஞ்சம் வருத்தம். அதுக்கு மேல சொன்னா கேட்கவா போறீங்க? என்ற அங்காலாய்ப்புடன் அனுப்பி வைத்தார். இதுவே பெரிய சப்போர்ட் தான்.
-
நீங்கள் வாங்கிய விருதுகள், பாராட்டுகள்?
விருது ன்னா சமூக பணிக்கா? ம் தாயுள்ளம் அறக்கட்டளையின் சிறந்த சேவா ரத்னா விருது,. ரீச் மீடியா வில் இருந்து அப்துல் கலாம் அவர்கள் பெயரில் கலாம்சமூக சேவகர் விருது, சென்ற வருடம் கொரானா காலத்தில் அன்னதானம் வழங்கியமைக்கு பாராட்டு சான்றிதழ், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.
-
தங்களின் கலைப்பணி பற்றி கூறுங்கள்?
எங்க அப்பா சிறந்த பேச்சாளர். இலக்கியவாதி, அரசியல்வாதி நடிகர்
தயாரிப்பாளர் பழ.கருப்பையா அப்பா வின் மாணாக்கர் அவருடைய பேரையே தமிழ் தாசன் ன்னு புனைப்பெயர் வைத்து கொண்டார். நானும் எழுத ஆரம்பித்தேன்.
1980ல் கோடைக்கால போட்டி கல்கி இதழில் அறிவிப்பு வந்துச்சா.நானும் சும்மா ஆசைக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பி வைத்தேன். முதல் பரிசு வெள்ளி நாணயம் காஞ்சி பெரியவர் அவர்கள் திருக் கரத்தினால் கிடைச்சது.அன்னைக்கு பிடிச்ச எழுத்து இப்பவரைக்கும் தொடருது. நிறைய கவிதைகள் கதைகள் கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற உந்துதல் .
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வரும் தேவக்கோட்டை சேவுகன் அண்ணாமலை செட்டியார் கல்லூரியில் இண்டர் காலேஜ் கவிதை போட்டி அதில் முதல் பரிசு நடமாடும் சரஸ்வதி திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களிடம் பெற்றேன்.அவருடன் இன்றும் நட்பு வட்டத்தில் இருப்பது கடவுள் அருளால். பிறகு அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறுகதை போட்டி. அதில் புதுக்கோட்டை மாவட்ட சிறந்த சிறுகதையாக நான் எழுதிய சிறுகதை தெரிவுசெய்யப்பட்டது. .இதை தவிர கவிச்சுடர், கவித்தென்றல் கவிதைகளுக்கு கிடைத்தது.
வானொலியில் நிறைய நாடகங்கள், கவியரங்கம், சிறுவர் பூங்கா நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கிறேன்.அன்பின் அலைகள் எனும் வெரிதாஸ் வானொலியால் நாடக மணி என்ற விருது வழங்கப்பட்டது. வானொலி மன்றங்கள் பல இருந்தது. ஒரு நிகழ்ச்சி நடத்தினார் . அதில் எனக்கு வானொலி வேங்கை என்ற பெயரில் விருது வழங்கினர்.
அறிவொளி இயக்கத்தின் குழுவில் இணைந்து 197 இடங்களில் வீதி நாடகங்கள். .அதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆட்சியராக இருந்த ஷீலா ராணி சுங்கத் அவர்கள் அறிவொளி கலைஞர் என்ற சான்றிதழ் வழங்கினார்.
கலைப் பணி என்றால்…திருச்சி வானொலியில் 27 நாடகங்கள்
சூரியகாந்தி நிகழ்ச்சியில் 3 நாடகங்கள், ஆசிய சேவை அன்பின் அலைகள் வானொலியில் 63 மேடை நாடகங்கள் 33, வீதி நாடகங்கள் 197 இடங்களில் தெருக்கூத்து நாடகம் 1
சென்ற வருடம் கொரானா காலத்தில் தெருக்கூத்து கலைஞர்களை வைத்து காவல் துறையினர் ஆதரவுடன் மண்ணச்ச நல்லூரில் பல்வேறு இடங்களில் தெருக்கூத்து நடத்தியது தந்தி தொலைக்காட்சி யில் மண்ணச்சநல்லூர் காவல் துறை சார்பில் கொரானா விழிப்புணர்வு என்று ஒளிபரப்பப்பட்டது.
மலேஷியா வில் உள்ள வணக்கம் மலேசியா தொலைக்காட்சி யில் பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகள் வழங்கி இருக்கிறேன்.
திருச்சி தமிழ்ச் சங்கம் சார்பில் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய சொற்பொழிவுகள்.
நிறைய பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் நிறையவே நிகழ்ச்சிகள் வழங்கி உள்ளேன்.
-
தங்களின் கல்விபணிகள் மற்றும் வகித்த பதவிகள் பற்றி கூறுங்களேன்?
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமபல்கலைகழகத்தில் நடைபெற்ற உலக தமிழ்க்குழந்தைஎழுத்தாளர் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு இருக்கிறேன்.
1999 ல் பொன்னமராவதி ரோட்டரி கிளப், 2018 ல் மண்ணச்ச நல்லூர் ரைஸ் சிட்டி லயன்ஸ் கிளப், மெம்பர்ஸ்ஷிப் சேர்மென், பப்ளிக் ரிலேஷன் ஆபீஸர்,
சர்வீஸ் சேர்பெர்ஸன், வகித்த பதவிகள் பொன்னமராவதி பாரதியார் கலை மன்றம், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கிளை செயலர்,
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட இணைச் செயலர், அனைத்துலக தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
*இதழ்கள்* பத்திரிகை யில் என்றால் 1984ல கையெழுத்து பிரதி ஏடு பூந்தென்றல் என்று நடத்தினேன்.நிறைய எழுத்தாளர் உருவாக்க எண்ணினேன்.
அங்கு இருந்து வெளிவந்த பல்வேறு நிறைய நபர்கள் கோலோச்சி கொண்டு இருக்கிறார்கள்.
பின்னர் *மண்ணைடைம்ஸ்* என்ற வார இதழ் ஆசிரியராக இருந்தேன்.
குமுதம், விகடன், குங்குமம், கல்கி என பல்வேறு பத்திரிகைகளிலும் படைப்புகளை தந்து உள்ளேன்.
1989 ல் கல்லூரியில் நான் எழுதிய சிறுகதை படைப்பிலக்கியம் பாடத்திட்டத்தில் அந்த கல்லூரி வைத்து இருந்தார்கள். . ஆன்மீக கட்டுரைகள் ஜோதிட சாஸ்திரம் கட்டுரைகள் எழுதி உள்ளேன். *வெற்றி திலகம்* மாத இதழுக்கு சிறப்பாசிரியர்.
-
தங்களின் கல்வி தகுதிகள் பற்றி கூறுங்கள்?
படிப்பு B.COM. ,M.A.(HINDI) M.A.,(TAMIL) M.A.,( VAISHNAVAM.)., M.SC.,(YOGA) M.PHIL(KOVIL KALAI)
முனைவர் பட்டம் (ராகு கேது சுழற்சி) D.A
-
தங்களின் குழந்தைகள் பற்றி ..
பையன் B.ஸ்ரீ.B.E(civil) நல்ல கிரியேட்டிவ் மைண்ட்.பைக்லவ்வர். என்னோட சேர்ந்து சமூக பணி செஞ்சுக்கிட்டு இருக்கான்.
பொண்ணு B. ஸ்ரீமஹி IX std. நல்ல டான்சர் நிறைய புரோகிராம் பண்ணியிருக்கா.
ஓவியம் வரைந்து நிறையவே பரிசு வாங்கி இருக்கிறாள்!
-
உமா அபர்ணா
add a comment